'சூப்பர் டீலக்ஸ்' என் இரண்டாவது கதையல்ல - தியாகராஜன் குமாரராஜா சொன்ன சீக்ரெட்!
'சூப்பர் டீலக்ஸ்' என் இரண்டாவது கதையல்ல - தியாகராஜன் குமாரராஜா சொன்ன சீக்ரெட்!
ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த தியாகராஜன் குமாரராஜா நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கிய படம் 'சூப்பர் டீலக்ஸ்'. அப்படம் வெளியாகி கடந்த மார்ச் 29-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையில், சமூக வலைதளங்களில் அதற்கான பிரத்யேகமான ஹேஷ் டேகை உருவாக்கி ரசிகர்கள் அது குறித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 'சூப்பர் டீலக்ஸ்' கதைக்கு முன்னரே தான் ஒரு திரைக்கதை உருவாக்கியிருந்ததாகவும் அதற்க்கு பெரும் பொருட்செலவு தேவைப்பட்ட காரணத்தினாலேயே அதை விடுத்து 'சூப்பர் டீலக்ஸ்' படத்தினை இயக்கியதாக தெரிவித்துள்ளவர்.
தன்னுடைய இரண்டாவது கதை குறித்து "கண்டிப்பாக அந்தக் கதையைப் படமாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சாத்தியங்கள் இருந்தால் உடனடியாக ஆரம்பித்து விடுவேன். ஆனால் இன்னமும் சந்தை அப்படி ஒரு படத்துக்குத் தயாராக இல்லை என நினைக்கிறேன். கண்டிப்பாக இதை விடப் பெரிய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்தப் படம் எப்படி வசூலிக்கும், போட்ட பணத்தைத் திரும்பப் பெறுமா என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. அது மக்களின் புத்திசாலித்தனத்துக்கு வேலை கொடுக்கும்.
கதையாக இருக்கும். ஆனால் உணர்வுப்பூர்வமாக இருக்குமா என்று தெரியவில்லை. சூப்பர் டீலக்ஸ் புரியவில்லை என்று பலர் சொல்லிக் கேட்டுவிட்டதால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறேன். எனவே நான் அந்தக் கதையை இப்போது தொட முடியாது. 'சூப்பர் டீலக்ஸ்' சற்று மாறுபட்ட படம் என்று வைத்துக்கொண்டால், இது அதையெல்லாம் தாண்டி எங்கேயோ இருக்கும். என்னிடம் பணம் இருந்தால் நான் எடுப்பேன்" என்று கூறியுள்ளார்.