கரோனா எதிரொலி மாநில எல்லைகளில் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்குள் அனுமதி.
கரோனா எதிரொலி மாநில எல்லைகளில் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்குள் அனுமதி.

புதுச்சேரியில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் நிரந்தரமாக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு பயணிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டிற்கு தடை, உலக பிரசித்திபெற்ற காரைக்கால் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் மற்றும் அனைத்து பக்தர்களும் அங்குள்ள நளன்தீர்த்த குளத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகள் ஆண்டு விழா, விளையாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மறு உத்தரவு வரும் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணிகள் மூலம் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தமிழக - புதுச்சேரி எல்லைப் பகுதிகளான கோரிமேடு, கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, கன்னியக்கோவில் உள்ளிட்ட எல்லைப்பகுதிகள், மருத்துவ குழுவினரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு ள்ளது.
புதுச்சேரி எல்லை பகுதியில் பேருந்து, கார், இரண்டு சக்கர வாகனத்தில் வரும் அனைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் மருத்துவ குழுவினர் தீவிர மருத்துவ பரிசோதனை நடத்துகின்றார்கள். மேலும் வெளிநாட்டு பயணிகள் வந்தால் அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, அவர்கள் எப்போது இந்தியா வந்தார்கள் என்பதையும் உறுதி செய்து கொள்கிறார்கள். மேலும் கரோனா குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகின்றனர்.