கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக காரைக்காலில் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை!
கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக காரைக்காலில் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை!

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சட்டபேரவை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண், சுகாதாரதுறை அதிகாரிகள் மற்றும் அரசு செயலாளர்கள் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 16 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு,14 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை குறித்த ரிசல்ட் வரவில்லை என்பதால் 2 பேர் மட்டும் தனி அறையில் கண்காணிப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இதுவரை கொரோனா நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை.
தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நிதியும் ஒதுக்கபட்டுள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் மாஸ்க் பற்றாக்குறை காரணமாக, மத்திய அரசு மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில எல்லைகளில் சுற்றுலாப்பயணிகள் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு தொடர்ந்து தேவையான அறிவுரைகளை தெரிவித்து வருகிறது என்று தெரிவித்த அவர், காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நளன் தீர்த்த குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர் மட்டும் தெளிக்கபடும். மருத்துவர்கள் குழு மூலம், பக்தர்கள் கண்காணிப்படுகிறார்கள் என்றார்.