என்ன நடக்கிறது வடபழனி முருகன் கோவிலில் ? அதிகாலை தரிசனத்திற்கு பணமா ? கொந்தளிக்கும் பக்தர்கள்
என்ன நடக்கிறது வடபழனி முருகன் கோவிலில் ? அதிகாலை தரிசனத்திற்கு பணமா ? கொந்தளிக்கும் பக்தர்கள்

சென்னை வடபழனி கோவிலில் திருமுருகப்பெருமானுக்கு அதிகாலைப் பொழுதில் திருப்பள்ளி பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த பூஜையில் கலந்து கொள்ள பக்தி பரவசத்துடன் அதிகாலையிலேயே வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் அதிகாலைப் பொழுதில் ஆண்டவனை தரிசிக்க வரும் பக்தர்கள் ரூ.20 கட்டணம் செலுத்தினால்தான் தரிசனம் செய்ய முடியும் என அறிவித்து பக்தர்களிடம் வசூல் செய்ய கோவில் நிர்வாக அதிகாரி சித்ரா தேவி புதிதாக உத்தரவிட்டுள்ளார்.
கோவில் அதிகாரியின் இந்த உத்தரவுக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில், தென்சென்னை பாஜகவினரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிகாலைப் பொழுதில் ஆண்டவனை தரிசிக்க வரும் பொழுது கட்டணம் வசூலிப்பது முற்றிலும் தவறானது என்றும், இதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும், இல்லை என்றால் தென் சென்னை மாவட்ட தொண்டர்களையும், பக்தர்களையும் கூட்டி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆண்டவன் முன் அனைவரும் சமம், கட்டண தரிசனம் கூடாது என வலியுறுத்திய பாஜகவினர், கோவில் அதிகாரியின் நடவடிக்கை பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் செயல் என்றும் கூறியுள்ளனர்.
உடனடியாக இந்தக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பாக மாண்புமிகு அமைச்சர், ஆணையர், அதிகாரிகள், திருக்கோவில் அறங்காவலர் ஆகியோருக்கு பாஜக தென் மாவட்டம் சார்பாக புகார் மனு அளிக்கவுள்ளதாக தென் சென்னை மாவட்ட தலைவர் சைதை சந்துரு, மாவட்ட செயலாளர் உமாசங்கர், வடபழனி மண்டல் தலைவர் அசோக் குமார் ஆகியோர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.