Top
undefined
Begin typing your search above and press return to search.

பீகாரில் பாஜகவுக்கு சாதக அலை.. நிதீஷுக்கு நெருக்கடி - சூறாவளிப் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி..

பீகாரில் பாஜகவுக்கு சாதக அலை.. நிதீஷுக்கு நெருக்கடி - சூறாவளிப் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி..

R SubbaiahBy : R Subbaiah

  |  18 Oct 2020 2:56 AM GMT

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி, நவம்பர் மாதம் 3 மற்றும் 7ம் தேதிகளில் என மூன்று கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்திக்கின்றன. ராஷ்டிரிய ஜனதா தளம் 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிடுகின்றன. இதில் மற்ற தோழமை கட்சிகளுக்கு காங்கிரசும், ராஷ்டிய ஜனதா தளமும் தொகுதிகளை பிரித்துக் கொடுத்து இருக்கின்றன.

அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே தொகுதிப் பங்கீடு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜகவுக்கு 121 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 122 இடங்களும் என அறிவிக்கப்பட்டது. வட்டார அளவிலான தோழமை கட்சிகளுக்கு இரு கட்சிகளும் உள் ஒதுக்கீடாக சில தொகுதிகளை அறிவித்துள்ளன. இந் நிலையில்சென்ற மாத இறுதியில் சி . வோட்டர் எடுத்த கருத்துக்கணிப்புப்படி ஆளும் பாஜக -ஐக்கிய ஜனதாதளம் 141 முதல் 161 இடங்களை வெல்லும் என்றும் காங்கிரஸ் - லாலு கட்சி கூட்டணி 64 முதல் 84 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

அதே சமயம் ஆளும் நிதிஷ் குமார் அரசாங்கத்தின் மீது 56.7 சதவீதம் பேர் கணிப்பின் போது கோபத்தை காட்டியதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் ஐக்கிய ஜனதாதளத்தை விட பாஜகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளதையும் அந்த கணிப்புகள் காட்டின. இதையடுத்து அரசுக்கு தர்மசங்கடத்தை அளித்த அமைச்சர்கள், கட்சிக்காரர்கள் உட்பட 10 பேர் மீது சஸ்பென்ட் உட்பட நடவடிக்கைகளை நிதிஷ் குமார் எடுத்துள்ளார்.

இந்நிலையில் மறைந்த பாஜகவின் முன்னாள் கூட்டாளி பஸ்வானின் எல்ஜேபி கட்சியினர் பீஹார் ஆளும் தரப்பு மீது கூறும் தலித் தொடர்பான குற்றச்சாட்டுக்ககள் தேர்தலில் எதிர்கட்சிகளால் வலுவாக எடுத்துரைக்கப்படுகிறது. பஸ்வானின் எல்ஜேபி கட்சிக்கு அவரது மகன் சிராக் பஸ்வான் தலைமையில் பிரச்சாரம் நடக்கிறது. இவர் தலித் மக்கள் மற்றும் இதர பிற்பட்டோர் இடையே கணிசமான செல்வாக்கு மிக்க உபேந்திரா குஷ்வாவின் RLSP கட்சி மற்றும் 11 மாவட்டங்களில் உள்ள சிறு சிறு குழுக்களின் ஆதரவுடன் ஒட்டு வேட்டை ஆடிவருகிறார். இவர் ஆளும் பாஜக - நிதீஷ் குமார் கூட்டணிக்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இதனால் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் அந்த கூட்டணிக்கு தலித் வாக்குகள் கிடைப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதை வாய்ப்பாக பயன்படுத்தி எப்படியாவது ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியாவது பீகாரில் பாஜக கூட்டணி செல்வாக்கை குறைக்க எதிர் அணியினர் பகீரத்தனம் செய்து வருகின்றனர்.

இதற்காக எப்போதும் இல்லாத வகையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சத்ருகன் சின்ஹா, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் காங்கிரஸ் தரப்பில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகேல், கீர்த்தி ஆசாத், தாரிக் ஆனவர், சஞ்சய் நிருபம், ராஜ் பாபர் ஆகியோரின் பெயர்களும் பிரச்சாரக் குழு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் பாஜக கூட்டணி தரப்பிலும் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய முனைந்துள்ளனர். முதலில் பிரச்சாரத்துக்கு மோடி வருவாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் இப்போது பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி வருவது உறுதியாகிவிட்டது என்றும் முதல் கட்டமாக நான்கு பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பங்கேற்பது உறுதியாகி விட்டது. மொத்தம் 12 கூட்டங்களுக்கு திட்டமிட்டுள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமாருக்காக பிரதமர் மோடி வாக்கு கோருவது இதுவே முதல்முறையாகும். பிரதமர் மோடி பிரச்சாரத்துக்கு வருகை அந்த கூட்டணி தொண்டர்கள் இடையே பலத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நிதிஷ் கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வருவது ஆறுதலாக உள்ளது. ஏற்கனவே மோடி பிரச்சாரம் இல்லாமல் தன் கட்சிக்கு வெற்றி வாய்ப்புண்டு என்ற தன்னம்பிக்கை கொண்டவர். அவர் ஆனால் இப்போது அவரே பிரதமரை பிரச்சாரத்துக்கு அழைத்திருப்பதாக தகவல். அதுவும் நிதிஷ்குமார் தொகுதியிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் உண்டு எனக் கூறப்படுகிறது.

எது எப்படியாகினும் இந்த முறை பீகாரில் சிறிய கட்சிகளின் செல்வாக்கு வெளியில் தெரியுமென்றும், இதனால் பெரிய கூட்டணிக்கு செல்லும் வாக்குகள் குறிப்பிட்ட அளவில் திசை மாறும் என்றும் உள்ளூர் பத்திரிகைகள் கணிப்பு வெளியிட்டுள்ளன.

என்றாலும் சமீபத்தில் கொரோனா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொண்டது, அவருடைய அரசு எடுத்த நிவாரண நடவடிக்கைகள் பாஜகவுக்கு கூடுதல் செல்வாக்கை அதிகரித்துள்ளது. அங்கு பாஜக தொகுதிகளில் சென்ற நாடாளுமன்ற தேர்தலைப் போலவே அலை வீசுகிறது. ஆனால் அதைக் கொண்டு நிதிஷ் குமார் கரை ஏறுவாரா என்பது போகப் போகதான் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

Next Story