தஹில் ரமானி விவகாரத்தில் அனைத்து விஷயங்களையும் வெளியிட முடியாது ! இது கொலிஜியத்தின் ஒருமனதான முடிவு !! உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!!
தஹில் ரமானி விவகாரத்தில் அனைத்து விஷயங்களையும் வெளியிட முடியாது ! இது கொலிஜியத்தின் ஒருமனதான முடிவு !! உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!!
By : Kathir Webdesk
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான தஹில் ரமானி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் போன்ற பெரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் தம்மை மேகலயா போன்ற மூன்று நீதிபதிகள் மட்டுமே உள்ள இடத்துக்கு மாற்றுவது குறித்து அவர் ஆட்சேபம் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், கொலிஜியத்தை முடிவை எதிர்த்து அவர் குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அளித்ததைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் சிலர் இந்த விவகாரத்தை அரசியல் படுத்தினர்.
இந்த நிலையில், நீதிபதி தஹில் ரமானியின் பணியிட மாற்றத்துக்கு பரிந்துரை செய்த கொலிஜியம் குழுவைக் கண்டித்து, தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தினர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம், தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீதிபதிகள் பணியிடமாற்றம் தொடர்பாக கொலிஜியம் குழு, தானாக முன்வந்து விளக்கமளித்துள்ளது.
அதில், நீதிபதிகள் பணியிட மாற்றம் தகுந்த காரணங்களை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் இடமாற்றம் சட்டநெறிமுறைகள் படியும், நீதித்துறையின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவுமே செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஒவ்வொரு பரிந்துரையும் கொலிஜியத்தின் முழுமையான முடிவின்படி ஒரு மனதாக எடுக்கப்படுவதாகவும் விளக்கமளிக்கப் பட்டுள்ளது. நீதித்துறையின் நலன் கருதி பணியிட மாற்றத்திற்கான காரணங்களை வெளியிட முடியாது எனவும், அதற்கு அவசியம் ஏற்பட்டால் , விளக்கம் அளிக்க கொலிஜியத்துக்கு எந்தத் தயக்கமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.