Kathir News
Begin typing your search above and press return to search.

#Opinion ஆப்பிரிக்காவில் சரிந்து வரும் சீன செல்வாக்கு.! சீனாவை விரட்டியடிக்கத் தயாராகும் உலக சக்திகள்.!

அமெரிக்க-சீன போட்டிகள் ஆப்பிரிக்க கண்டத்தில் நுழைகின்றன.

#Opinion ஆப்பிரிக்காவில் சரிந்து வரும் சீன செல்வாக்கு.! சீனாவை விரட்டியடிக்கத் தயாராகும்  உலக சக்திகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 2:28 PM GMT

ஆப்பிரிக்காவை காலனிப்படுத்த முயற்சிக்கும் சீனாவின் பிரம்மாண்டமான முயற்சிகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளது. ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன. இது அங்கே சீன செல்வாக்கை பெருமளவில் குறைக்கும் என நம்பப்படுகிறது. சமீபத்திய SCMP அறிக்கையின்படி அமெரிக்கா, வடக்கு மொசாம்பியூவில் ஒரு பிரம்மாண்டமான LNG திட்டத்திற்கு நிதி உதவி வழங்குகிறது. இதன் மூலம் அமெரிக்க-சீன போட்டிகள் ஆப்பிரிக்க கண்டத்தில் நுழைகின்றன.

இந்தத் திட்டம் ஆப்பிரிக்காவில், அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீடாகும். இதற்கு நிதி உதவியாக 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை வழங்க அமெரிக்காவின் ஏற்றுமதி- இறக்குமதி வங்கி (Exim) ஒப்புதல் வழங்கியுள்ளது. சப்- சஹாரன் ஆப்பிரிக்காவை பொருத்தவரை, இதுதான் அந்த வங்கியின் மிக அதிகமான நேரடியான கடனுதவி ஆகும். இது அமெரிக்காவிற்கு மொசாம்பியுவிலுள்ள LNG திட்டத்திற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் அங்கே கட்டுமானம் செய்யவும் உதவியாக இருக்கும்.

இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான விரோதம் இருக்கிறது. ஏனெனில் இந்த LNG திட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனா அரசாங்கங்களும் மிகுந்த ஆர்வம் காட்டினர். அவர்களை வீழ்த்தி அமெரிக்கா இந்த திட்டத்தை வென்றுள்ளது. இது தான் 'கடன் கொடுத்து மாட்ட வைக்கும்' ராஜதந்திரத்தை ஆப்பிரிக்காவில் பின்பற்றும் சீனாவின் ஆதிக்கத்திற்கு விழுந்த முதல் பெரிய அடியாகும். சீனா, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி மட்டுமல்ல, அதற்கு அதிகமாக கடன் கொடுத்த நாடும் சீனா தான். மொத்தத்தில் ஆபிரிக்கா மட்டும் சீனாவிற்கு 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் தர வேண்டியிருக்கிறது.

அமெரிக்க Exim வங்கி தலைவர் கிம்பர்லி ரீட் கூறுகையில், "சீனாவும் ரஷ்யாவும் இந்த திட்டத்தில் நிதியுதவி வழங்க ஆர்வம் காட்டுவதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது." என்று தெரிவித்தார்.

ரீட் மேலும் கூறுகையில், "இந்தத் திட்டம், புத்துயிர் பெற்ற Exim வங்கி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் போட்டி மிகுந்த உலக சந்தையில், சீனா, ரஷ்யா முதலிய நாடுகளை முந்த எப்படி உதவக்கூடும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு" என்று தெரிவித்தார்.

Exim வங்கியில் கடன் உதவியை கொண்டு, வாங்கிக் கொடுக்கப்பட்ட அமெரிக்க உபகரணங்களை ஒரு பிரென்ச் எண்ணெய் நிறுவனமான டோட்டல் LNGயின் உற்பத்தியில் பயன்படுத்தும். சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இருக்கும் நீண்ட கால இருதரப்பு உறவுகளை எதிர்கொள்வதில், அமெரிக்கா தனியாக இல்லை. ஜப்பான் ஏற்கனவே டோட்டல் LNG திட்டத்திற்கு 'சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியின்' மூலம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி செய்துள்ளது.

அமெரிக்கா, தனது செல்வாக்கையும் இடத்தையும் ஆப்பிரிக்காவில் கொண்டு வருவதற்கு இந்த பிப்ரவரி முதலே வேலையை ஆரம்பித்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தார். செனிகல், அங்கோலா மற்றும் எத்தோப்பியா. சீனா பில்லியன் கணக்கான டாலர்களை இந்த நாடுகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. பாம்பியோ இத்தகைய 'கடன் கொடுத்து மாட்ட வைக்கும்' சீனாவின் திட்டங்களால் ஏற்படும் சுமையை குறித்து நீண்ட நேரம் பேசினார். சீனாவின் இந்த ராஜதந்திரத்தை எதிர்கொள்ள அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் தனது திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிக்கும் என ஒப்புக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ஜப்பானைத் தவிர, இந்தியாவும் ரஷ்யாவும் ஆப்பிரிக்காவில் சீன மேலாதிக்கத்திற்கு சவால் விடுகின்றன. மே மாதத்தில், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள மினிரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்தியாவின் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் (IRCON), ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் ரயில்வே மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக அரசுக்கு சொந்தமான ரஷ்ய ரயில்வே நிறுவனத்தின் துணை நிறுவனமான ZD இன்டர்நேஷனல் LLC யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சீனாவின் பல கண்டங்களைக் கடக்கும் உள்கட்டமைப்புத் திட்டமான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) ஆப்பிரிக்கா உட்பட, உலகத்தில் பல பகுதிகளிலும் கடும் எதிர்ப்புகளை கொரானாவுக்கு பிந்தைய காலத்தில் சந்தித்து வருகிறது. இந்த வெற்றிடத்தை நெடுநாளைய பங்காளிகளான ரஷ்யாவும் இந்தியாவும் நிரப்ப முடிவு செய்துள்ளன.

சமீபகாலமாக சீனா ஆப்பிரிக்காவிலிருந்து பல கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டம் தனது வேகத்தை இழந்து வருகிறது, ஏனெனில் கென்யா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் இருக்கும் சீன திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த வருடம் கருப்பர்களுக்கு எதிரான இன வாதமும், சீனாவின் 'கடன் கொடுத்து மாட்ட வைக்கும்' ராஜதந்திரமும் ஆப்பிரிக்காவில் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளாக மாறின.

சீனாவில், கொரானாவைப் போராடுவதாகக் கூறி ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக சீன அரசினால் செய்யப்படும் குற்றங்களும், தங்கள் கடனை ரத்து செய்யக்கோரும் ஆப்பிரிக்காவின் கோரிக்கைகளும், சீனாவின் செல்வாக்கினை ஆப்பிரிக்காவில் அழித்து வருகின்றன. மோடி அரசாங்கம் சீனா இழந்துவரும் செல்வாக்கை, இந்தியா பெறுவதற்கு வழிகளை கண்டறிந்து வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், புர்கினோ பாசோ, கொமொரோஸ், உகாண்டா, மாலி, நைஜர், நைஜீரியா ஆகிய நாடுகள் உடனான தனது உரையாடலை தொடர்ந்து விரிவு செய்து வருகிறார்.

பல்லாண்டுகளாக ஆப்பிரிக்கா, உலகத்தின் மிகுந்த புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது. ஐரோப்பா, ஆப்பிரிக்க கண்டத்தை கண்டு கொள்ளவேயில்லை. இத்தனைக்கும், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி முதலிய முன்னணி ஐரோப்பிய நாடுகளின் பல முன்னாள் காலனிகள் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. உதாரணமாக லிபியா, எரித்திரியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தன்சானியா மற்றும் சூடான்.

ஆப்பிரிக்காவில் தன் வழியை கண்டறிந்து தனது கிளைகளை 'கடன் கொடுத்து மாட்ட வைக்கும்' தந்திரங்கள் மூலமும், வர்த்தகங்களின் மூலமும் சீனா பரவச் செய்தது. எவ்வாறாயினும், தற்போது மற்ற உலக சக்திகளான அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சீனாவின் சரிந்து வரும் செல்வாக்கின் பின்னணியில் ஆப்பிரிக்காவில் போட்டியிட துவங்கியுள்ளனர். இவ்வாறு பெரிய சக்திகள், சீனாவை ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற்ற தயாராகி வருகின்றன.

Translated From: https://tfipost.com/2020/08/china-had-colonised-africa-but-then-came-us-india-japan-and-russia-to-kick-it-out/


Next Story
கதிர் தொகுப்பு
Trending News