நியூயார்க் நகரில் பரிதவிக்கும் 30 ஆயிரம் பேருக்கு தினமும் உணவளிக்கும் சீக்கியர்கள்..அமெரிக்கர்கள் நெகிழ்ச்சி!
நியூயார்க் நகரில் பரிதவிக்கும் 30 ஆயிரம் பேருக்கு தினமும் உணவளிக்கும் சீக்கியர்கள்..அமெரிக்கர்கள் நெகிழ்ச்சி!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் 1,032 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 68,489 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நியூயார்க் நகரத்தில் மட்டும் அதிகபட்சமாக 33,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நியூயார்க் நகரமே முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் அங்குள்ள நலிந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் போதிய உணவு கிடைக்காமல் பரிதவித்து வருவதாக செய்திகள் வந்தன.
இதனை அடுத்து நியூயார்க் நகர மேயர் பில் டி பேசியோ அங்குள்ள சீக்கிய மக்களின் குருத்வாராவை கடந்த ஞாயிற்றுக்கிழமை உதவிக்காக அணுகினார். இதை அடுத்து, குருத்வாராவிலிருந்து தினமும் 30,000 உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு கடந்த 6 நாட்களாக பசியால் வாடும் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
சத்தான காய்கறிகள், பருப்பு சாதம், வெஜிடபிள் சாதம் போன்ற உணவுகள் தயாரிக்கப்பட்டு நலிந்தோர் வீடுகளுக்கும், முதியோர்கள் உள்ள இடங்களுக்கும் சென்று பாதுகாப்பான முறையில் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.
சமூக இடைவெளி தூரம் கடைப்பிடிக்கப்பட்டு முகத்தில் மாஸ்க் அணிந்து சுத்தமான முறையில் உணவு வகைகள் குருத்வாராவில் தயாரிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. குருத்வாராவின் பணிகளை பாராட்டி ஏராளமான இந்தியர்கள் நிதியளித்து வருகின்றனர். இந்தியர்களின் இந்த சேவையை அமெரிக்கர்கள் வெகுவாக பாராட்டி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.