மஹாராஷ்ட்ராவில் உச்ச கட்ட மஹா குழப்பம்-முரண்பட்ட 3 குடும்ப அரசியல் கட்சிகள் ஓன்று சேர்ந்து நாளை கவர்னருடன் சந்திப்பு.!
மஹாராஷ்ட்ராவில் உச்ச கட்ட மஹா குழப்பம்-முரண்பட்ட 3 குடும்ப அரசியல் கட்சிகள் ஓன்று சேர்ந்து நாளை கவர்னருடன் சந்திப்பு.!
By : Kathir Webdesk
மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவியை பெற்று தங்கள் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறது சிவசேனா. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தற்போது மும்பை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சிவசேனா இளைஞர்கள் அமைப்பின் தலைவராக இருக்கும் தனது மகனான ஆதித்ய உத்தவ் தாக்கரேவை எப்படியாவது மகாராஷ்டிரா முதல்வராக கொண்டு வருவதில் முனைப்புடன் இருப்பதாகவும், அதற்காகவே பாஜகவிடம் முரண்டு பிடித்து பாஜக கூட்டணியிலிருந்து விலகியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
சுயநலத்துக்கும், ஊழலுக்கும் குடும்ப அரசியல் வழி வகுத்துவிடும் என்பதால் பாஜகவுக்கு சிவசேனாவின் திட்டத்தில் கொள்கை ரீதியாக விருப்பம் இல்லை, மேலும் சிவசேனாவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாலும், தங்கள் கட்சியை சேர்ந்த முதல்வர் பட்நாவிசையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து வெற்றி பெற்றுள்ளதாலும் சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை தரவே முடியாது என பாஜக திட்டவட்டமான முடிவை எடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்துத்வா , காங்கிரஸ் எதிர்ப்பு உள்ளிட்ட தங்கள் கட்சியின் அடிப்படை கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, தங்களைப் போலவே குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசின் ஆதரவை பெற்று முதல்வராக வேண்டும் என்ற வெறியில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே கட்சி எம்எல்ஏ க்களின் விருப்பத்தையும் மீறி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என கூறப்படுகிறது.
பாஜக தனித்து பிரம்மாண்ட கட்சியாக மகாராஷ்ட்ராவில் உருவெடுத்து வரும் நிலையில், பாஜகவின் வளர்ச்சியை தடுக்க இதுதான் தக்க சமயம் என காத்திருந்த காங்கிரசும், தேசிய வாத காங்கிரசும் எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என திட்டமிட்டு சிவசேனாவின் ஆசைக்கு இணங்கவும், ஆட்சியில் பங்கு போட்டுக் கொள்ளவும் மக்களின் விருப்பத்துக்கு எதிராக ஓன்று சேர முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுக்கு அமைச்சரவையில் ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து பேசி, சிவசேனா முடிவுக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இம்மூன்று கட்சிகளிடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 16 அமைச்சர் பதவிகளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 14 பதவிகளும், காங்கிரசுக்கு 12 பதவிகளும் ஒதுக்கப்படுவதாக பேரம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதே போன்று காங்கிரசுக்குக்கு சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், துணை சபாநாயகர் பதவி சிவசேனாவுக்கும், சட்டசபை கவுன்சில் தலைவர் பதவி தேசியவாத காங்கிரசுக்கும்க்கும், அதன் துணை தலைவர் பதவி சிவசேனாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிகள் யாருக்கு என்பது பற்றி அதிகார பூர்வமாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும் சிவசேனைக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கும் முதல்வர் பதவியை விட்டுத்தர காங்கிரசும், தேசிய வாத காங்கிரசும் முடிவெடுத்துள்ளதாகவும், துணை முதல்வர் தொடர்பான கடைசி கட்ட பேச்சுவார்த்தை சோனியாவுடன் வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. நாளை முரண்பட்ட 3 கட்சிகளும் சேர்ந்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைப்பது குறித்த முடிவை தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி முடிவு வரும் நவம்பர் 19 அன்று அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கூட்டணி அரசால் ஏற்பட்ட குழப்பத்தைவிட மகாராஷ்ட்ராவில் அரசியல் மற்றும் நிர்வாக குழப்பங்கள் மேலும் ஏற்பட வழி ஏற்படும் என்றும் பாஜக முதல்வர் பட்நாவிஸ் தலைமையில் ஊழலற்ற முறையில் தொடர்ந்த வளர்ச்சிப் பணிகள் நின்றுபோக வாய்ப்புள்ளதாகவும் இது மிக முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் எனவும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.