'ஹீரோ' படத்தை ஒளிபரப்ப தடை, OTTயிலிருந்தும் நீக்கம்?
'ஹீரோ' படத்தை ஒளிபரப்ப தடை, OTTயிலிருந்தும் நீக்கம்?

KJR ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு உருவான திரைப்படம் 'ஹீரோ'. படத்தின் டிரைலர் வெளியானதும் போஸ்கோ பிரபு என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தன்னுடைய கதையைத் திருடி 'ஹீரோ' படம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புகாரளித்தார். அந்த சங்கத்தின் தலைவரான இயக்குநர் பாக்யராஜும் இரண்டு கதையும் ஒன்று தான் எனவும், போஸ்கோவுக்கு கதைக்கான அங்கிகாரத்தைப் படத்தின் டைட்டில் கார்டில் தரவேண்டும் எனவும் உறிய இழப்பீடு தர வேண்டும் எனவும் கூறினார்.
இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பை நடத்திய மித்ரன், 'ஹீரோ' திரைப்படத்தின் கதையை பொன்குமார் உட்பட மூன்று பேரை வைத்து அதன் திரைக்கதை எழுதப்பட்டதாகவும், எழுத்தாளர் சங்கத்தில் தனது கதை படிக்காமலேயே ஒருதலைபட்சமாக போஸ்கோவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் கூறி படத்தை வெளியிடவும் செய்தார்.
இதனைத் தொடர்ந்து சங்கத்தின் வழிகாட்டுதலின் படி போஸ்கோ நீதிமன்றத்தை நாடினார். படம் வெளியாகிப் பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்தில் போஸ்கோவின் கதை தான் 'ஹீரோ' படத்தின் கதை எனவும் அவருக்குத் தக்க நிவாரணம் வழங்கும் வறை படத்தினை தொலைக்காட்சி உட்பட மற்றவற்றில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.
இதனால் 'ஹீரோ' படத்தை ஒளிபரப்ப இருந்த சன் தொலைக்காட்சி, ஒளிபரப்பை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைமில் வெளியான படத்தையும் தற்போது அந்நிறுவனம் நீக்கியுள்ளது. தொலைக்காட்சி உரிமையை 21 கோடிக்கும், OTT உரிமையை சுமார் 10 கோடிக்கும் விற்றுள்ள தயாரிப்பாளர் தற்போது நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.