Kathir News
Begin typing your search above and press return to search.

பூனைகள், நாய்களுக்கு கொரோனா வருமா? கால்நடைத்துறை வல்லுநர்கள் விளக்கம்.

பூனைகள், நாய்களுக்கு கொரோனா வருமா? கால்நடைத்துறை வல்லுநர்கள் விளக்கம்.

பூனைகள், நாய்களுக்கு கொரோனா வருமா? கால்நடைத்துறை வல்லுநர்கள் விளக்கம்.

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 April 2020 7:25 AM GMT

உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் நடியா என்ற பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த கொரோனா நபரால் புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.. மேலும் அப்பூங்காவில் நடியாவின் சகோதரி அசூல், 2 அமுர் புலிகள், 3 ஆப்ரிக்க சிங்கங்களுக்கும் வறட்டு இருமல் இருப்பது கண்டறியப்பட்டு அவைகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

இத்தகவல்கள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வினை தொடர்ந்து இந்தியாவில் உள்ள வன உயிரியல் பூங்காக்களும் காப்பகங்களும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மத்திய வன உயிரியல் ஆணையம் மாநிலங்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில், "சிசிடிவி மூலமாகவோ,நேரடியாகவோ விலங்குகளின் நடவடிக்கைகளில் வழக்கத்திற்கு மாறாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பாதுகாப்பு கவச உடைகள் இல்லாமல் விலங்குகளை பராமரிப்பாளர்கள் அணுகக் கூடாது.

மாமிசம் உண்ணிகள், சிங்கம்,புலி போன்ற பெரிய பூனை வகையினங்கள், மரநாய்கள், குரங்கினங்களை கூடுதல் கவனத்தோடு கண்காணிக்க வேண்டும்.ஏதேனும் விலங்கிற்கு அறிகுறி தென்பட்டால் 2 வாரங்களுக்கு ஒரு முறை கோவிட் 19 நோய்க்கான மாதிரிகளை அனைத்து வகையான பாதுகாப்பு வசதிகளோடு எடுத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் சோதிக்க வேண்டும். அனைத்து வன உயிரியல் பூங்காக்களும் மாநில பொது சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மார்ச் மாதம் பெல்ஜியம் நாட்டில் ஒரு பூனைக்கும் அது போல் ஹாங் காங்கிலும் 2 நாய்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. .அவற்றின் உரிமையாளர்கள் மூலமாக வைரஸ் தொற்றுப் பரவியது எனத் தெரிகிறது.

இதனால் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமா ? அவ்வாறு ஏற்பட்டால் அவற்றின் மூலமாக கொரோனா பரவுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 13 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீடுகளில் உள்ள வீட்டு பிராணிகள் மூலமாக கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதா என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.

இது தொடர்பான கேள்விகளுக்கு கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் குபேந்திரன், நோய்புலனாய்வுத்துறை உதவி இயக்குநர் டாக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் கூறுகையில்,

விலங்குகள், கால்நடைகள் உடலில் பழைய வகையிலான கொரோனா கிருமிகள் உள்ளன. இவை காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை உருவாக்கும். உரிய சிகிச்சைகள் மூலம் குணமடையும். தற்போது உள்ள புதிய கோவிட் 19 வைரஸ் தொற்று மனிதர்களை மட்டுமே தாக்கி வருகிறது. முதன் முதலாக புலிக்கு பரவியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 65 மில்லியன் பூனைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றிற்கு கொரோனா தொற்று பரவியதாக தகவல் இல்லை.

இருந்த போதிலும் ஆய்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளரும் பிராணிகளும் கண்காணிக்க கால்நடை பாரமரிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும். துறையின் உயர் அதிகாரிகள் உத்தரவு கிடைக்கப்பெற்ற உடன் கொரோனா பாதிப்பு பகுதி வீடுகளில் உள்ள வளர்ப்பு பிராணிகள் பற்றியும் அவற்றின் உடல்நிலை குறித்தும் சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் கூடுதலாக விசாரிப்பார்கள்.

இந்தியாவில் இது வரை எந்த ஒரு வீட்டு விலங்களுக்கும் வன விலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனவே பொது மக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றனர்.

Next Story