மீண்டும் கமலுடன் இணையும் கவுதம் மேனன்?
மீண்டும் கமலுடன் இணையும் கவுதம் மேனன்?

முதலில் 'தசாவதாரம்' படத்தினை இயக்கும் வாய்ப்பினை கவுதம் மேனனுக்கு தான் கொடுத்தார் கமல் ஹாசன். ஆனால் அவர் தனக்கு இரண்டு வேடங்களை கையாண்டே பழக்கமில்லை எனவும், தனது சொந்த கதையையே படமாக்க விரும்புவதாக கூறியதன் காரணமாகவே உருவாகிய படம் 'வேட்டையாடு விளையாடு'. அப்படம் மாபெரும் வெற்றி பெற்று கமல் திரையுலக வாழ்கையில் புதிய மைல்கல்லாக அமைந்தது. அப்படம் வெளியாகி சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கவுதம் மேனன் - கமல் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கவுதம் மேனன் நிதி நெருக்கடியில் சிக்கி 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தினை வெளியிட முடியாமல் தவித்த போது, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசர் கணேஷ் அவருக்கு உதவ முன் வந்தார். அந்த பணத்திற்க்கு பதிலாக மூன்று படங்களை இயக்கி தர வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஏற்கனவே ஐசரி கணேஷின் உறவினரான வருண் நடிப்பில் உருவான 'ஜோஷ்வா' படத்தினை முடித்து கொடுத்து விட்ட கவுதம் மேனன், அடுத்து சூர்யாவை வைத்து படம் இயக்கி தர முயன்று வந்தார். ஆனால் அது எதிர்பார்த்த பலனை தராத நிலையில் தான் கமலுடனான இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தற்போது நடைபெற்றுள்ள முதற்கட்ட பேச்சுவார்த்தையில் கமல் மற்றும் கவுதம் மேனனுடன் ஐசரி கணேஷும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது அடுத்த கட்டத்துக்கு செல்லும் பட்சத்தில் வேட்டையாடு விளையாடு - 2 படத்தினை வேல்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என தெரிகிறது.