'பஞ்சமி நில பதுக்கல்' விவகாரத்தில் மு.க. ஸ்டாலினை காய்ச்சி எடுத்தவர் தமிழக புதிய பா.ஜ.க. தலைவர் முருகன்!
'பஞ்சமி நில பதுக்கல்' விவகாரத்தில் மு.க. ஸ்டாலினை காய்ச்சி எடுத்தவர் தமிழக புதிய பா.ஜ.க. தலைவர் முருகன்!

தி.மு.க. வின் கட்சி பத்திரிக்கையான முரசொலி அலுவலகம் கட்டப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள நிலம் வேறு எவருக்கும் விற்பனை செய்யப்பட முடியாத அளவில் தாழ்த்தப்பட்டோரின் வறுமைப் போக்க ஒதுக்கப்பட்ட இடமாகும்.
அந்த இடத்தில்தான் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளது என்பது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறிய பிறகே தெரியும். அசுரன் படம் வெளிவந்த சமயத்தில், அந்தப் படத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் பார்த்ததுடன் இல்லாமல் அப்படத்தில் வரும் பஞ்சமி நில மீட்பு தொடர்பாகப் பாராட்டி ட்வீட்டும் செய்தார். இதைத் தொடர்ந்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம். உடனடியாக ஸ்டாலின் உரியவர்களிடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும்' எனக் கூறியதை அடுத்து பிரச்சினை பற்றி எரிய ஆரம்பித்தது.
இதுதொடர்பாக, ராமதாஸுக்குப் பதில் அளித்த ஸ்டாலின், `முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பட்டா இடம்' என்றும் அதற்கான ஆதாரமாகச் சில பட்டா, சிட்டா ஆவணங்களையும் வெளியிட்டார். ஆனால் `வெளியிட வேண்டியது மூலப் பத்திரம் தான், அதைக் காட்டுங்கள் முதலில் என கூறி ராமதாஸ் மீண்டும் பற்ற வைத்தார்.
இந்த நிலையில், `பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ள முரசொலி அலுவலக இடத்தை மீட்டு உரியவர்களிடம் வழங்க வேண்டும்' எனத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பா.ஜ.க சார்பாக ஸ்ரீனிவாஸ் என்பவர் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை அன்று விசாரணை செய்தவர் தற்போது பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் முருகன்தான். புகாரைப் பெற்றுக்கொண்ட முருகன் முதல் வேலையாக உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், உதயநிதி அப்போது ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி விளக்கம் கொடுத்தார்.
இதன் பின் இந்த விவகாரத்தில் ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் முருகன். முதலில் டெல்லி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறியவர், பின்னர் சென்னை அலுவலகத்தில் ஆஜரானால் போதும் என்று உத்தரவிட்டார். ஆனால், தி.மு.க தரப்போ, விசாரணைக்குத் தடை கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
வழக்கு விசாரணையின்போது முருகன் மீது நேரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது தி.மு.க தரப்பு. ``தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக உள்ள முருகன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர். அவர் தி.மு.க-வுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருகிறார்" என்று தி.மு.க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
இதை ஏற்ற நீதிமன்றம், ``ஆணையத்தின் விசாரணைக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக அவருடைய பிரதிநிதி ஆஜராகலாம் என்றும், ஆணைய துணைத்தலைவர் முருகன் மீது நேரடியாகக் குற்றச்சாட்டு கூறப்படுவதால், இந்த நிலம் தொடர்பான விசாரணையை முருகனுக்குப் பதில் வேறு ஒருவரை நியமித்து விசாரிக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.