Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு போட்டோ எடுக்க 8 மணி நேரம் ஒளியை பாய்ச்சினார்களாம்! கேமரா அன்றும் இன்றும்!

ஒரு போட்டோ எடுக்க 8 மணி நேரம் ஒளியை பாய்ச்சினார்களாம்! கேமரா அன்றும் இன்றும்!

ஒரு போட்டோ எடுக்க 8 மணி நேரம் ஒளியை பாய்ச்சினார்களாம்!  கேமரா அன்றும் இன்றும்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 April 2020 2:24 AM GMT

மகிழ்ச்சியான தருணங்கள், வரலாற்று தருணங்கள், மேலும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் புழக்கத்தில் உள்ள வார்த்தை "ஸ்வீட் மெம்மரீஸ்" (sweet memories) இதற்கு உயிர் கொடுப்பது என பல முக்கியத்துவத்தை தன்னகத்தே கொண்ட தலைசிறந்த கண்டுபிடிப்பு காமரா. தலைமுறைகளை தாண்டி சரித்திரத்தை வாழவைப்பவை புகைப்படக்கலை. அந்த புகைப்படக்கலையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கருவி காமரா. இன்று டிஜிட்டல் காமராவாக, நம் அலைப்பேசிகளின் பல செளரியங்களில் முக்கிய அம்சமாக, அபரிதமான வளர்ச்சியால் கண்ணுக்கு தெரியாத இடத்தில் எல்லாம் கூட இன்று காமராக்கள் இருக்கின்றன. அந்த காமராவின் கண்டுபிடிப்பு வரலாறு இதோ.....

16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் காட்சிகளை கண்ணாடிகளிலும், காகிதத்திலும் பிரதிபலிக்க செய்ய மட்டுமே கண்டுபிடித்திருந்தார்கள். பிரதிபலிக்கும் காட்சியினை புகைப்படமாக அச்சிடசெய்யும் விஞ்ஞானத்தை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் பிடித்துள்ளது. அல்ஹாசென் (Alhazen) என்பவர் கிபி 1000 ஆம் ஆண்டு வாழ்ந்தவர். இவர் "ஒளி" குறித்த ஆராய்சிகளில் மேதையாக திகழ்ந்தவர். இவர் கண்டுபிடித்த முதல் காமரா கருவி தான் இன்று இருக்கும் அதிநவீன காமராக்களுக்கெல்லாம் பாட்டன். அதை "காமரா அப்ஸ்குரா" (camera obscura) என்றழைக்கிறார்கள். அந்த கருவி மூலம் கவரப்படும் காட்சிகள் தலைகீழாக பிரதிபலிக்கும்.

புகைப்பட கலை வளர்வதற்க்கு முன்பாக, காமராவால் படம்பிடிக்கப்படும் காட்சிகளை அச்சிடவோ, பத்திரப்படுத்தி வைக்கவோ வழியிருக்கவில்லை. அதை யாராவது கைகளால் வரைந்தால் மட்டுமே உண்டு. ஆரம்ப காலத்தில் இருந்த காமரா ஓர் அறையை அடைத்து கொண்டிருக்கும், அதனோடு ஒருவர் அல்லது இருவர் அந்த அறையில் நிற்கலாம். ஆனால் கால சுழற்சியில், பல மேதைகளின் கடும் உழைப்பில் காமரக்கள் சுருங்க ஆரம்பித்தன.

அதற்கு அடித்தளம் இட்ட மற்றொரு மேதை, ஜோஷப் நைஸ்போர். இவர் தான் முதன் முதலில் காட்சிகளை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல். அதை கவர்ந்து பத்திரப்படுத்தும் முறையை கண்டறிந்தவர். ஓர் காகிதத்தில் இரசாயனத்தை பூசி அதன் மீது காட்சிகளை பிரதிபலிக்கசெய்தார். அதன் மூலம் அந்த காட்சி, அக்காகிதத்தில் நிலைத்து நிற்குமாறு செய்தார். ஓர் காட்சியை புகைப்படம் எடுக்க, ஜோஷப் எத்தனை மணி நேரம் ஒளியை பாய்சினார் தெரியுமா? எட்டு மணிநேரம். இன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ஓர் புகைப்படத்தை எடுத்துவிடும் நம்மால் இந்த விடாமுயற்சியை கண்டு வியக்காமல் இருக்க முடிவதில்லை. இந்த பிரமிக்கதக்க கண்டுபிடிப்பில் அவருக்கு ஏற்பட்ட தடை என்னவென்றால், காகிதத்தில் நிலைக்கும் காட்சி சொற்ப நேரம் மட்டுமே இருக்கும். நிரந்திரமாக இருக்காது. என்ன தான் குறுகிய காலம் இருக்ககூடியதாக இருந்தாலும், புகைப்பட கலையை முதன் முதலில் உலகிற்க்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இதை அடிப்படையாக கொண்டே அதன்பின்னான கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. நிலைத்து நிற்கும் புகைப்படங்கள் பிறந்தன.

காமராவால் கவரப்படும் காட்சிகளை நிரந்தரமாக நிலைக்கச்செய்ய வேண்டியது தான், புகைப்படகலையின் முக்கிய சவாலாக இருந்தது. அதை நோக்கியே பல ஆராய்சியாளர்கள் தங்கள் வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர், டாகியுரே (Daguerre) இவர் ஜோசப் அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சியை தொடர்ந்தார். இதற்கு முன்பு வரை காமராவால் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை நிரந்தரமானதாக வைத்து கொள்ள மனிதர்கள் வரைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த இரு ஆராய்சியாளர்களின் உழைப்பாலும், முனைப்பாலும் காட்சிகளை "ஒளி" வரையத்துவங்கியது. அந்த தருணம் தான் நிரந்தர புகைப்படக்கலை பிறந்தது. இது சாமான்யத்தில் கிடைத்த வெற்றியல்ல. பல ஆண்டு கடும் போராட்டத்திற்க்கு பின்னும், ஜோசப் அவர்களின் மரணத்திற்க்கும் பின்னும் நிகழ்ந்த வெற்றி சரித்திரம். இந்த முறை புகைப்படத்திற்க்கு "டாகியுரே டைப்" என்று பெயர்.

1839 ஆம் ஆண்டு டாகியுரே மற்றும் ஜோசப் அவர்களின் மகன்கள், இந்த காமராவிற்க்கான உரிமத்தை பிரஞ்ச் அரசிற்க்கு விற்றார்கள். அத்தோடு இந்த கருவியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற இணைப்பும் கொடுக்கப்பட்டது. "டாகியுரேடைப்" புகைப்படம் வெகு சீக்கிரத்தில் பிரபலமடையத்துவங்கியது. 1850 களில் நியுயார்க் நகரத்தில் கிட்டதட்ட 70 "டாகியுரேடைப்" ஸ்டுடியோக்கள் இருந்தன.

"போடோகிராபி" (photography) என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர் ஜான்.எப்.டபில்யூ.ஹெர்ஸ்கெல். இந்த வார்த்தை க்ரீக் மொழியிலிருந்து வந்தது. "போட்டோ" என்றால் "ஒளி", "கிராப்பி" என்றால் வரைவது. இந்த இரண்டு வார்த்தைகளையும் கோர்த்தே "போட்டோகிராப்பி" உருவானது.

அதன் பின் உருவானது தான் "நெகடிவ்" களிலிருந்து அச்சிடும் முறை. ஒன்றுக்கு மேற்ப்பட்ட அச்சுக்களை உருவாக்க முடிந்ததே இந்த முறையின் தனிச்சிறப்பு. எதிர்மறையிலிருந்து நேர்மறைக்கு மாறும் எதுவும் வெற்றிகளை பெறும். உச்சம் தொடும் என்பதற்கு தக்க உதாரணம் இந்த முறை புகைப்படங்கள். இந்த முறை புகைப்படத்திற்க்கு "காலோடைப்"(calotype) என்று பெயர்.

"அழகான புகைப்படங்கள், எதிர்மறையிலும் இருட்டறையிலுமே உருவாக்கப்படுகின்றன. அதேபோல், வாழ்வில் எதிர்படும் எதிர்மறையான சூழ்நிலைகளும், இருள் சூழ்ந்த நிமிடங்களும் நம்பிக்கையுடன் கையாளப்படும் பொழுது அழகான புகைப்படங்களாக மாறுகின்றன." என்று காமராக்களை ஒட்டி சொல்லப்படும் இந்த புகழ்பெற்ற வாசகம் எத்தனை உண்மையானது என்பதை காமராவின் சரித்திரம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

Next Story