CAA அமல்படுத்தினால் 2 முக்கிய தலைவர்களையும் குண்டு வைத்து கொல்வோம்! தமிழக பாஜக அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் கடிதம்
CAA அமல்படுத்தினால் 2 முக்கிய தலைவர்களையும் குண்டு வைத்து கொல்வோம்! தமிழக பாஜக அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் கடிதம்

பிரதமர் மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளாலும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகளாலும் வன்முறை கலந்த போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன. தமிழகத்திலும் கடந்த 20 நாட்களாக சென்னை வண்ணாரப்பேட்டை, சேலம், மதுரை என தொடர் போராட்டங்கள் தூண்டப்பட்டு நடந்து வருகிறது.
மற்றொருபுறம் இந்த போராட்டத்திற்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும் தமிழக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் தொடர் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால் போராட்டக்காரர்கள் கடும் ஆத்திரம் அடைந்த நிலையில் டெல்லி, உபியில் வன்முறைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்று வந்துள்ளது.
அந்த கடிதத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை நாட்டில் அமல்படுத்தினால் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என்று எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாஜக அலுவலக ஊழியர்கள் உடனே சம்பவம் குறித்து தியாகராய நகர் துணை கமிஷனர் அசோக் குமாரிடம் கடிதத்துடன் புகார் அளித்தனர்.
அதன்படி போலீசார், மிரட்டல் கடிதம் எங்கிருந்து வந்தது, யார் இதை அனுப்பியது என்பது குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டல் கடிதத்தால் பாஜக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.