மும்மூர்த்திகள் இணைந்து காட்சி தரும் அதிசயம் - தாணுமாலயன் கோவில்.!
மும்மூர்த்திகள் இணைந்து காட்சி தரும் அதிசயம் - தாணுமாலயன் கோவில்.!

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ளது தாணுமலயன் கோவில். கேரளாவில் உள்ள இந்துக்கள் முக்கியமாக கருதும் 108 சிவன் ஸ்தலங்களில் இந்த ஒரு ஸ்தலம் மட்டும் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது. இந்த கோவில், சைவர்கள், வைணவர்கள் இரு சாரருக்கும் மிக முக்கியமான ஸ்தலமாக விளங்குவது இதன் தனிச்சிறப்பு.
இந்த கோவிலின் பெயர் தாணுமாலயன் என்றும் ஸ்தாணுமாலயன் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்தாணுமாலயன் என்ற பெயருக்கு மும்மூர்த்தி என்று பொருளாம். "ஸ்தாணு" என்றால் சிவம் என்றும், "மால்" என்றால் திருமால் என்றும் "அயன்" என்றால் பிரம்மா என்றும் பொருள். இந்த கோவில் ஒன்றன் மேல் ஒன்றாக மும்மூர்த்திகளும் அமைந்துள்ளனர்.
தற்போது அமையப்பெற்றிருக்கும் இக்கோவில் 17 ஆம் நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டது. இதன் பிரமாண்ட கோபுரம் நெடுந்தொலைவில் இருந்தும் காணக்கூடியது. மேலும் இக்கோவில் அமையப்பெற்றிருக்கும் சுசீந்திரம் எனும் இடத்திற்கு சமஸ்கிருதத்தில் தூய்மை என்று பொருள். அகலிகையால் சாபம் பெற்ற இந்திரன், இந்த தலத்திற்கு வந்து மூன்று மூர்த்திகளையும் வணங்கி சாபம் விமோசனம் பெற்றார் என்றும். இந்திரரின் பாபங்கள் தூய்மை அடைந்தது என்னும் பொருள் படும் வகையில் சூசீந்திரம் என்று பெயர் வந்துள்ளது.
இந்த கோவிலுக்கு அர்த்த ஜாம பூஜை செய்வதற்காக இந்திரன் வருகை புரிகிறார் என்பது நம்பிக்கை. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில் இணையும் வரை இந்த கோவிலின் நிர்வாகத்தை திருமலை நாயகர் மற்றும் திருவாங்கூர் மஹாராஜா வம்சம் கவனித்து வந்தது.
சிற்பகலையின் உச்சமாக திகழும் இக்கோவிலின் சாதனைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கல்லிலும் பார்க்க இயலும். ஒற்றை கல்லில் இசையை எழுப்பக்கூடிய நான்கு தூண்கள் உள்ள குலசேகர மண்டபம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இக்கோவிலில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் இருக்கும் தூண்கள் பல்வேறு இசை ஒலிகளை எழுப்புகின்றன. இங்குள்ள அனுமன் சிலை மிகவும் பிரசித்தி பெற்றது. 22 அடி உயரம் உள்ள இச்சிலை, தமிழகத்தின் உயரமான சிலைகளுள் ஒன்றாகும்.
இச்சிலை குறித்து ஒரு கதையும் சொல்லபடுவதுண்டு. இந்த சிலை திப்பு சுல்தானின் தாக்குதலுக்கு உள்ளாக நேரலாம் என்ற பயத்தில் 1740 ஆம் ஆண்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் காலப்போக்கில் இந்நிகழ்வு மறந்துவிடவே, 1930 ஆம் ஆண்டு மிக எதேர்ச்சியாக இந்த சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக இக்கோவிலில் உள்ள கணபதியை பெண்ணுருவில் செதுக்கியுள்ளனர். இவரை விக்னேஷ்வரி என்று அழைக்கின்றனர்.
நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 12 கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது இக்கோவில்.