இந்த நிலையும் கடந்து போகும், மாற்றத்திற்கான பாதையென்ன?
இந்த நிலையும் கடந்து போகும், மாற்றத்திற்கான பாதையென்ன?

நம் வாழ்வில் ஏதோவொன்று மகிழ்ச்சியாக இல்லை. நம் மரத்தில் சில இலைகளை மாற்றியமைக்க முடிவு செய்துவிட்டோம். சில நேரங்களில் மாற்றங்களை மகிழ்வுடன் ஏற்று கொள்ளும் நாம் அதை தொடர்ந்து பின்பற்ற தவறிவிடுவதே அதன் பிரச்சனை. மாற்றம் நிகழ போகிறது என்ற பரவசத்தில் நமக்குள் வெடித்து கிளம்பும் ஆற்றல் மெல்லமெல்ல நம் தினசரி பழக்கவழக்கத்தில், அன்றாடம் அடிமையாகிவிட்ட சின்ன சின்ன விஷயங்களிலில் கவனம் செலுத்தாமல் போவதால். புதிதாக நாம் அதிரடியாக கொண்டு வந்த புதிய மாற்றம் நமக்கே மறந்துவிடும் சூழல் ஏற்படுகிறது.
இன்றைய உலகில் அனைவரும் உடனடி தீர்வுகளை எதிர்பார்க்கிறோம். அதனால் அதிரடி மாற்றங்களை வாழ்க்கையில் புகுத்தி அதிவிரைவான விளைவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அப்படி நிகழ்பவை அல்ல மாற்றங்கள். ஏராளாமன முயற்சியையும் முனைப்பையும் கொட்டி நம் தினசரி வாழ்வில் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களை விழிப்புணர்வுடன் கவனித்து மாற்றங்களை நிகழ்த்தினால் மட்டுமே காலத்திற்க்கும் அழியாத நன்மாற்றங்கள் நிகழும்.
பிரமாண்டமான தகவல் பெட்டகத்தை உருவாக்க கோடிக்கணக்கான கணினிகள் இணைந்து இணையம் என்ற ஒன்றை உருவாக்கியிருப்பதை போல் தான் நம் வாழ்க்கையும். இன்று வாழ்க்கை என்று நாம் அழைப்பதற்க்கு பின் ஒன்றொடுவொன்று தொடர்புடைய கோடிக்கணக்கான நினைவுகள் நியாபகங்கள் பழக்கங்கள் என பலதும் இணைக்கப்படுள்ளது. ஒவ்வொறு நொடியும் ஏதோவொரு கண்ணுக்கு தெரியாத சிறு துணுக்குகளால் நம் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது.
பெரிய மாற்றத்தை எதிர்பார்த்த மாமனிதர் ஒருவர், தனக்கு சிக்கலான தருணம் ஒன்று தோன்றியபோது சொன்ன வரிகள் இவை....
உங்கள் எண்ணங்களை கவனமாக கவனியுங்கள் அவை தான் வார்த்தையாகின்றன
உங்கள் வார்த்தைகளை ஒருங்கினைத்து பாருங்கள் அவை தான் செயல்களாகின்றன
உங்கள் செயல்களை கணக்கில் கொண்டு ஆராயுங்கள் அவை தான் பழக்கங்களாகின்றன
உங்கள் பழக்கங்களை ஏற்றுகொண்டு கவனியுங்கள் அவை தான் உங்களின் மதிப்பினை கூட்டுகின்றன.
உங்கள் மதிப்பினை புரிந்துகொண்டு வரவேற்று மகிழுங்கள் அதுவே உங்கள் இறுதி இலக்காகின்றது.
- காந்தியடிகள்.
நம் வாழ்வில் தினசரி புலரும் ஒவ்வொறு நாட்களும் ஏதெனுமொரு சிறிய அல்லது கண்ணுக்கு புலப்படாத மாற்றத்தை நிகழ்த்தி கொண்டேயிருக்கின்றன. நாம் நம் பழக்கவழக்கங்களில் எத்தனை ஆழ்ந்திருந்தாலும், நம் தினசரி சுழற்சியில் எத்தனை ஆழமாக சிக்கியிருந்தாலும். மிக நிச்சயமாக ஏதோவொரு மாற்றம் நமக்குள் நிகழ்ந்திருக்கும். அன்று காலை நாம் கண்விழித்த போது இருந்ததை விட அன்று இரவு உறங்க செல்லும் முன், நமக்கு தெரிந்தோ தெரியாமலோ ஓர் சிறிய அளவாவது நாம் மாறியிருப்போம். இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் நாம் நம் தினசரி செயல்களை விழிப்புடன் கவனித்து வந்தாலே, நமக்கு தேவையான மாற்றம் 'நாம் செய்கிற எந்த செயலில்' நடக்கிறது. நமக்கு தேவையான மாற்றம் எந்த திசையில் நிகழவேண்டும் என்பதை தீர்மானித்து அதன்படி நடக்க முடியும்.
நாம் உருவாக்குகிற மாற்றங்கள் உலகை உலுக்ககூடியதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. நமக்கு என்ன தேவை? அதை பெறுவதற்க்கு நாம் செய்ய வேண்டிய சிறிய மாற்றத்தை விழிப்புடன் கவனத்துடன் மிக எளிமையாக செய்தாலே போதுமானது. பெரிய மாற்றங்களுக்கு பின் வேராக சிறிய சிறிய விஷயங்கள் தான் புதைந்திருக்கும், இது தான் வாழ்வின் இயற்கை விதி.
நாம் செய்கிற செயல்கள் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதை கவனிப்போம். நம்மோடு ஓர் நாளில் தொடர்பில் வருகிற மனிதர்கள் நம் பெற்றோராக, குழந்தைகளாக, முதலாளியாக, வியாபாரிகளாக, முகம் தெரியாத நபர்களாக மற்றும் யாராக இருந்தாலும் சரி அவர்களை ஆழ்ந்து கவனிப்போம் ஒவ்வொறு செயலுக்கு பின்னும் நான் பயணம் செய்ய வேண்டிய, மாற்றம் செய்ய வேண்டிய திசை எது? இப்போது நான் செய்யும் இந்த செயலினால் ஏற்படும் விளைவு என்ன? என்று சிந்தித்தாலே போதுமானது. அந்த சிந்தனையே நம் வாழ்வில் நாம் எதிர்பார்த்த பெரும் மாற்றத்திற்க்கு அடித்தளமாய் அமையும், அந்நொடியில் பிறக்கும் மாற்றங்களுக்கான புதிய பாதை!!