எதற்கும் கவலைப்பட தேவையில்லை - தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் தேவைக்கு அதிகமாகவே செயல்படும் ஆரம்ப சுகாதார மையங்கள்!
எதற்கும் கவலைப்பட தேவையில்லை - தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் தேவைக்கு அதிகமாகவே செயல்படும் ஆரம்ப சுகாதார மையங்கள்!

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வருங்காலத்தில் ஏற்படக் கூடிய மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போதுமான அளவுக்கு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட கிராமப்புறங்களில், ஆண்டு மத்தியில் காணப்படும் மக்கள் தொகை மற்றும் கிராமப்புறங்களில் பழங்குடியின மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற சுகாதார மையங்களின் தேவை பற்றிய புள்ளிவிவர பட்டியல் ஒன்றை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி,
தமிழ்நாட்டின் கிராமப்புற மக்கள் தொகை ஆண்டு மத்தி வாக்கில் 3,63,48,000 ஆகவும், கிராமப்புற பழங்குடி மக்களின் எண்ணிக்கை 6,44,645 ஆகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கேற்ப 7,355 சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், தேவைக்கு அதிகமாகவே 8,713 நலவாழ்வு மையங்கள் உள்ளன. இதே போன்று ஆரம்ப சுகாதார மையங்கள் 1222 தேவைப்படும் நிலையில், தேவைக்கு அதிகமாக 1422 ஆரம்ப சுகாதார மையங்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று சமுதாய சுகாதார மையங்களும், 305 தேவைப்படும் நிலையில் அதிலும் தேவைக்கு அதிகமாகவே 385 மையங்கள் ஏற்கனவே இயங்கி வருவதால் தமிழ்நாட்டில் சுகாதார மையங்களுக்கு பற்றாக்குறை ஏதுமில்லையென மத்திய இணை அமைச்சர் திரு.அஸ்வினி குமார் சவ்பே தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செப்டம்பர் 2019 வரை 24,389 சுகாதார பணியாளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதுடன் 573 முதல் நிலை சிகிச்சை மையங்களும், 415 நடமாடும் மருத்துவ சிகிச்சை குழுக்களும் தமிழ்நாட்டில் உள்ளன. இது தவிர 936 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 3965 அங்கீகரிக்கப்பட்ட சமுதாய சுகாதார ஆய்வலர்களும் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1315 24மணி நேர ஆரம்ப சுகாதார மையங்கள் இருப்பதுடன், 2587 ரோஹி கல்யாண் சமிதிகளும் 15,015 கிராம சுகாதார துப்புரவு மற்றும் ஊட்டச்சத்து குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அரசு மருத்துவக் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தஞ்சை மருத்துவக் கல்லூரி மேம்பாட்டுப் பணியின் மூன்றாம் கட்டம் 2018-19 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.