ட்ரோன் மூலம் கடலூரில் கிருமிநாசினி தெளிப்பு.. கலக்கும் மாவட்ட நிர்வாகம்..
ட்ரோன் மூலம் கடலூரில் கிருமிநாசினி தெளிப்பு.. கலக்கும் மாவட்ட நிர்வாகம்..

ட்ரோன் மூலம் கடலூரில் கிருமிநாசினி தெளிப்பு
மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு
கடலூர் நகராட்சியில் ட்ரோன் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கடலூர் புதுப்பாளையம் பகுதியில் நேற்று மாலை ட்ரோன் நவீன இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினிி தெளிக்கப்பட்டது அதனை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது, கைகளை கழுவுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ட்ரோன் என்ற பறக்கும் இயந்திரம் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் பணி கடலூர் நகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், ட்ரோன் மூலமாக 1 ஏக்கர் பரப்பளவிற்கு 10 நிமிடத்தில் கிருமிநாசினி தெளிக்க முடியும். இதில், 10 லிட்டர் கிருமிநாசினி ஊற்றப்பட்டு வீதிகள், வீடுகளின் மேல்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இதற்காக, வேளாண்மைத்துறையில் செடிகளுக்கு மருந்தடிக்க பயன்படுத்திய இந்த ட்ரோனை பயன்படுத்துகிறோம்.
கடலூர் நகராட்சிப்பகுதி மொத்தம் 36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில், குடியிருப்பு பகுதிகளுக்கு 2 முதல் 3 நாட்களுக்குள் மருந்து தெளித்து விடலாம் என்றனர்.
நகராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, உதவி பொறியாளர் ஜெயப்பிரகாஷ்நாராயணன், வட்டாட்சியர் செல்வகுமார், வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகன் ஆகியோர் உடனிருந்தனர்.