ராகவா லாரன்ஸ் மீது வருத்தத்தில் இருக்கும் லிங்குசாமி, என்ன ஆயிற்று ?
ராகவா லாரன்ஸ் மீது வருத்தத்தில் இருக்கும் லிங்குசாமி, என்ன ஆயிற்று ?

'ஆனந்தம்', 'ரன்', 'சண்டகோழி', 'பையா' என பல பிரம்மாண்ட வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் லிங்குசாமி. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத தயாரிப்பு நிறுவனமாக இருந்தது, இவரது திருப்பதி ப்ரதர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம். அந்த நிறுவனத்தின் மூலம் பல நல்ல கதையம்சமுள்ள வெற்றிப் படங்களைத் தந்த நிலையில் அவர்கள் தயாரித்த 'அஞ்சான்' மற்றும் 'உத்தம வில்லன்' எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் அந்த நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது.
இதனால் சில வருடங்களாக எந்த படமும் இயக்காமலிருந்த லிங்குசாமி 2018ம் ஆண்டு விஷாலை வைத்து 'சண்டகோழி 2' படத்தினை இயக்கினார். அதுவும் சுமாராகவே ஓடியது. இதனால் அவருக்கு உதவும் பொருட்டு ராகவா லாரனஸ் அவருக்குத் தேதிகளை ஒதுக்கித் தந்தார். தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில், ராம் சரன் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற 'ரங்கஸ்தலம்' படத்தினை ராகவா லாரன்சை வைத்து ரீமேக் செய்வதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் லிங்குசாமி.
இந்நிலையில் தான் திடீரென லிங்குசாமிக்குக் கொடுத்த தேதிகள் அனைத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'சந்திரமுகி 2' படத்திற்குக் கொடுத்துவிட்டாராம். 'ரங்கஸ்தலம்' ரீமேக் மூலம் எப்படியாவது மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையிலிருந்த லிங்குசாமிக்கு ராகவா லார்ன்ஸ் இப்படிச் செய்தது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். இதனால் அவர் மீது வருத்தத்தில் இருக்கிறாராம்.