பயங்கரவாதிகள் கிட்ட கூட நெருங்க முடியாது - நாட்டுக்கு அர்பணிக்கப்பட்ட வரத் ரோந்துக் கப்பலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்!
பயங்கரவாதிகள் கிட்ட கூட நெருங்க முடியாது - நாட்டுக்கு அர்பணிக்கப்பட்ட வரத் ரோந்துக் கப்பலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்!

லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட 7 கடலோர ரோந்துக் கப்பல் வரிசையில் 5-வது கப்பலான இந்திய கடலோர காவல் படையின் வரத் ரோந்துக் கப்பலை மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புராணத்தில் வரத் என்றால் ஆசி வழங்குபவர் என்பதும், விநாயக கடவுளின் பெயர் என்றும் பொருள். நாட்டின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் இந்திய கடலோர காவல் படையில் வரத் இயங்கும். ஒடிசாவின் பாரதீப் கடற்படை தளத்தைச் சேர்ந்த இந்தக் கப்பல் வடகிழக்கு கடலோர பாதுகாப்பு பிராந்திய கமாண்டரின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருக்கும்.
சென்னை காட்டுப்பள்ளி எல் & டி கப்பல் கட்டுமான தளம் இந்த 96 மீட்டர் இந்த ரோந்துக் கப்பலை வடிவமைத்து உருவாக்கி உள்ளது. தொலைத் தொடர்பு சாதனங்கள், சென்சார் மற்றும் நவீன இயந்திர கருவிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. போர்த் திறனை அதிகரிக்கும் வகையிலான அதிநவீன 30 எம்எம் மற்றும் 12.7 எம்எம் பீரங்கிகளும் இந்தக் கப்பலில் இடம்பெறும். ஒருங்கிணைந்த பால அமைப்பு, ஒருங்கிணைந்த நடைமேடை நிர்வாக அமைப்பு, தானியங்கி மின் மேலாண்மை அமைப்பு, உயர் சக்தி வெளிப்புற துப்பாக்கிச் சுடுதல் அமைப்பு ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சங்கள். ஒரு இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர், 4 அதிவேக படகுகளை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது இந்தக் கப்பல். கடலில் எண்ணெய் படிவ கசிவு காணப்பட்டால் அதைப் போக்கும் சாதனங்களை கொண்டு செல்லக் கூடியதாகவும் இந்தக் கப்பல் உள்ளது.
சுமார் 2100 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 9100 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு டீசல் எஞ்சின்களுடன் அதிகபட்சம் 26 கடல் மைல் வேகத்தில் 5,000 கடல் மைல் தூரத்தில் செல்லக்கூடியது. கடலோர காவல் படையின் திட்டமிட்ட பணிகளை எதிர்கொள்ளும் வகையில் உத்தரவுகளை ஏற்று செயல்படும் திறனுடன் கூடிய தற்கால அதிநவீன சாதனங்களும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிரத்யேக பொருளாதார மண்டல கண்காணிப்பு மற்றும் கடலோர காவல் படையின் இதர பணிகளுக்காக வடகிழக்கு கடலோர காவல் படையுடன் இணைந்து இந்தக் கப்பல் செயல்படும். இந்தக் கப்பலுடன் சேர்த்து இந்திய கடலோர காவல் படையில் 147 கப்பல்கள் & படகுகள் மற்றும் 62 விமானங்கள் உள்ளன. மேலும் 58 கப்பல்கள் இந்தியாவில் பல்வேறு கப்பல் தளங்களில் பல்வேறு நிலைகளில் கட்டுமானத்தில் இருப்பதுடன் பெங்களூரு எச்ஏஎல் நிறுவனத்தில் 16 விமானங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.