சீல் வைக்கப்பட்ட பகுதியை திறந்து விடக்கோரி குன்னூர் பள்ளிவாசல் தெரு மக்கள் போராட்டம் - தங்களை வெளியில் விட வேண்டும் என பிடிவாதம்!
சீல் வைக்கப்பட்ட பகுதியை திறந்து விடக்கோரி குன்னூர் பள்ளிவாசல் தெரு மக்கள் போராட்டம் - தங்களை வெளியில் விட வேண்டும் என பிடிவாதம்!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை திறந்துவிடக்கோரி குன்னுாரில், பள்ளிவாசல் தெரு மக்கள், சமூக விலகல் விதிகளை மீறி திடீர் போராட்டம் நடத்தினர்.
குன்னுார் ராஜாஜிநகர், பள்ளிவாசல் தெரு பகுதிகளில், மூன்று பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால், அப்பகுதி முழுக்க தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. சமீபத்தில் அவர்கள் குணமடைந்து திரும்பி வந்த நிலையில், கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று பள்ளிவாசல் சுற்றுப்புற பகுதி மக்கள், வண்டிப்பேட்டையில் திரண்டு, தங்களை வெளியில் விட வேண்டும் என, தெரிவித்து, கூட்டமாக நின்று போராட்டம் நடத்தினர்.
சமூக விலகல் விதிகளை மீறி நூற்றுக்கணக்கான மக்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நின்று போராடினர்.
இதனை தொடர்ந்து டி.எஸ்.பி., குமார், தாசில்தார் குப்புராஜ் உட்பட அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, 4 பேர் மட்டும், கூடுதல் கலெக்டர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்றனர்.
அதில், ஊரடங்கு வரும், 3 ஆம் தேதி வரை தொடரும் என, அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை கடைபிடிக்க வேண்டும்; அதற்கு பிறகு மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து பின்பு ஆலோசிக்கப்படும், என, தெரிவிக்கப்பட்டது.
இதன்பின்பு, கூட்டம் கலைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் உயிரை காக்க சமூக விலகலை கடைபிடித்து வரும் நிலையில், சீல் வைக்கப்பட்ட பகுதியை திறந்துவிடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.