கார்த்தியின் தாமதம் - கவுதம் பக்கம் ரூட்டை மாற்றிய 'கொம்பன்' முத்தையா..
கார்த்தியின் தாமதம் - கவுதம் பக்கம் ரூட்டை மாற்றிய 'கொம்பன்' முத்தையா..
நடிக்க வந்த புதியதில் வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்த கார்த்திக்கு, 'சகுனி' படத்திற்குப் பின் சில படங்கள் சரியாகப் போகவில்லை. இதனால் அவரது மார்க்கெட் சரியத் துவங்க, அப்போது அவருக்குப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தது முத்தையா இயக்கத்தில் உருவான 'கொம்பன்' திரைப்படம் தான். அந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் கார்த்தியின் மார்க்கெட் சூடு பிடிக்க அவர் அடுத்தடுத்த படங்களில் மும்முரமானார்.
மற்றொரு பக்கம் முத்தையா 'மருது', 'கொடி வீரன்' படங்களை இயக்கியவர் கடந்த ஆண்டு 'தேவராட்டம்' படத்தினை இயக்கினார். அந்த படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதும் நல்ல வசூலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் கார்த்தியை இயக்குவதற்காகக் காத்திருந்தார் முத்தையா.
கார்த்தி தற்போது 'சுல்தான்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' படங்களில் நடித்து வருகிறார். தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரத்தியேகமாகத் தோற்றத்தைப் பின்பற்றி வரும் கார்த்தி இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தால் மட்டுமே புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள முடியும். இதனால் முத்தையாவை அழைத்த கார்த்தி வேறு ஏதாவது படமிருந்தால் முடித்துவிட்டு வருமாறு கூறியிருக்கிறார்.
இதனையடுத்து ரெதான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் முத்தையா. இதில் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.