மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆலய யானை பூக்களை சுமந்து வர சமயபுரம் அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா! இன்று பிரம்மிப்புடன் தொடங்கியது!
மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆலய யானை பூக்களை சுமந்து வர சமயபுரம் அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா! இன்று பிரம்மிப்புடன் தொடங்கியது!

தமிழகத்தில் சக்தி வழிபாட்டு திருத்தலங்களில் முதன்மையாக விளங்குவது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக் கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். இக்கோயிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முதன்மையானது பூச்சொரிதல் விழா.
பூச்சொரிதல் விழா நடைபெறும் 28 நாட்கள் பக்தர்களின் நன்மைக்காக அம்பாள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளும் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். பச்சை பட்டினி விரதத்தின் போது அம்பாளுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு, இளநீர், பானகம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா இன்று காலை தொடங்கியது. இன்று அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்ணியவஜனம், அனுக்கை, வாஸ்துசாந்தி, அங்கரார்ப்பணம் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு காலை 7 மணியளவில் கோயில் நிர்வாகம் சார்பாக முதல் பூ தெற்கு ரத வீதியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
தேரோடும் வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பூக்கள் பின்னர் அம்பாளுக்கு சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
தொடர்ந்து அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்பு கட்டுதல் நிகழ்வுக்குப் பிறகு அம்பாள் பக்தர்களின் நலனுக்காக பச்சை பட்டினி விரதம் தொடங்கினார்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நடை பயணமாக வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, அடுத்தடுத்த ஞாயிற்று கிழமைகளில் 2-வது, 3-வது, 4-வது, 5-வது பூச்சொரிதல் விழாக்கள் நடைபெறுகிறது.