Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த இயந்திர வாழ்வு நமக்களித்த சோகம் "உடல் பருமன் " மீள்வதெப்படி ?

இந்த இயந்திர வாழ்வு நமக்களித்த சோகம் "உடல் பருமன் " மீள்வதெப்படி ?

இந்த இயந்திர வாழ்வு நமக்களித்த சோகம்  உடல் பருமன்  மீள்வதெப்படி ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 April 2020 2:22 AM GMT

தொலைகாட்சி, வீடியோகேம்ஸ், எலக்ட்ரானிக் சாதனங்கள், கணிணி இவையெல்லாம் இல்லாத வாழ்க்கை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினமான ஒன்றாகிவிட்டது. வெயில்லில் காயாமல், மரங்களில் ஏறாமல், குறும்புகள் புரியாமல் நாற்காலியில் ஒடுங்கி அமர்ந்திருக்கும் நம் பிள்ளைகளை கண்டு பெற்றோர்களுக்கு கொள்ளை மகிழ்ச்சி. நம்மை வெளியே அழைத்து செல்லுமாறு கூறாத குழந்தைகள் சிறந்த குழந்தைகள் என நமக்கும் உள்மனதில் ஒரு களிப்பு. எந்த உடல் வளைவுகளும் இல்லாத வாழ்க்கை மனதை நிரப்புவதை போல் நம் உடலையும் நிரப்பிவிடுகிறது. "உடல் பருமன்" இன்றைய இயந்திர வாழ்வு நமக்களித்த கொடை.

உணவுகளின் மூலம் நாம் சேகரித்த சத்துக்களை தொலைகாட்சி பார்ப்பது, கணிணியில் விளையாடுது போன்ற அசைவற்ற உடல்மொழியில் செலவிடுகிறோம். இன்றைய உலகில், இயந்திரவாழ்வும் உடல்பருமனும் ஒரு சேர உச்சரிக்கப்படுகின்றன. உலகமயமாக்கல் என்ற பரந்து விரிந்த கொள்கையின் கீழ் இன்று மக்கள் சேமிப்பதற்க்கு ஈடு இணையாக செலவிடுவதிலும் அக்கரை செலுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் செலவு, சேமிப்பு இரண்டுமே அவர்களின் நலத்திற்க்கு ஏற்றவாறு அமைவதில்லை. ஓடி கொண்டேயிருக்கும் வாழ்வில், நேரத்தை மிச்சப்படுத்த எந்த இயந்திரங்களையும் எந்த பொருட்களையும் அவர்கள் உபயோகிக்க தயங்குவதில்லை. இந்த இயந்திர வாழ்க்கையை மேலும் சிறப்பாக ஆக்குவதற்க்கு அவர்களுக்கு பிடித்த, அவர்களை உற்சாகபடுத்துகிற வார்த்தை "இன்ஸ்டன்ட்"(Instant). "நொடிபொழுதில்" இயங்குபவைகளை தான் நாம் விரும்புகிறோம். உடனடி காபி, உடனடி கலவை, உடனடி சமையல் உடனடி தொலைதொடர்பு என எல்லாமும் உடனடியாகவே நமக்கு தேவயாயிருக்கிறது. அத்தோடு உடனடியாய் நமக்கு கிடைப்பது உடல் பருமன்.

சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்த நினைப்பது நம் அறியாமையின் உச்சம். "உடல் பருமன்" என்ற பிரச்சனையின் முக்கிய குற்றவாளியே "ஜங்க் புட்" (junk food) எனப்படும் ஊட்டசத்து அற்ற தின்பண்டங்கள் தான். கடந்த தலைமுறையில் உண்பதற்காக கூட சில மணி நேரம் சாப்பாட்டு மேஜையில் நம் முன்னோர்கள் அமர மாட்டர்கள். அத்தனை உற்சாகம், சுறுசுறுப்பு அவர்களிடம் ததும்பி வழிந்தது. ஆனால் இன்றோ சமைப்பதற்கான பொருட்களை போன் ஆர்டர் மூலம் வீட்டிற்க்கே வரவழைக்கபடுகின்றன. நடந்து கடக்கும் தூரத்தில் இருக்கும் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கட்டண பேருந்துகளை பயன்படுத்துகிறோம். உடற்பயிற்சிகள் மேற்கொள்ள நம் அட்டவனையில் நேரமிருப்பதில்லை. விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்களின் எழிலான விளம்பரங்களுக்கு மயங்கி கேபைன், சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறோம். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களை போலே எண்ணையில், நெய்யில் ஜொலிக்கும் தின்பண்டங்களை, அதன் விளைவுகளை அறியாமலேயே எப்படி செய்வது என கற்று கொள்கிறோம்.

"அடிப்படை" என்ற நிலையிலிருந்து ஆடம்பரம், கொண்டாட்டம் என்ற நிலைக்கு உணவுகள் தள்ளப்பட்டுவிட்டன. தற்போது முன்னேறி வரும் நாடுகளில், டி.வி. டின்னர் (TV Dinner) என்ற புதிய கலாச்சாரத்தை உணவு விடுதிகள் ஊக்கப்படுத்தி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. . வேகமாய் நகரும் இவ்வாழ்வில், மிக வேகமாய் நம்மிடம் இருந்து அகன்று வருகிறது ஆரோக்யம். ஊட்டசத்து அற்ற தின் பண்டங்களை உணவை விடவும் அதிகமாக உட்கொள்கிறோம். ஒரே நாற்காலியில் அமர்ந்தவாறு என்றோ எப்படியோ தயாரிக்கப்பட்ட உணவு பொட்டலத்தை பிரிக்கிறோம். அதை நம் கைகளின் அருகேயிருக்கும் அவனில் வைக்கிறோம். மடியில் மடிகணிணி, கைகளில் உணவு என எல்லாவற்றையும் ஒரே நேரத்தில், ஒரே நாற்காலியில் செய்து முடிக்கிறோம்.

கேலோரிகள் நிறைந்த, ஊட்டசத்து குறைந்த தின் பண்டங்களுக்கு சந்தையில் பிரமாண்டமான விளம்பரங்கள், அதற்கு மக்களிடமும் அமோக வரவேற்ப்பு. உதாரணமாக, ஒரு முன்னனி சாக்லேட் நிறுவனம், ஐந்து அல்லது ஆறு சாக்லேட் கவர்களை சேகரித்து கடைகாரரிடம் கொடுத்தால் அதற்கு ஒரு விளையாட்டு சாதனம் அல்லது அவர்களுக்கு பிடித்தமான கார்டூன் ஸ்டிக்கர்கள் இலவசமாக கொடுப்பதாக விளம்பரப்படுத்துகிறார்கள். இது போன்ற கவர்சிகரமான விளம்பரத்தால் ஈர்க்கப்படுகிற குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த ஒரு விளையாட்டு பந்திற்க்காக 20,000 கேலோரிகளை உட்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கு சமமாக மூன்றே நாட்களில் உடல் எடையை குறைக்கலாம். உங்களுக்கு பிடித்த உணவுகளை உட்கொள்ளல்லாம் என பெரியவர்களின் மதியை மறைக்கும் விளம்பரங்களும் அணிவகுகின்றன. பிரகாசமாக ஒளிரும் நம் தொழில் வாழ்க்கைக்கு பின், இருண்டு கிடக்கும் நம் ஆரோக்கயம் அடையாளப்படுத்தப்பட வேண்டும். உட்கொள்ளும் உணவு, வாழும் வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு இன்றைய சமூகத்தினருக்கு வர வேண்டும். அன்று களத்து மேட்டின் உழைத்து களைத்தவர்கள் தான் இன்று உவகையோடு மகிழ்ந்து வாழ்கிறார்கள். குளிரூட்டப்பட்ட அறைகளில், ஒரு கோப்பை தண்ணீர் வேண்டும் என்றாலும், மறந்து விட்ட சிறிய சிறிய பொருட்களை எடுக்க வேண்டும் என்றாலும், சுழல வேண்டிய கால்களை சுருட்டி வைத்து , சக்கரம் பொருத்திய நாற்காலியில் மட்டுமே சுழன்று கொண்டிருக்கிறோம்.

ஆடம்பரத்திற்க்கு பழகி வரும் நம் உடலை சற்று வியர்வையில் நனைத்திடுவோம். உயிரற்ற எலக்டரானிக் சாதனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்கு நாம் உட்கொள்ளும் ஊட்டசத்திற்க்கும் கொடுக்கலாம். உடனடி தின் பண்டங்களை நம் வாழ்விலிருந்து வழியனுப்பிவைக்கலாம். யோக பயிற்சி வகுப்புகளில் நம் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

பின்பு.. நோயற்ற வாழ்வு.. குறைவற்ற செல்லவம் என்ற பழமொழி நமக்கு மட்டுமே சொந்தமாய் இருக்கும்....

Next Story