Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்குக்கு பின் உத்வேகம் கொண்டு இந்தியா எழுவது எப்படி? - துறைரீதியான மறுசீரமைப்பு ஒரு அலசல்!

ஊரடங்குக்கு பின் உத்வேகம் கொண்டு இந்தியா எழுவது எப்படி? - துறைரீதியான மறுசீரமைப்பு ஒரு அலசல்!

ஊரடங்குக்கு பின் உத்வேகம் கொண்டு இந்தியா எழுவது எப்படி? - துறைரீதியான மறுசீரமைப்பு ஒரு அலசல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 April 2020 1:40 AM GMT

21 நாட்கள் கடந்த பின், நாடு தழுவிய ஊரடங்கின் மூன்றாம் வாரத்தை இந்தியா நிறைவு செய்திருக்கிறது. இப்போது அனைவரின் கவனமும் இந்த ஊரடங்கிற்கு பின்பான சூழலை நோக்கி திரும்பியிருக்கிறது. கொரோனாவிற்கு பின்பான உலகில் இந்தியாவை மீண்டும் புதிதாக கட்டமைக்க புத்துணர்வும், புதுமையும் நிறைந்த சிந்தனைகள் அவசியம் தேவை.

காலவரையற்ற ஊரடங்கு என்பது எப்போதும் சாத்தியமல்ல. வேலை இழப்பு மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுதல் ஆகியவையின் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் மிகக்கடுமையாக தற்சமயம் பாதிப்படைந்துள்ளன. இந்த ஊரடங்கு தளர்த்தப்படும் போது, தொற்றுநோயின் மூலம் உறுதிப்படுத்தப்படுவோர் எண்ணிக்கை உயருமெனில் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இங்கு பொதுவாக உருவாகி வரும் கருத்து என்னவெனில், ஊரடங்கை தளர்த்தி அதற்கு பதிலாக நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளை மட்டும் கண்காணிப்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதாகும். மக்கள் மத்தியில் நோய் தொற்று பாதித்தவர்களை கண்டுபிடிக்க அதிகமான பரிசோதனைகளை செய்ய அரசு முனைந்திருக்கிறது. இதன் மூலம் பெறப்படும் புதிய தரவுகள் புதிய வழிமுறைகளை பின் பற்ற உதவும்.

வைரஸ் பரவலின் அளவை அடிப்படையாக கொண்டு பல விஷயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளன. பிப்ரவரி 26, 2020 நிலவரத்தின் படி பயணம் சார்ந்த மூன்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை பதிவானது. அதாவது சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்தும் மற்ற அனைத்தும் கேரளாவிலிருந்தும் பதிவாகியுள்ளன. ஏப்ரல் 6-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டதாக அரசாங்கம் அளித்த எண்ணிக்கை 4067, மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 மற்றும் 291 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 76% ஆண்கள் மற்றும் 24% பேர் பெண்கள். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 47% பேர் 40 வயதிற்குட்பட்டவர்கள், 19% பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். இறந்தவர்களில், 63% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 30% பேர் 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 7% பெஎர் 40 வயதிற்குட்பட்டவர்கள்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பலமடைந்துள்ளது. தேசிய சுகாதார மிஷன்( என்.ஹெச்.எம்) முன்னரே ₹1,100 கோடியை அனைத்து மாநிலத்திற்கும் வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக ₹3,000 கோடியையும் ஏப்ரல் 6 அன்று வழங்கியுள்ளது. மற்றும் என்-95 ரக முககவசங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிபிஇ-க்களை மத்திய அரசு வாங்கி மாநிலங்களின் தேவைகேற்ப அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகித்து வருகிறது.

மேலும் நம் நாட்டில் மொத்தம் 274 மாவட்டங்கள் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. கொரனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 80 சதவீதத்தினர் 62 மாவட்டங்களில் உள்ளனர். கொரானா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒவ்வொரு 4.7 நாட்களுக்கும் இரட்டிப்பாகியிருக்கிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் வகுக்கப்பட உள்ள வழிமுறைகளுக்கு இந்த தரவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தப்ளிகி ஜமாத் மார்க்காஸ், கொரானா பரவுதலுக்கு மிக முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. நோய் உறுதி செய்யப்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கு ஆட்கள் புது தில்லியில் மார்ச் மாதம் நடைபெற்ற தப்ளிகி ஜமாத் கூட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் இந்தியா உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையில் ஒரு பெரும் உயரத்தை அடையுமா? இல்லையா? என்பதை பொருத்திருந்து காண வேண்டும். அந்த தருணத்தை எதிர்கொள்ளவுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்கள், முககவசங்கள் மற்றும் பிற உபகரணங்களின் பற்றாக்குறையை சமாளிப்பதே இச்சமயம் நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயம் ஆகும்.

அரசாங்கம் அதன் செயல்முறையை ஒருங்கிணைக்க முனைப்பு கொண்டுள்ளது. பத்திரிக்கை தகவல் பீரோவின் தகவலின் படி கோவிட் நெருக்கடிக்கு எதிரான அரசாங்கத்தின் செயல்பாடுகள் மிகவும் சரியான நேரத்தில் மிகவும் வலுவானதாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த பின்வரும் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அவர்களின் தலைமையில் அதிகாரம் பெற்ற குழு ஐ.நா-வின் முகவர்களுடன், உலக வங்கியுடன் மற்றும் ஏ.டி.பி, பின் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழில்துறை சங்கங்களுடன் ஏராளமான கூட்டத்தை இதற்காக நடத்தியுள்ளது.

கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு முறைகளுக்கும், சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை பலப்படுத்தவும், திறன் மேம்பாடு, நிதி ஆதாரம் மற்றும் உபகரண உதவி ஆகியவைகளுக்கும் இந்திய அரசாங்கம் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கான கூட்டு செயல் திட்டத்தை ஐ.நா-வின் இந்தியா அலுவலகம் ஏற்கனவே சமர்பித்துள்ளது.

தனியார் துறை மற்றும் புதிய தொழில் முனைபவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், சுகாதார கருவிகள் மற்றும் PPE போன்றவைகளை இவர்கள் இனைந்து உருவாக்க முடியும். இதற்கு நாட்டின் முன்னனி தொழில்துறை அமைப்புகள் பல உதவ முன்வந்துள்ளன.

நெருக்கடி நேரத்தில் சமூகத்தின் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மகத்தான பங்கை அறிந்த மத்திய அரசாங்கம், சமூகத்தின் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு தேவையான சுகாதார பராமரிப்பு மற்றும் அது சார்ந்த சேவைகளை எளிமையாக்குமாறு பல்வேறு மாநில அரசாங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஊரடங்கு நிலைமையின் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அடையாளம் காணவும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவும் சுற்றுலா அமைச்சகம் www.strandedinindia.com என்ற தளத்தை நிறுவியுள்ளது.

பொருளாதார சீரமைப்பு

பலவீனமான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதையே அரசு அத்யாவசியமாக கருத வேண்டும். இது தொடர்பாக நிறைய செய்யலாம். சுகாதார மேம்பாட்டு நிதியை அதிக படுத்தலாம். சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை தகுதியற்றவர்களிடம் இருந்து மாற்ற வேண்டும். சுகாதாரம், ஆய்வு மற்றும் வளர்ச்சி, மற்றும் டெலி மருந்துகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நாம் மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதிலும் நோய் பரவல் கண்காணிப்பிலும் தன்னிறைவு அடைய வேண்டும். மருத்துவர்கள், துறை சார்ந்த வல்லுனர்கள் மருந்து மாத்திரை ஆராய்ச்சி நிபுணர்களை அதிகபடுத்த வேண்டும்.

கிராமப்புற பொருளாதாரத்தை சரி செய்யவும் இதுவே சரியான தருணம். கிராமபுறங்களில் அதிக தேவை மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் மூலம் கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு மில்லியன் கணக்கான மக்கள் அரோக்கியமற்ற முறையில் இடம்பெயர்வது குறைக்கப்பட வேண்டும்.

விவாசயத்திற்கு அதிக முன்னுரிமை தரப்பட வேண்டும். கிராமப்புறங்களின் மண், நீர், மாசுபாடு, எரிசக்தி, நீர்பாசன உள்கட்டமைப்பு, விவசாய சந்தைப்படுத்தல், கல்வி மற்றும் வீட்டுத் தேவைகளில் அதிக முதலீடு செய்வது அவசியம். கால்நடை வளர்ப்பு, மீன் வளம், உணவு பதப்படுத்துதல், குளிர் சாதன வசதி கொண்ட கடைகள் மற்றும் கிடங்குகள் போன்றவற்றிலும் முதலீடு செய்யப்பட வேண்டும். தனியார் துறை மற்றும் சமூகம் இரண்டும் உடனடியாக சமநிலை அடைய வேண்டியுள்ளது.

உணவு பதப்படுத்தும் தொழில்துறையின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், முன்னனி தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளார். இதன் மூலம், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் உருவாக இருக்கும் பலம் பொருந்திய சூழலுக்கு ஏற்ற உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சிக்கு தேவையான உள்ளீடுகள் என்ன என்பதை புரிந்து கொண்டுள்ளார்.

உலகளாவிய அடிப்படை வருமான முறையினை அடிப்படையாக கொண்டு சிந்திக்க வேண்டிய நேரம் இது. இதுவே தேவையான நேரத்தில் சமூக பாதுகாப்பை அளிக்கும். இந்த யோசனை 2016 ஆம் ஆண்டின் பொருளாதார கணக்கெடுப்பின் விவாதிக்கப்பட்ட ஒன்றே ஆகும். இதில் தேவையற்றவை உடனடியாக வெளியேற்றப்பட்டு, தேவையுள்ளவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

முறை சாரா தொழித்துறை நம் நாட்டு வேலைவாய்ப்பின் முதுகெலும்பாக திகழ்கிறது. சிறு மற்றும் நடுத்தரத் துறை அதிகபட்ச வேலைவாய்ப்பை உருவாக்கிய போதும் புறக்கணிப்பட்ட துறையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இந்த கொரானா நெருக்கடி காலத்தில் முறை சாரா துறைகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே சிறிய மற்றும் நடுத்தர துறை பலப்படுத்தப்பட்டு , ஒருங்கிணைக்கப்பட்டு பெரியளவில் இயங்குகிற முறைசார் துறையுடன் இணைக்கப்படுவதை போன்ற பொருளாதார முறை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். முறை சாரா துறையின் கடன் தேவை, தொழில்நுட்ப தேவை, திறன் மேம்பாடு, சந்தைப்படுத்துதல் போன்ற தேவைகள் உடனடியாக கவனிக்க பட வேண்டும்.

சுற்றுசூழலை பாதுகாக்காமல் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி நிலைத்து நிற்க கூடியதல்ல. சுற்றுசூழல் சீரழிவை சரிபார்க்க, CO2 உமிழ்வை தணிக்க போதுமான கவனம் செலுத்தப்பட வேண்டும். தற்போதைய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுசூழல் பாதுகாப்பிற்கும் இடையே ஒரு சமநிலையின்மையும் பதட்டமும் நிலவுகிறது. குறிப்பாக பிரமாண்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது இந்த பதட்டம் கூடுதலாக அதிகரிக்கிறது. குறியீடுகளை கடந்து, நிலையான வளர்ச்சி என்பது அரசாங்க திட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்த ஊரடங்கு நாட்களில் நதிகள் அனைத்தும் தெளிவாகவும், தூய்மையாகவும் ஓடுக்கொண்டிருப்பதையும், நீல வானம் மேலும் தெளிவடைந்திருப்பதையும் பலர் கவனித்திருக்க கூடும். பறவைகளும், மிருகங்களும் தங்கள் உண்மையான இருப்பிடம் நோக்கி திரும்ப துவங்கியிருக்கின்றன. இந்திய நகரங்கள் உலகத்தின் மற்ற நகரங்களை காட்டிலும் மாசுபட்டவை என்பதாலும், லட்சக்கணக்கான மக்கள் மாசுபாட்டினால் உயிரிழக்கிறார்கள் என்பதாலும், மாசுபாடுகள் ஏற்படா வண்ணம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

எனவே கொரோனா நெருக்கடி ஏற்படுத்தியிருக்கும் இந்த தருணத்தை பயன்படுத்தி மாசுபாட்டை கட்டுபடுத்தும் பயனுள்ள பல நடவடிக்கைகள எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும். இதை ஒருபோதும் காலம் தாழ்த்த கூடாது. மாசுபாட்டை கண்காணிக்க, நகரங்களை தூய்மைப்படுத்தி சுற்றுசூழலை காக்க ஏதுவான திட்டங்களுடன் சுகாதார பாதுகாப்பு முயற்சிகளும் இணைக்கப்பட வேண்டும்.

ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார பாதுகாப்பு, சுத்தமான நகரம், தூய்மையான நீர் மற்றும் காற்று ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளும் எம்.ஜி.ஆர்.ஈ.ஜி.ஏ(MGREGA) திட்டத்துடன் இணைக்கபட வேண்டும்

தகவல் தொழில்நுட்பத்துறை இந்த ஊரடங்கின் தாக்கத்தை ஒரளவு தணித்துள்ளது. இந்த துறை சார்ந்த பணியாளர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார் மற்றும் துறை சார்ந்தாரோடு தொடர்பில் இருக்கின்றனர். அடிப்படை தேவைகள் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்படுகிறது. டிஜிட்டல் துறையில் சில பிரிவினைகள் இருந்த போதிலும் சிறப்பான தகவல் மற்றும் தொடர்பியல் உள்கட்டமைப்பினை (ICT) இந்தியா பெற்றிருக்கிறது. தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பத்தை இந்தியா உற்பத்தி செய்வதில்லை என்பது தான் இதிலிருக்கும் சிக்கலே. உதாரணமாக, இந்தியா கம்ப்யூட்டர் சிப்கள், ரவுட்டர்கள், தொடர்பியல் சாதனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில்லை.

இவையனைத்தும் பெரும்பாலும் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. எவையெல்லாம் உள்நாட்டு பொருட்களாக இருக்கிறதோ அவை மிக குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பின் பெரிய அளவிலான வெளிநாட்டு போட்டிகளை சந்திக்க வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே இந்தியா அதன் மின்னணு துறையை பலப்படுத்த வேண்டும் அதன் மூலம் நம் நாட்டிலேயே தகவல் மற்றும் தொடர்பியல் சாதனங்களை நாம் உற்பத்தி செய்ய வேண்டும்.

சுகாதாரம், விவாசாயம், கல்வி போன்ற பல்வேறு துறைகளிலும் மென்பொருளிலின் தேவை அதிகரித்திருப்பதாலும், தகவல் மற்றும் தொடர்பியல் சாதனங்களின் தேவை அதிகரித்திருப்பதாலும் தகவல் மற்றும் தொடர்பியல் சாதனங்களின் புதுப்பிக்கப்பட்ட உற்பத்திக்கு நாம் அதிக கவனத்தை அளிக்க வேண்டியுள்ளது. இணைய பாதுகாப்பு துறையும் முழுமையாக உள்நாட்டில் பராமரிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

போக்குவரத்து துறையும் மறசீரமைப்பு செய்யப்பட வேண்டும். தயாரிப்புகள் மற்றும் சேவைகளை முடிந்த அளவில் வீட்டு வாசல்களுக்கே சென்று சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் . இது போக்குவரத்து துறையில் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மற்றும் பணியிடங்களில், சாலைகளில் மற்ரும் பொது இடங்களில் தேவையற்ற நெரிசலை குறைக்க உதவும்.

புதுமையால் பொலிவுற இருக்கும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் அறிவியல், தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதத்தில் கல்வித்துறை அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இந்த துறைகளில் இத்தனை காலமும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. அறிவியல், மற்றும் தொழில்நுட்ப கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிபிரிவு, ஆன்லைன் கல்வி முறையில் மேலும் பல புதுமையான முறைகளை எவ்வாறு பலப்படுத்துவது என்கிற புதுமையான சிந்தனையை நாம் தோற்றுவிக்க வேண்டும். அதற்கு ஏதுவான ஒரு சூழலை இந்த கொரானா நெருக்கடி ஏற்படுத்தி தந்திருக்கிறது.

தொலை தொடர்பு - உத்திகள்

கொரோனாவுக்கு வைரஸுக்கு பிந்திய உலகில் அரச யுத்திகளின் வேறு வடிவம் கொள்ளும். பிரமாண்டமான உச்சி மாநாடுகள் மற்றும் பல யுத்திகள் கவனம் நிறைந்த மற்றும் நேர்மறையான தொலை தொடர்பு உத்திகளுக்கும் வழிவகுக்கும். சமீப காலங்களில் பிரதமர் உலக தலைவர்கள் அதிபர் ட்ரம்ப், மற்றும் பிரேசில், ஸ்பெயின் தலைவர்கள் பலருடனும் பல்வேறு உரையாடல்களை நிகழ்த்தியுள்ளார்.

இந்த உரையாடல்கள் அனைத்தும் கொரானா நெருக்கடியை அடிப்படையாக கொண்டது. ட்ரம்ப் மற்றும் மோடி அவர்கள் இந்தியா மற்றும் அமெரிக்காவின் மொத்த பலத்தையும் இணைத்து கோவிட் ற்கு எதிரான போராட்டத்திற்கு பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இந்தியாவிடமிருக்கும் குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்காவிற்கு தேவை எனவே அவைகளை அனுப்பி வைக்குமாறு டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளியுறவு கொள்கை அரங்கில், நாம் சீனாவையே பெரும்பாலும் சார்ந்திருப்பதை தவிர்த்து பிராந்திய வழங்கல் தொடர்பை ( regional supply chain) வலுவாக கட்டமைக்க நாம் கவனம் செலுத்த வேண்டும். அண்டை நாடுகளின் தேவையும் நம்முடைய தேவையை போலவே இருக்கின்றன. எனவே இந்திய பொருளாதாரத்தை அண்டை நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கும் நேரம் இது. உதாரணமாக இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து முக கவசத்தையும் வெண்டிலேட்டர்களையும் தயாரிக்கலாம். இந்தியா மற்றும் பூட்டான் இணைந்து மின்னணு உயர் உற்பத்தியில் கவனம் செலுத்தலாம். இதற்கு சுத்தமான காற்று மண்டலம் மற்றும் தண்ணீர் தேவை. மேலும் இந்தியாவும் நேப்பாளமும் இணைந்து விவசாய கொள்கைகளை உருவாக்கதல் குறித்து ஆலோசிக்கலாம். இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகியவை இணைந்து கடல் வளங்களின் கூட்டு வளர்ச்சி குறித்து சிந்திக்கலாம். இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகியவை இணைந்து முத்தரப்பு நெடுஞ்சாலையை பயன்படுத்தி கிராமப்புற மற்றும் தொழில்துறை பொருளாதாரத்தை இணைக்கலாம்.

21 நூற்றாண்டிற்கான தன்னம்பிக்கை

இந்த நெருக்கடியும் கடந்து போகும். ஆனால் இந்த நெருக்கடியை பயன்படுத்தி நம் கொள்கைகளை சீரமைக்க நாம் சிந்திப்போமா? இந்த சீரமைப்பு சிந்தனையை நாம் சுகாதாரத் துறையிலிருந்து துவங்க வேண்டும். அதனை தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தின் தேவைக்கு ஏற்ற ஒருங்கிணைந்த சமூக பொருளாதார முறையை நம்மால் உருவாக்க முடியும் . இந்தியா என்பது மாபெரும் சந்தையாகும். இந்த பெரும் சந்தையின் பலன்களை நாமே பயன்படுத்தி கொள்ள வேண்டும். இறக்குமதியினை சார்ந்திருக்கும் தன்மையை நாம் குறைத்து கொள்ள வேண்டும். சுயமான நம்பகத்தன்மை என்பது நம் புழக்கத்திலிருந்து வெளியேறியிருக்கும் சூழலில், அது மீண்டும் சுழற்சிக்கு வர வேண்டும்.

அதே வேளையில் பொருளாதாரத்தை மீட்டுருவாக்குவதற்கான வளங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இன்றோ நாளையோ நாம் அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிச்சயம் உருவாகும். வரிவிதிப்பு கொள்கைகள் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதை எவ்வாறு செய்வது என்கிற விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

*Translated Article from Vivekananda International Foundation Website

Next Story
கதிர் தொகுப்பு
Trending News