Kathir News
Begin typing your search above and press return to search.

சித்தர்களின் அற்புதங்கள் : ஸ்ரீ அண்ணன் சுவாமிகள்.! #சித்தர்கள் #ஆன்மீகம் #Spirituality

சித்தர்களின் அற்புதங்கள் : ஸ்ரீ அண்ணன் சுவாமிகள்.! #சித்தர்கள் #ஆன்மீகம் #Spirituality

சித்தர்களின் அற்புதங்கள் : ஸ்ரீ அண்ணன் சுவாமிகள்.!  #சித்தர்கள் #ஆன்மீகம் #Spirituality

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 3:00 AM GMT

சித்தர்கள் பலவிதம் அவர்களை பற்றியும் அவர்களின் அற்புதங்கள், ஜீவ சமாதி, வழிபாட்டு முறை பற்றியும் நாம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நமது கர்மவினைகள் நீங்க வழிவகுக்கும். அந்த வகையில் ஒவ்வொரு சித்தர்களையும் பற்றி காணலாம். இன்று ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் பற்றி காணலாம்.

ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஜீவசமாதி:

அண்ணன் சுவாமிகள் 1989-ம் வருடம் பிப்ரவரி 22-ம் தேதி ஜீவசமாதி அடைந்தார்கள்.தங்களின் தாயாய் இருந்து இத்தனை நாள் காத்து வந்த அண்ணன் அவர்கள் தங்களை விட்டு பிரிந்ததால் மீளா துயரத்தில் இருந்த சீடர்கள் அனைவரும் அண்ணனை ரைஸ் மில்லுக்கு எதிரே உள்ள அண்ணன் குடும்பத்தார்க்கு சொந்தமான மூங்கில் தோட்டத்தில்,சித்த புருஷருக்கு செய்யப்படும் எல்லா கிரியைகளையும் செய்து ஸ்தூல தேகத்தை அடக்கம் செய்ய விழைந்தனர்.

"அண்ணனின் தேகம் வியர்த்துக்கொண்டே இருந்தது அதனை துணிகொண்டு துடைத்துக்கொண்டே இருந்தோம்.." என நேரடி சீடர்கள் பலர் கூறினர்.தன்னை இவ்வுலக விவகாரங்களில் இருந்து ஒடுக்கிகொண்டு ஸ்தூலதேகத்தை விட்டு செல்ல போவதாக அண்ணன் முன்பே பலமுறை கூறி இருந்தார்கள். அண்ணனின் மறைவு சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் ஒரு அதிர்ச்சியாக இருந்தாலும்,அது அண்ணனால் எடுக்கப்பட்ட பராசக்தியின் முடிவு என்பதில் ஐயமில்லை.

பல்வேறுபட்ட சமாதி நிலைகளும், ஞான நிலைகளும் வேதாந்த சித்தாந்த நூல்களில் விளக்கப்பட்டிருந்தாலும்கூட இவற்றிலெல்லாம் சிக்கிக்கொண்டு என்ன வகையான சமாதி நிலையை அடைந்தார் நம் அண்ணன் என வினா எழுப்பும் மன நிலையில் அங்கு ஒருவர் கூட இல்லை. உடலும் மனமும் உடைந்துபோய் தம்மை காத்து நின்ற இந்த அண்ணன் என்கின்ற அம்பாளின் அம்சம்,ஒரு சித்த புருஷர், நம்மை விட்டு பிரிந்து விட்டார்களே என்ற துக்கம் மேலோங்க தம் சுய நினைவை இழந்து அழுது புரண்டவர்கள்தான் அதிகம் அன்று.

அனைவரும் ஒருவாறு இயல்பு நிலைக்கு திரும்பி இனிமேல் என்ன செய்வது என்ற சகஜ நிலைக்கு வந்தபோது, ஜீவசமாதி பீடம் எழுப்பவேண்டும் என முடிவு செய்யப்பட்டு மேற்கூறியவாறு மூங்கில் தோட்டத்தில் அடக்கம் செய்தனர். அதில் பின்பு பீடம் எழுப்பப்பட்டு அண்ணனின் தவக்கோலத்தில் இருக்கும் திரு உருவச்சிலையும் ஸ்தாபிக்கப்பட்டது.இவ்வாறு எழும்பியதுதான் புதூர் ஜீவசமாதி பீடம்.

வெளிப்புற செயல்களால் ஸ்தூலதேகத்தை அடக்கம் செய்து பீடம் எழுப்பப்பட்டது என சாதரணமாக நாம் இங்கு கூறி இருந்தாலும் அண்ணனின் ஜீவசமாதிக்கு பிறகு இங்கு பக்தர்கள்,சீடர்கள் கண்ட காட்சிகள்,பெறும் அனுபவங்கள், அண்ணன் முழு ஜீவனோடு அங்கும் எங்கும் உலாவி தன் பக்தர்களை ஆசீர்வதித்து வருவதை அன்பர்களின் அனுபவங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

கல்லூரியில் படிக்கும் இரு மாணவர்கள் அண்ணனின் ஜீவசமாதி பீடத்தில் அண்ணனை துதித்து நிற்க,அந்த திருஉருவச் சிலையின் மார்பு, சுவாசிக்கும் போது எவ்வாறு ஏறி இறங்குமோ அவ்வாறு அசைந்ததும், அதனைக்கண்டு ஒளி விளக்கின் பிரதிபலிப்போ என இம்மாணவர்கள் ஆராய்ந்து பார்க்க அதே அசைவை மார்பில் மறுபடியும் தொடர்ந்து தெளிவாக காண இவர்கள் வியப்புடனும், பதட்டத்துடனும் "கடவுள் காட்சியை கண்டேன்..." என அலறிக்கொண்டே வந்து இக்காட்சியை விளக்கியதாக அண்ணனின் சகோதரர் திரு.பக்தவச்சலம் ஐயா எங்களிடம் நினைவு கூர்ந்தார்கள்.

தேவேந்திரன் தன் தேரிலிருந்து இறங்கிவந்து அண்ணனை தரிசித்து சென்ற காட்சியும்,வள்ளலார், அண்ணன் இருவரையும் சேர்த்து ஜீவசமாதி வளாகத்தில் காட்சியாய் கண்ட ஒரு பத்திரிக்கை நிருபரின் அனுபவமும், சீடர் ஒருவருக்கு செயலிழந்து போன கைகள், பிரசாதம் கொடுக்கும் போது தானாக நீண்டு வந்து பிரசாதத்தை வாங்கி சரியானதும்,இன்னும் பலப்பல அற்புதங்கள் நிகழ்ந்து வரும் அவ்விடத்தில்,அண்ணன் ஜீவிதமாய் இன்றும் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கின்றன.

வயதில் மூத்த பல யோகிகள், ஞானிகள் அண்ணனை தரிசிக்க வந்ததும், இமயமலையில் இருந்து பாபாஜி போன்ற மஹாவதார், யோகிகள் ககன மார்க்கமாக அண்ணனை சந்திக்க வந்ததும்,பல பீடங்களின் பொறுப்புக்களும் பிரச்சினைகளும் அண்ணனுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட்டதும் அண்ணனை ஒரு அதிகார புருஷர் என்று உறுதி செய்வதாகவே அமைந்தன.

எனவே ஞானிகள்,சித்தர்கள் கூட்டம் தான் அண்ணன் தற்போது எந்நிலையில் உள்ளார்கள் என கூற இயலும்.சமாதி நிலைகள் போன்ற சம்பிரதாய வேதாந்தத்தில் நம் அண்ணனின் மறைவை அடைக்க விரும்பவில்லை நாம்.தினம் தினம் அற்புதங்களை நிகழ்த்திவரும் அண்ணன் அவர்கள் நம்மை பொருத்தவரை மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்து நம் அனைவரையும் காத்து வருகிறார்கள் என்பது மட்டும் நமக்கு புரிந்த ஒன்று.

இந்த ஜீவசமாதி வளாகம் எளிமையும் அமைதியும் நிரம்பிய ஒரு இடம். இங்கு நவீன ஆடம்பரங்களும் ஆரவாரங்களும் நுழையா வண்ணம் இதன் எளிமையை இனிமையை இன்றும் காத்து வருவதில் அண்ணனின் சகோதரர் திரு.பக்தவச்சலம் ஐயா அவர்களின் பங்கு மிகப்பெரியது. பக்தர்கள் தாமாகவே இங்கு தமக்கு பிடித்த வகையில் அண்ணனை வழிபட்டு செல்வதுதான் இங்கு விசேஷம்.சிலர் ஊதுபத்தி ஏற்றியும்,சிலர் மலர் மாலைகளை அணிவித்தும், சிலர் தீபம் ஏற்றியும்,சிலர் மேரி பிஸ்கட்,பழம்,இனிப்பு வகைகளை வைத்தும் அண்ணனை வழிபட்டு நிற்கின்றனர்.24 மணி நேரமும் யாராவது வந்து வழிபட்டு செல்வதுமாய் இவ்விடம் எப்போதும் அமைதியும் ஜீவனும் உடையதாய் இருந்து வருகின்றது.

சன்னதிகள்-

1.கணபதி

2.ஆண்டாள்புரம் சுவாமிகள்

3.அண்ணன் சுவாமிகள் ஜீவ சமாதி

4. சக்தி

தரிசனம்- 24 மணி நேரமும்

வழித்தடம்:

திருவாருர்-திருத்துறைபூண்டி வழியில் நால்ரோடு நிறுத்தம் இறங்கி அங்கிருந்து சுமார் 3 கி மீ தொலைவில் உள்ளது புதூர். ஆட்டோ வசதி உள்ளது.


தகவல்கள்-

ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை / நாகப்பட்டினம்

Next Story