கொரோனா சமயத்தில் தாயாரிப்பாளர்களுக்கு துணை நிற்பார்களா பைனான்சியர்கள்? கலக்கத்தில் கோலிவுட்!
கொரோனா சமயத்தில் தாயாரிப்பாளர்களுக்கு துணை நிற்பார்களா பைனான்சியர்கள்? கலக்கத்தில் கோலிவுட்!

கொரானா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அது மக்களை பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதனை நன்கு புரிந்துக் கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் மாதாந்திர கடனை மூன்று மாதம் கழித்து செலுத்தலாம், மின்சார கட்டணத்தை தள்ளி செலுத்தலாம் என பல சலுகைகளை அன்றாடம் அறிவித்து வருகிறது. படப்பிடிப்புகள் எதுவுமே நடக்காத காரணத்தால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு பொருளாதார உதவி கோரப்பட்டு அவர்களுக்கும் திரையுலக பிரபலங்கள் பெரும் அளவில் உதவி வருகின்றனர்.
ஆனால் திரைப்பட துறைக்கு முதுகெலும்பாய் இருக்கும் தயாரிப்பாளர் நிலை தான் மிகவும் பரிதாபத்திற்குறியது. இன்றைய காலகட்டத்தில் படம் தயாரிக்கும் 99 சதவீத தயாரிப்பாளர்கள் கடன் வாங்கியே படம் எடுக்கிறார்கள். படம் தயாரிக்க எந்த வங்கியும் கடன் வழங்குவதில்லை. இதனால் இவர்கள் ஃபினான்சியர்களிடம் தான் கடன் வாங்க வேண்டியுள்ளது. இதன் வட்டிவிகிதம் 24% முதல் 48% என்று கூறப்படுகிறது. எந்த நடிகர்களும் 50% கீழ் முன் பணம் வாங்காமல் படம் ஒப்பு கொள்ள மாட்டார்கள் என்பதால், தயாரிப்பாளர்கள் இந்த முன் பணத்திலிருந்தே கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எனவே இவர்கள் பணம் வாங்கிய நாளிலிருந்து படத்தை வியாபாரம் செய்து அசலை திரும்ப தரும் வரையில் மாதா மாதம் பெரும் பணத்தை வட்டியாக தர வேண்டியுள்ளது.
இதனாலேயே சமீக காலமாக பெரிய படங்கள் வெளியீட்டு தேதி என்ன என்பதை முடிவு செய்து விட்டே படப்பிடிப்பை திட்டமிட்டு முன் பணம், படப்பிடிப்பு என திட்டமிட்டு தவனை முறையில் கடன் வாங்கி வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா அச்சுறத்தலால் காலவரையின்றி படப்பிடிப்புகள் நிறுத்து வைக்கப்பட்டுள்ளதால் கலக்கத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஒரு பக்கம் நடிகர்களின் தேதிகள் மீண்டும் வாங்குவதில் இருக்கும் சிக்கல் மற்றொரு பக்கம், திட்டமிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து வெளியிட முடியுமா? அப்படி பட வெளியீடு தள்ளி போனால் அது வரை வட்டி கட்ட வேண்டுமே என்ற கலக்கம். ஆனால் இந்த சூழ்நிலையை புரிந்து கொண்ட ஃபைனான்சியர்கள் தாங்களும் இந்த நெருக்கடி நிலையில் தயாரிபாளர்களுக்கு உறுதுனையாக நிற்பதாக கூறியிருக்கிறார்களாம்.
தாங்கள் எந்த வகையில் தயாரிப்பாளர்களுக்கு உதவ போகிறோம் என்பதை தங்கள் சங்கத்து உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து விட்டு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்களாம். இதே போன்று நடிகர்களும், தற்போது நடித்து வரும் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து முடித்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.