ஒரு நபருக்காக லட்சக்கணக்கானோரை தனிமைப்படுத்த முடியாது - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பிடிவாதம்!
ஒரு நபருக்காக லட்சக்கணக்கானோரை தனிமைப்படுத்த முடியாது - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பிடிவாதம்!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்த பிரதமர் நரேந்திர மோடி, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை நல்ல பலனை கொடுத்துள்ளது. இதன் மூலம், கடந்த ஒன்றரை மாதங்களில் ஆயிரக்கணக்கானோரின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அபாயம் இன்னும் முடிவுக்கு வருவதற்கு நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளதால், தொடர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
நாம் இரண்டு விதமான முடக்க நிலைகளை பார்த்துவிட்டோம். எனவே, அடுத்த கட்டத்தை குறித்து யோசிக்க வேண்டும். வல்லுநர்களின் கருத்துப்படி, அடுத்து வரும் மாதங்களிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர கூடும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் கொரோனா பாதித்த நபர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஒரு நபருக்காக லட்சக்கணக்கானோரை தனிமைப்படுத்த முடியாது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மத்திய அரசு சொல்வதற்கும், உத்தரவுகளுக்கும் முரண்பாடுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.