வாழ்வில் வெற்றி பெற முடிவுகளை எப்படியெடுக்க வேண்டும்? ஓர் உளவியல் பார்வை.!
வாழ்வில் வெற்றி பெற முடிவுகளை எப்படியெடுக்க வேண்டும்? ஓர் உளவியல் பார்வை.!

நம்முடைய நாட்கள் தொடர்ச்சியாக நாம் எடுக்கும் முடிவுகளால் நிறைந்துள்ளது. சில முடிவுகள் நமக்கு சாதகமாக அமையும் சில முடிவுகளோ பாதகமாக அமையும். ஓர் ஆய்வின் முடிவொன்றில் ஒரு மனிதன் ஒரு நாளில் தோராயமாக 70 முடிவுகள் வரை மேற்கொள்கிறாராம். என்ன சாப்பிடலாம், என்ன உடை அணியலாம், எந்த பக்கம் காரை செலுத்தலாம் என்பது துவங்கி முக்கியமான முடிவுகள் வரை தோராயமாக 70 முடிவுகள் எடுக்கப்படுகின்றனவாம்.
இதில் எவ்வாறு ஒரு முடிவு நம் வாழ்வை மாற்றியமைக்கிறது என்பதை உணர வேண்டுமெனில் இந்த உதாரணத்தை காணலாம்.
நீங்கள் ஒரு காரை வாங்க நினைக்கிறீர்கள். உங்கல் சேமிப்பு அனைத்தையும் கொடுத்து வாங்கியும் விட்டீர்கள். ஆனால் அந்த காருக்கு லெதரால் ஆன இருக்கையை பொருத்த வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் லெதர் இருக்கை சற்று விலை கூடுதலானது. உங்களால் அதை இச்சமயம் வாங்க முடியாது. ஆனால் இதற்கு முன்பு நீங்கள் வேறொருவரின் லெதர் இருக்கை பொருத்திய காரில் அமர்கையில் அது கொடுத்த செளகரியம், அதன் நறுமனம், அதன் சொகுசுத்தன்மை, ஆகிய நினைவுகளோடு உங்கள் மனம் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டிருக்கும். ஆனால் இதற்காக நீங்கள் கடனுதவி பெற வேண்டும் எனில், அந்த கடன் தரக்கூடிய அழுத்தம், அந்த கடனால் நீங்கள் அனுபவிக்க போகும் வருத்தத்தை பெரும்பாலும் உங்கள் மனம் உணராது. காரணம் அந்த லெதர் இருக்கை அளித்த சுகம் உங்கள் அனுபவத்தில் இருக்கிறது. அதற்காக நீங்கள் பெற போகும் கடனுதவி தரும் வருத்தம் உங்கள் அனுபவத்தில் இல்லை.
எனவே இப்படியான சூழலில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவும் அமையும், பாதகமாகவும் அமையும் இல்லையா?
என்ன சாப்பிடலாம், எந்த வழியில் செல்லலாம், இரண்டு வேலை காத்திருக்கிறது எந்த பணியை தேர்வு செய்யலாம், வருங்காலத்தில் வாழ்வதற்கு எந்த நகரை தேர்வு செய்யலாம். என சிறு விஷயம் தொடங்கி பெரிய விஷயம் வரை நம்முடைய மனம் நம் அனுபவத்தை மட்டுமே ஒரு முடிவினை எடுக்கிறது.
எனவே மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் படி ஒருவரின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்திய கூட அம்சமாக இவையெல்லாம் தொகுக்கப்பட்டுள்ளன.
1. அடுத்தவர்கள் விருப்பத்திற்காக சில முடிவுகளை எடுப்பது. எப்போது நீங்கள் அடுத்தவர் விருப்பத்திற்காக, ஒரு முடிவுகளை எடுக்கிறீர்களோ அப்போது உங்கள் அறம் மழுங்கத்துவங்கும்.
எனவே பிறரின் விருப்பத்திற்கு இரையாவதை தடுத்திடுங்கள்.
2. வேலையை மட்டுமே பிரதானமாக நினைத்து முடிவுகள் எடுப்பது. பொருள் தேடி ஓடும் பலரும் சொல்வது, நான் என் குடும்பத்தினரின் செளகரியத்திற்காக உழைக்கிறேன்.
ஆனால் அவர்களோ, உங்களின் பணத்தை விடவும், உங்கள் அருகாமையையே விரும்புகிறார்கள். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்… உங்களுக்கு பிடித்தவரோடு இருங்கள் அதன் அடிப்படையில் உங்கள் முடிவுகளை எடுங்கள்
3. சூழ்நிலையை கடந்து மகிழ்ச்சியான முடிவுகளை எடுங்கள். நம் அனைவரின் வாழ்விலும் கடுமையான சூழலும், பிரச்சனைகளும் தவிர்க்க முடியாததே. நாம் அனைவரும் துன்பத்தையும், வலியையும் வாழ்வில் அனுபவிக்கிறோம் எனினும், அந்த வலுக்கு உண்டான வெளிப்பாடு என்பது நம் கட்டுபாட்டில் இருப்பதே.
சூழலை கடந்தும் அதனுள் இருக்கும் உண்மையை உணரத்துவங்குவதும், மென்மையாக புன்னகை பூப்பதும் நம் கட்டுப்பாட்டிலே இருக்கிறது. எனவே உணர்வு நிலையில் முடிவுகளை எட்டாமல், உண்மையை உணர்ந்து முடிவுகளை எடுக்கலாம்.