Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவின் கொட்டத்தை அடக்க இந்தியாவுடன் கைகோர்க்கும் உலக நாடுகள் - திருப்புமுனை ஆனதா கல்வான் தாக்குதல்? #Replug

சீனாவின் கொட்டத்தை அடக்க இந்தியாவுடன் கைகோர்க்கும் உலக நாடுகள் - திருப்புமுனை ஆனதா கல்வான் தாக்குதல்? #Replug

சீனாவின் கொட்டத்தை அடக்க இந்தியாவுடன் கைகோர்க்கும் உலக நாடுகள் - திருப்புமுனை ஆனதா கல்வான் தாக்குதல்? #Replug

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 1:49 AM GMT

COVID-19 என்ற‌ கொடிய வைரஸைப் பரப்பி விட்டது மட்டுமல்லாமல் இது தான் சமயம் என்று ஒரு பெருந்தொற்றை சமாளிக்க போராடிக் கொண்டிருக்கும் நாடுகளை எல்லைகளில் பிரச்சினை செய்து சீண்டிப் பார்க்கிறது சீனா‌. நில ஆக்கிரமிப்பு மோகத்தில் உலக அமைதியை விரும்பும் இந்தியாவுடன் தேவையில்லாமல் சீனா மோதல் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்த உடனேயே தெற்காசியப் பகுதியில் உள்ள பிற நாடுகள் உஷாராகி விட்டன. அமெரிக்காவும் எங்கே தனது பெரியண்ணன் போக்கிற்கு ஜி ஜின்பிங் வேட்டு வைத்து விடுவாரோ என்று சீனாவின் ஏகாதிபத்திய கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கி விட்டது.

கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15 மாலை ஏற்பட்ட மோதலுக்கு முன்னரே இந்திய-ஆஸ்திரேலிய அரசுகள் பாதுகாப்பு மற்றும் இராணுவ தளவாட பகிர்தல் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட போது சீனாவின் அரசு ஊடகமான Global Times 'சீனாவிற்கு எதிராக கைகோர்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது' என்கிற ரீதியில் வயிற்றெரிச்சலை பொது வெளியில் கொட்டிக் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் வங்கி சேவைகளை குலைக்க ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட‌ 40,000 முறை சீன ஹேக்கர்கள் முயற்சி செய்ததாக ‌செய்திகள் வெளிவந்தன. இது நடந்து சில நாட்களிலேயே ஆஸ்திரேலிய வங்கி சேவைகள்‌ தொடர்பான தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு ‌மீதும்‌ சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. வெளிப்படையாக சீனா தான் இதற்கு காரணம் என்று ஆஸ்திரேலிய அரசு கூறாவிட்டாலும் அறிக்கையில் கொடுக்கப்பட்ட‌ குறிப்புகளே போதுமானதாக இருந்தன.

தற்போது லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறிய துரோகச் செயலுக்குப் பின் ஜப்பானும் உஷாராகி தனது சென்ககு தீவுகளை நோக்கித் தான் சீனாவின் அடுத்த நகர்வு இருக்கும் என்று உணர்ந்து அந்த தீவுகளைச் சுற்றி ஏவுகணைகள் மற்றும் கடற்படையை நிலைநிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியது. கடந்த 80 நாட்களாக சீன கடலோரக் கப்பற்படை சென்ககு தீவுகளைக் சுற்றி வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவின் எல்லா நகர்வுகளையும் ஜப்பானால் கண்காணிக்க முடியவில்லை என்பதால் இதுவரை அமெரிக்காவுடன் மட்டும் அரசு ரகசியங்களைப் பகிர்ந்து வந்த ஜப்பான் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இந்தோ-பசிபிக் நாடுகளுடனும் பாதுகாப்பு சார்ந்த ரகசிய தகவல்களைப் பகிரும் வகையில் அரசு ரகசிய சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

இதன் மூலம் சீன துருப்புகளின் நகர்வுகளைப் பற்றிய அதி முக்கியமான உளவுத் தகவல்களை அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா, ஃப்ரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனும் ஜப்பான் பகிர்ந்து கொள்ள முடியும். இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளுடனும் ஜப்பான் ஒப்பந்தங்களில கையெழுத்திட்டுள்ளது. இவற்றின் நோக்கம் இந்த நாடுகள் ராணுவ மற்றும் உளவு ரகசியங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக பகிர்ந்து கொள்வதோடு அவற்றை வெளியே கசிய விடாமல்‌ பாதுகாக்க வேண்டும் என்பதும் தான்.

தனக்கும் தனது கூட்டாளி நாடுகளுக்கும் சீனாவால் ஆபத்து என்று உணர்ந்துள்ள ஜப்பான் சீனாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முயல்கிறது.இதன் மூலம் சுய பாதுகாப்புக்காக இணைந்து செயல்படும் வகையில் தோழமை நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி ஜப்பானுக்கு ஆபத்து ஏற்பட்டு போரில் ஈடுபட வேண்டிய சூழ்நிலையில் எரிபொருள், வெடிபொருள் மற்ற பிற ராணுவத்துக்கு தேவைப்படும் தளவாடங்களை தோழமை நாட்டு ராணுவங்களுக்கு கொடுத்து உதவுவதே ஜப்பானின் நீண்ட கால இலக்கு.

இவற்றையெல்லாம் செய்வதற்கு தோழமை நாட்டு ராணுவங்களின் அளவு, திறன் மற்றும் எங்கு அவை செயல்படுகின்றன என்பது பற்றிய விவரங்கள் தேவைப்படும். இவையெல்லாம் மிக முக்கியமான ராணுவ ரகசியங்கள். ஆனால் முக்கியமான உளவுத் தகவல்கள் கிட்டும் போது அவற்றைப் பயன்படுத்தி செயலில் இறங்க இந்த ரகசியங்களை தோழமை நாடுகளும் சரி ஜப்பானும் சரி, அறிந்து கொள்வது அவசியம். இதற்குத் தான் தனது நாட்டு சட்டத்தை ஜப்பான் திருத்தி அமைத்துள்ளது.

இது அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பான் ஆகிய இந்தோ-பசிபிக் நாடுகளின் அறிவிக்கப்படாத கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும்.

கடந்த மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தான பாதுக்காப்பு துறையில் ஒத்துழைப்பது குறித்த ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு ராணுவங்களும் உணவு, நீர் மற்றும் பெட்ரோலியம் ஆகிய தேவைகளுக்காக இரு நாட்டு‌ துறைமுகங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தான் இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்தியா அமெரிக்காவுடன் ஏற்கனவே இதே போன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இடையிலும் இந்த மாதிரியான ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. இதில் விடுபட்டு வந்தது ஜப்பான் மட்டும் தான்.

ஜப்பானும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இத்தகைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டால் இந்தோ-பசிபிக் நாடுகளின் கூட்டமைப்பு முழுமையடைந்து விடும்.

வியட்நாமால் சொந்தம் கொண்டாடப்படும் பாரசல் தீவுகளை ஒட்டி சீன கடற்படை பயிற்சி செய்கிறேன் பேர்வழி என்று தென் சீனக் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தை தடை செய்யும் வேலையில் இறங்கி இருப்பது வியட்நாமை மட்டுமல்லாமல் பிலிப்பைன்ஸையும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. தென் சீனக் கடலே தனக்குத் தான் சொந்தம் என்பது போல் அராஜகம் செய்து வரும் சீனா தன்னிடம் வம்பு வைத்துக் கொண்டால் எல்லா வகையிலும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவுக்கு அருகில் இருக்கிறது என்று சொல்லக் கூடிய கடல் பகுதியிலிருந்து பாரசல் தீவுகள் 180கிமீ தொலைவில் உள்ளது என்பதும் ஆசிய நாடுகளிலேயே பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ தான் அமெரிக்க நட்பைத் துண்டிக்க துடித்ததோடு சீனாவுக்கு ஆதரவாகவும் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சீனாவின் அத்துமீறிய ஏகாதிபத்திய கொள்கை அவரையும் அசைத்து விட்டது போலும். கடந்த மாத இறுதியில் நடந்த ஆசியான் மாநாட்டின் போது வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை சமாளிக்க நாடுகள் போராடிக் கொண்டிருக்கும் போது தென் சீனக் கடலில் அச்சுறுத்தும் வகையிலான விஷயங்களை நடந்தன என்று வெளிப்படையாகவே சீனாவைத் தாக்கிப் பேசினர்.

இந்தோ-பசிபிக் பகுதியில் இருக்கும் நாடுகள் அனைத்தும் சீனாவால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணரந்துள்ளதால் சீனாவின் 'முத்துமாலை' (String of Pearl) என்ற நாடுகளை வளைத்துப் போடும் திட்டத்தைப் போல் சீனாவால் அச்சுறுத்தப்படும் நாடுகள் இணைந்து சீனாவைச் சுற்றி வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

சீனா கடன் கொடுத்தும் பிற நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு குழப்பம் விளைவித்தும் அந்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. ஆனால் இந்தோ பசிபிக் நாடுகளும், ஏன் வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற ஆசியான் நாடுகளும் கூட தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் சீனாவுக்கு எதிராக ஒன்றிணைய விழைகின்றன. இந்த நாடுகள் தாங்களாக, வலிய, போருக்குக் கூடச் செல்லவில்லை. தங்களுக்கு உரிமையான பகுதிகளை அபகரித்து ஆக்கிரமிக்க நினைக்கும் சீனாவிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவே நினைக்கின்றன.

இந்த அமைப்பு அனைத்துதிசைகளில் இருந்தும் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க பெரிதும் உதவியாக இருக்கும். சீன கடற்படை மலாக்கா ஜலசந்திக்கு வடமேற்காக நகர்ந்தால் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள கண்காணிப்பு வசதிகளைப் பயன்படுத்தி இந்தியாவும், மலாக்கா ஜலசந்திக்கு தென்கிழக்காக நகர்ந்தால் கோகோ தீவுகளில் இருக்கும் கண்காணிப்பு வசதியைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவும்சீன கடற்படை நிலைகளை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு தோழமை நாடுகளுக்கு தகவல் பரிமாற முடியும்.

இதேபோல் சீன கடற்படை சர்வதேச கடற்பகுதியில் கடல் போக்குவரத்தை தடை செய்து விடுவோம் என அச்சுறுத்தி வரும் கிழக்கு மற்றும் தென் சீன கடல் பகுதிகளை ஜப்பான் கண்காணித்து தகவல்களை பிற நாட்டு ராணுவங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். சர்வதேச கடல் பகுதியில் சுதந்திரமான சரக்குப் போக்குவரத்தை விரும்பும் ஆஸ்திரேலியா அமெரிக்கா மற்றும் இந்திய நாடுகளுக்கு இது மிக முக்கியமான விஷயம்.

தற்போது இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளும் ஹாங்காங் விஷயத்தில் சீன எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளன.இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஹாங்காங் குடிமக்கள் அடுத்த 5 வருடங்களுக்கு இங்கிலாந்தில் குடியேறி குடியுரிமையும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடு கடத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் முக்கியமான ராணுவ தளவாடங்களை ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் சீனா ஊடுருவியதை மோடி மறைக்கிறார் என்று சிறுபிள்ளைத் தனமாக அரசியல் செய்து கொண்டிருக்கும் போது உலக அரசியலையே ஜூன் 15 நிகழ்வுகள் புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன. "இந்தியா தனியாகத்தான் போருக்குப் போக வேண்டி இருக்கும்; தோல்வி நிச்சயம்; மோடியின் வெளியுறவுக் கொள்கையால் போர் வந்தது தான் மிச்சம்" என்கிற ரீதியில் எட்டப்பர்கள் கதறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா முக்கியமான உலக நாடுகளை இணைக்கும்‌ மையப்புள்ளியாக உயர்ந்து நிற்கிறது. தீவிரவாத நாடான பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது போல் சீனாவும் அதன் ஏகாதிபத்திய போக்கால் தனிமைப்படுத்தப்படும் காலம் வெகுதூரமில்லை என்றால் அது மிகையாகாது.

Next Story