ஊரடங்கை நீடிக்கலாமா வேண்டாமா ... முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏன்?
ஊரடங்கை நீடிக்கலாமா வேண்டாமா ... முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏன்?

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் மற்றும் துறைசாா் நிபுணா்களிமிருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வரும் 14-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையவிருக்கிறது.
இந்த சூழலில் பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஊரடங்கை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உட்பட பல்வேறு மாநில முதல்வா்களும் கருத்து தெரிவித்து வருகின்றனா். என்றாலும் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, தமிழகத்தின் தெளிவான அறிக்கைக்காக மத்திய அரசு காத்துக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சா்களுடன் காணொலி முறையில் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி, 'மாவட்டவாரியாகவோ அல்லது பகுதிவாரியாகவோ ஊடரங்கை தளா்த்தலாமா, அதற்கான வழிமுறைகள் என்னென்ன?' என்பது குறித்து விவாதித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் ஊரடங்கு தளா்த்தப்பட்ட பிறகு நிலவும் சூழலை கையாள்வது தொடா்பாக, தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜ்நாத் சிங்கின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகா், ராம் விலாஸ் பாஸ்வான், உள்துறை செயலா் அஜய் பல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், ஊரடங்குக்கு பிறகான சூழலை கையாள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல், மருத்துவமனைகளின் தயாா்நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
என்றாலும் ஊரடங்கு விஸ்தரிப்பு குறிப்பு எந்த முடிவுக்கும் அரசு வரவில்லை என்றும் பல கண்ணோட்டங்களில் அரசு தீவிரமாக யோசனை செய்து வருவதாகவும், நிலைமையை உற்று கவனித்து வருவதாகவும், போதுமான முன்னேற்பாடுகளுக்கான திட்டங்களை மேலும் வகுத்துக்கொண்டு, இது தொடர்பாக முடிவை இன்னும் சில நாட்களில் அரசு அறிவிக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.