கடுமையான நடவடிக்கைகளை முடக்கி விட்ட புதுச்சேரி முதல்வர்.. முழு தகவல்கள் இங்கே..
கடுமையான நடவடிக்கைகளை முடக்கி விட்ட புதுச்சேரி முதல்வர்.. முழு தகவல்கள் இங்கே..

புதுச்சேரியில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக நாளை முதல் பால் மற்றும் மருந்தகங்களை தவிர பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி,
விவசாய பொருட்களான இடுபொருட்கள், உரம் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதாக புகார்கள் வந்துள்ளது. விவசாயிகளுக்கு உரம், இடுபொருள் மற்றும் விளைந்த பொருட்களை எடுத்து செல்வது முக்கியமானதாகும். விவசாயிகள் அவற்றை கொண்டு செல்ல காவல்துறை கட்டுப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு விவசாயப் பொருட்கள் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. கால்நடை தீவணம் கொண்டு செல்வதற்கும், அவற்றை விநியோகம் செய்யவும் எந்த தடையும் இல்லை. உரம், இடுபொருள் கடைகள் திறந்திருக்கும். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போலீசார் நடந்துகொள்ள வேண்டும்.
வாழை, பூ போன்றவற்றை பயிர் செய்த விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வியாபாரிகள் மார்க்கெட் வரமுடியாத காரணத்தினால் அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று கொடுக்கும்திட்டம் அமல்படுத்தப்படட்டுள்ளது. புதுச்சேரியில் நாம் நாள் முழுவதும் கடைகளை திறந்திருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறுக்கு வழியாக புதுச்சேரிக்குள் நுழைகின்றனர். நம் மாநில மக்களும் நினைத்த நேரத்தில் பொருட்களை வாங்குவதாக கூறி வெளியில் திரிகின்றனர். எனவே
பால் மற்றும் மருந்தகங்ககளை தவிர மற்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் அனைத்து கடைகளும்
காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் பங்குகளும் அடங்கும். ஆன்லைனில் மளிகை பொருட்களை கேட்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் கொடுக்கப்படும். மக்கள் வெளியில் உலாவினால் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்க முதலில் செலுத்தப்படும். இன்னும் 3 நாட்களுக்குள் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தேவைப்பட்டால் தனியார் மருத்துவ கல்லுரிகளையும் அரசு கையில் எடுத்து நோயாளிகளை பரிசோதிக்க பயன்படுத்திக்கொள்வோம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.