Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு.! #PMModi #IndianIndustrial

இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு.! #PMModi #IndianIndustrial

இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு.! #PMModi #IndianIndustrial

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 July 2020 2:32 AM GMT

'இந்திய குளோபல் வாரம்-2020' என்ற பெயரில் 3 நாள் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 30 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெருந்தொற்று நோயான கொரோனாவுக்கு எதிராக இந்தியா தீவிரமாக போராடிக் கொண்டு இருக்கிறது. மக்களின் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்தியா தனக்கு ஏற்படும் சவால்களை, அது சமூக ரீதியிலான சவால்களாக இருந்தாலும் அல்லது பொருளாதார சவால்களாக இருந்தாலும் அவற்றை வென்று சாதனை படைத்து இருப்பதை வரலாறு காட்டுகிறது.

இந்தியர்கள் இயற்கையிலேயே சீர்திருத்தவாதிகள். இந்தியா எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொண்டு வளர்கிறது. முடியாது என்று சொல்லப்படுவதை சாதித்து காட்டும் உத்வேகம் இந்தியர்களிடம் உள்ளது.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எங்களுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. அவை உலகத்துக்கு சொந்தமானவை என்றுதான் கருதுகிறோம். உலகில் உள்ள குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பு மருந்தில் மூன்றில் இரு பங்கை இந்தியா தயாரித்து வழங்குகிறது. மருந்துகளின் விலையை குறைப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் எங்களின் இந்த பங் களிப்பு முக்கியமாக உள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்த விஷயத்தில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சர்வதேச அளவில் மேற்கொள்ளும் முயற்சிகளில் பங்கேற்று உள்ளன. மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் இந்தியா அதை அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்கும். இந்த உலகத்தின் நன்மைக்காகவும், வளத்துக்காகவும் தேவையான அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், 1979-ம் ஆண்டுக்கு பிறகு பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அதை சமாளிக்கும் வகையில் ரூ.20 லட்சத்து 97 ஆயிரம் கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை இந்திய அரசு அறிவித்து உள்ளது.

தொழில்நுட்ப வசதிகள் மூலம் இலவச சமையல் கியாஸ், ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது, இலவச உணவு தானியம் போன்ற அரசின் உதவிகள் மக்களை நேரடியாக சென்று அடைகிறது.

ஆசியாவின் 3 பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா 'தற்சாற்பு இந்தியா' பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. அத்துடன் உலகில் திறந்த பொருளாதார கொள்கையை கொண்ட நாடாகவும் விளங்குகிறது.

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு வெளிநாட்டு நிறுவனங்களை நாங்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம். இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நாடுகள்தான் இதுபோன்ற வரவேற்பை அளிக்கும். இந்தியாவில் தொழில் தொடங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே எங்கள் அழைப்பை ஏற்று வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வர வேண்டும். வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

அன்னிய முதலீடு தொடர்பாகன கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் பாதுகாப்பு துறையில் முதலீடு செய்ய அதிக வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதேபோல் வேளாண்மை உள்ளிட்ட துறைகளிலும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன.

தொழில்நுட்ப துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. திறமைவாய்ந்த ஏராளமான நிபுணர்கள் நம் நாட்டில் உள்ளனர். அவர்களுடைய திறமை இந்தியாவின் வளர்ச்சிக்கும், உலகத்தின் மேம்பாட்டுக்கும் பயன்படுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் வீட்டு வசதி, அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது, தொழில் தொடங்குவதில் உள்ள நடைமுறைகளை எளிமையாக்குவது, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளில் சீர்திருத்தங்கள் போன்றவற்றை செய்ததற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News