க.அன்பழகன் மறைவு - பொன்.இராதாகிருஷ்ணன் இரங்கல் செய்தி
க.அன்பழகன் மறைவு - பொன்.இராதாகிருஷ்ணன் இரங்கல் செய்தி

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் தி.மு.க வின் அரணாக. கொள்கைக் குன்றாக திகழ்ந்தவரும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன் என முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் மிக மூத்த தலைவரான பேராசிரியருடன் தனிப்பட்ட முறையில் பலமுறை பழகியபோது அவரது அறிவுக்கூர்மையை பார்த்து வியந்துள்ளேன். நம் சந்தேகங்களுக்கு தெளிவைத் தந்தபோதெல்லாம் எவ்வித பெருமையும் அவர் கொண்டதில்லை. தெளிந்த நீரோடை போன்ற அவரது வாழ்வு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாத தன்மை எளிய வாழ்க்கைமுறை இவற்றை இன்றைய அரசியல்வாதிகள் கற்க வேண்டிய ஒன்று. தான் கொண்ட கொள்கையில் தன் வாழ்நாள் முழுவதும் உறுதியுடன் நின்று ஏற்ற தலைமைக்கு பக்கபலமாக நின்று கட்சிக்கு இடர் வந்தபோதெல்லாம் அரணாக நின்று காத்துவந்த பேராசிரியர் அவர்களின் இழப்பு தி.மு.கவிற்கும் தொண்டர்களுக்கும் ஈடுசெய்ய இயலாத பேரதிர்ச்சியாகும். நம்மைவிட்டு பிரிந்த பேராசிரியர் ஆத்மா நற்கதி அடைய அன்னை சக்தியை வேண்டுகிறேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், திமுக தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் மன அமைதியை அன்னை சக்தி அருள வேண்டுகிறேன் என முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்