Kathir News
Begin typing your search above and press return to search.

கூகுளில் வேலைக்கு தேர்வானது எப்படி? சுந்தர் பிச்சை சொன்ன சீக்ரெட்

கூகுளில் வேலைக்கு தேர்வானது எப்படி? சுந்தர் பிச்சை சொன்ன சீக்ரெட்

கூகுளில் வேலைக்கு தேர்வானது எப்படி? சுந்தர் பிச்சை சொன்ன சீக்ரெட்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Feb 2020 7:20 AM IST

இணைய உலகை ஆண்டு கொண்டிருக்கும் ஜாம்பவானான கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகிக்கும் திரு. சுந்தர் பிச்சை அவர்கள்.

இவர் இந்தியாவை சேர்ந்தவர், குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர் என்ற பூகோளம் சார்ந்த நெருக்கத்திற்க்கு அப்பால் உலகின் தொழில்நுட்பத்துறையில் கோலோச்சும் நிறுவனத்தின் உயர்பதவியில் இருக்கிறோம் என்ற பிரஞ்ஞையேயின்றி மிக எளிமையானவராக இருப்பது இவரின் தனிச்சிறப்பு.

கிராமபுறங்களில் அல்லது வளர்ச்சியின் பிரமாண்டத்தை கண்டிறாத நகரங்களில் இருந்து கொண்டு உலகத்தின் உச்சங்களை அடைவது சாத்தியமா என்ற ஆச்சர்யங்களுடனும், கேள்விகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடி.-

சில ஆண்டுக்கு முன் அவரின் இந்திய வருகையின் போது அவர் படித்த காரக்பூர் ஐஐடி வளாகத்தில் மாணவர்களை சந்தித்து அவர்களின் கேள்வி மிக எளிமையாக பதிலளித்தார். அது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. வெற்றியாளர்கள் வெற்றி கதைகள் எப்போது பேசினாலும் சுவாரஸ்யம் தான். அந்த வகையில் அவர் அளித்த பதில்களில் சில இங்கே

கூகுள் நிறுவனத்தில் உங்களுக்கு நேர்ந்த நேர்காணல் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற கேள்விக்கு…

"நான் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 தேதியில் நேர்காணல் செய்யப்பட்டேன். அதை முட்டாள்கள் தினம் என வேடிக்கையாக சொல்வார்கள். அப்போது தான் ஜிமெயில் என்ற புதிய பொருளை அவர்கள் வடிவமைத்திருந்தார்கள். என்னுடைய நேர்காணலின் பல இடங்களில் அவர்கள் என்னிடம் "ஜிமெயில் குறித்து என்ன நினைக்கிறீர்கள்" என்று கேட்டார்கள். ஆனால் எனக்கோ அது குறித்து ஒன்றும் தெரியாது. நான் அதை எதோ முட்டாள்கள் தினத்தின் விளையாட்டு என்று நினைத்தேன்.

என்னுடைய நான்காம் சுற்று நேர்காணலின் போது தான் ஒருவர் என்னை கேட்டார்…."நீங்கள் ஜிமெயில் என்பதை பார்த்திருக்கிறீர்களா?" என்று. அப்போது நான் "இல்லை" என்றேன். அப்போது அவர் அதை என்னிடம் காட்டினார். என்னுடைய ஐந்தாம் சுற்று நேர்காணலில் இருந்து ஜிமெயில் என்பதை எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்து பதிலுரைக்க ஆரம்பித்தேன். இந்த நேர்காணலின் இடையே என்னை நேர்காணல் செய்தவர் ஐஸ்கிரீம் சாப்பிட அழைத்து சென்றார் . இந்நிகழ்வு அந்நிறுவனம் பணியாற்றுவதற்க்கு உகந்த இடம் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது." என்று தன்னுடைய நேர்காணல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு மாணவர், நான் கணிணி அல்லாமல் வெறும் கணிதத்தை மட்டுமே பயில்கிறேன். என்னை போன்றவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியை எழுப்பினார்…

அதற்கு திரு. பிச்சை அவர்கள் சொன்ன பதில்...

"நிச்சயமாக. ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ்(Artificial intelligence), மெசின் லெர்னிங்(Machine Learning) போன்ற துறைகளில் கணித பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் கோடிங்(coding) சம்மந்தமான வேலைகளை ஒரு கணித நபரிடம் புரியவைப்பது கணிணி படித்தவர்களுக்கு புரியவைப்பதை விடவும் எளிது" என்றார்.

"நீங்கள் இங்கே படித்த போது கூகுள் இல்லை, இணையம் இல்லை, காலம் எவ்வாறு மாறியுள்ளது என்ன மாற்றத்தை காண்கிறீர்கள்..?" கேள்விக்கு….

"நிச்சயமாக அசாதாரணமான வளர்ச்சியை அனைத்து வகையிலும் அடைந்துள்ளது. அப்போதெல்லாம் தொலைபேசியில்லை. எங்கள் இல்லத்தில் சுழலும் தொலைப்பேசியின் இணைப்பை பெரும் வழிமுறைகளுக்கும், காத்திருப்பிற்க்கும் பின் கிடைக்க பெற்றோம். கணிப்பொறியை கண்டதில்லை. கணிப்பொறியை முதலில் கண்டது இந்த வளாகத்தில் தான். அதுவும் அதை பயன்படுத்துவதற்க்கு நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். கைகள் நிறைய ப்ளாப்பி டிஸ்குகளை எடுத்து செல்ல வேண்டும். அதுவெறு விதமான உலகம். ஆனால் இன்றைய அதன் வளர்ச்சி அசுரத்தனமானது. இன்று இந்தியாவில் நடந்திருக்கும் டிஜிட்டல் புரட்சி அபாரமானது. 300 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் இங்கே நுகரப்படுகின்றன. எனவே வளர்ச்சி கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் இன்று இந்த வளாகத்தில் நேரு அரங்கில் நான் நுழையும் பொழுது, 25 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்ததோ இன்றும் அப்படியே இருக்கிறது என்னுடைய அறை. சில விஷயங்கள் மாறாமல் இருப்பதும் நன்மைக்கே என்று நினைக்கிறேன்.

பத்தாண்டுகளுக்கு முன்பு கூகுளில் இணைகிறீர்கள்… இன்று கூகுளை வழிநடத்துகிறீர்கள். கூகுள் தேடுதளம், யூடியுப், ஆண்ட்ராய்ட், கூகுள் மேம் என அதன் புதுமையான பரிமாணங்கள் இணைய சந்தையை ஆள்கின்றன. இத்தனை புதுமையாக இருக்க கூகுளை இயக்குபவை எவை?

இது குறித்து எங்களுக்கு எப்போதுமே நோக்கம் சார்ந்த அணுகுமுறை தான் இருந்துள்ளது. இதை நாங்கள் நிறுவனத்திற்க்குள்ளாக "10X" அல்லது "MORE SHOTS" என்றழைக்கிறோம். மக்கள் அன்றாடம் தினசரி பயன்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என வடிவமைக்கிறோம். மில்லியன் கணக்கான மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக அது பயன்பட வேண்டும் என நினைக்கிறோம். எனவே அதுவே எங்கள் இலக்கு. அந்த அணுகுமுறையிலேயே சிந்திக்கிறோம்…

உயர்ந்த இலக்குக்ளை நிர்ணயிக்கிறோம். கணினி தொழில்நுட்பத்தை மிகவும் ஆழமாக பயன்படுத்த முயற்சி செய்கிறோம் அதன் மூலம் புதுமையான வித்தியாசமான தீர்வை வழங்க முடியும் என்பதால்.

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்… உயர்வாக சிந்திக்கிற பொழுது தோல்வியை தழுவுவதும் இயல்பே. லேரி அவர்கள் சொல்வார்…"நீங்கள் எப்போது உண்மையிலேயே மிகவும் கடினமான செயல்களை செய்கிறீகளோ அப்போது நீங்கள் தான் தேர்ந்த செயல்வீரராக இருப்பீர்கள். காரணம் அங்கே போட்டியிராது.அது கடினமான இலக்கு என்பதாலேயே அதை யாரும் முயல மாட்டார்கள். எனவே நீங்கள் தோற்றாலும் நீங்கள் அடைந்திருக்கும் இடம் தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். எனவே அந்த தத்துவம் தான் எங்களை இத்தனை ஆண்டுகளாக இயக்கியுள்ளது என நினைக்கிறேம்.

இன்று நாம் ஐஐடி காரக்பூரில் அமர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் நினைத்தால் உலகின் சாலச்சிறந்ததாக கருதப்படும் எந்தவொரு பல்கலைகழகத்திலும், கல்லூரியிலும் கணினித்திரையின் மூலமாகவே பயிலலாம். எனவே நீங்கள் சொல்லுங்கள் இன்றைய இளைஞர்கள், இனி வரும் காலங்களில் கல்வி என்பதை எந்த பார்வையுடன் பார்க்க வேண்டும்…? கல்வி என்பதை எப்படி சிந்திக்க வேண்டும்?

இந்தியாவின் சிறப்பான தன்மையே கல்வி மீதான ஆர்வம் தான். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் குறித்து அதீத அக்கறை கொள்கிறார்கள். எனவே இ்ன்றைய கல்வி என்பது பல விதங்களில் வெளிப்பட வேண்டும். கால மாற்றங்கள் நிகழ வேண்டும். புத்தகங்களுக்கும், தேர்வுகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறோம்.

ஆனால் என்னை பொருத்தவரை நிஜ உலகை அறிய வேண்டும், வித்தியாசமானவைகளை முயற்சிக்க வேண்டும். சில ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டும். தங்கள் உள்மனம் எதில் தீவிரமாக இருக்கிறதோ அதை பின் தொடருங்கள்.

இந்திய கல்வி முறையில் ஒரு நேர்கோட்டை பின் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. உதாரணமாக மேல்நிலை முடித்தவுடன் கல்லூரி, இளநிலை முடித்தவுடன் முதுநிலை என்று…இந்த இடத்தில் நான் நிஜ உலக அனுபவங்களை பெற்ற பின் முடிவெடுங்கள் என்கிறேன். உதாரணமாக அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலான மாணவர்கள் இறுதியாண்டு பயிலும் வரை மேற்படிப்பு என்ன எனும் முடிவை எடுப்பதேயில்லை. அவர்கள் ஒவ்வொன்றையும் வெளிக்கொணர்கிறார்கள். தங்களின் தீவிரம், ஆசை, விருப்பம் எது என்பதை அறிந்து கொள்கிறார்கள். எனவே உங்கள் தனித்துவத்திற்க்கு மதிப்பளியுங்கள், உங்கள் அனுபவத்திற்க்கு மதிப்பளியுங்கள்.

தலைமைபண்பில் உங்களுடைய ஸ்டைல் என்ன? என்ற கேள்விக்கு

தற்சமயம் எங்களிடம் 60,000 பேர் கொண்ட குழு இருக்கிறது. நாங்கள் மற்ற வலிமையான தலைவர்களின் வழிகாட்டுதல்களையும் நம்பி செயல்படுகிறோம். எங்களிடம் சிறந்த தலைமை பண்பு கொண்ட குழுவுள்ளது. தங்களையும் நிறுவனத்தையும் மேம்படுத்தும் மக்கள் அனைத்து தளங்களிலும் இருக்கமுடியாது எனவே அவர்களுடைய தடைகளை, இடர்களை களைந்து அவர்களை ஒன்றிணைந்து செயல்படவைத்து அவர்களையும் வெற்றியாளராக மாற்றுவதே ஒரு தலைவராக நான் செய்ய விரும்புவது.

இங்கிருக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு நீங்கள் முன்னொடியாக இருக்கிறீர்கள்…? அவர்களுக்கு நீங்கள் சொல்ல் நினைப்பது. என்ற கேள்விக்கு..

இன்றைய சூழலில் கல்வியின் மீது ஒரு அழுத்தம் உள்ளது. பெரும் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற எட்டாம் வகுப்பு முதலே குழந்தைகளை தயார் செய்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே நான் சொல்ல விளைவது.. உங்கள் கனவுகளை பின் தொடருங்கள்… உங்கள் விருப்பத்தை பின் தொடருங்கள். வாழ்க்கை என்பது நீண்ட பாதை என்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயம் தோய்வு இருக்கும், அதை தவிக்க முடியாது. ஆனால் அதை பற்றி கவலைபட தேவையில்லை.

என் இளமை காலத்தில் கூட பல விமர்சனங்களை கேட்டிருக்கிறேன். ஆனால் அவையல்ல வாழ்க்கை. அதுவல்ல உலகம். அது வித்தியாசமானது. எனவே உங்கள் நம்பிக்கையை பின் தொடர்ந்து செல்லுங்கள்… வாழ்க்கையை தொலைநோக்கு பார்வையோடு அணுகுங்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News