தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்கங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் புதுச்சேரியில் நடத்த தடை!
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்கங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் புதுச்சேரியில் நடத்த தடை!

நாடு முழுவதும் கொரோனா வைரசால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் வகையில் புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை வாயிலாக பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
நலவழித்துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பிரச்சாரத்தை சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இயக்குநர் மோகன்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இரண்டு பிரச்சார வாகனங்களில் கொரோன வைரஸ் வராமல் தடுக்கும் முறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேனர்கள் ஏந்தியவாறு புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார இயக்குநர் மோகன்குமார், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், இருந்தாலும் புதுச்சேரி வரும் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடங்கியுள்ளதாக கூறிய அவர், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்கங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் புதுச்சேரியில் நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.