கொரோனா வைரஸ் தாக்குதல் - ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை!
கொரோனா வைரஸ் தாக்குதல் - ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை!

ஈரான் நாட்டில் 108 பேரை கொரோனா பலி வாங்கி விட்டது. ஏராளமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரான் நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கி உள்ளனர். இவர்களில் பலர் அங்குள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் 562 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
ஈரானில் கொரோனா வைரஸ் பரவல் பற்றிய தகவல் அறிந்ததும் தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப முயன்றனர். விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் அவர்களால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
ஈரான் துறைமுகங்களில் தங்கி இருக்கும் குமரி மீனவர்கள் சிலர் தங்களின் நிலையை வீடியோவில் பதிவு செய்து அதனை வாட்ஸ்-அப் மூலம் உறவினர்களுக்கு அனுப்பினர்.
அந்த வீடியோவில், கொரோனா வைரசுக்கு பயந்து படகுகளில் பதுங்கி கிடக்கிறோம். இங்கு எந்த மருத்துவ வசதியும் இல்லை. முககவசம் வாங்க கூட வழியில்லை. இன்னும் சில நாட்கள் இருந்தால் எங்களுக்கு உணவும், குடிநீரும் கிடைக்காது. இங்கேயே சாகும் முன்பு எங்களை எப்படியாவது மீட்டுச் செல்லுங்கள் என்று வீடியோவில் உருக்கமாக கூறி இருந்தனர்.
மீனவர்களின் கதறல் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து பல்வேறு மீனவ அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடமும் மனு கொடுத்தனர்.
தமிழக அரசு மற்றும் மீனவ அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளில் இறங்கியது. இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஈரானின் 8 துறைமுகங்களில் தங்கி இருக்கும் மீனவர்களை சந்தித்து பேசினர்.
அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும், ஏற்பாடு செய்தனர். நேற்று பரிசோதனைகள் நடந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக ஈரான் தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, ஈரானில் உள்ள இந்திய மீனவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அனுப்பி வைக்க உள்ளதாகவும், முறையான அனுமதி கிடைத்ததும் இந்த நடவடிக்கை தொடங்கும் என்றும் கூறினார்.