2021 தமிழக தேர்தலில் மாற்றம் வேண்டி புது அலை உருவாகும் - அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம்.!
2021 தமிழக தேர்தலில் மாற்றம் வேண்டி புது அலை உருவாகும் - அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம்.!
![2021 தமிழக தேர்தலில் மாற்றம் வேண்டி புது அலை உருவாகும் - அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம்.! 2021 தமிழக தேர்தலில் மாற்றம் வேண்டி புது அலை உருவாகும் - அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம்.!](https://kathir.news/static/c1e/client/83509/migrated/6850af58bba330ba97821d2d8dffa6aa.jpg)
தமிழகத்தில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும் தேர்தல் என வந்து விட்டால் கொள்கைகளை ஒரு ரூமில் வைத்து பூட்டிவிட்டு மற்ற கட்சிகளை தங்களுடன் இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கவே விரும்புகின்றன. ஏனென்றால் தமிழக வரலாற்றில் எந்த கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியோ அந்த கூட்டணிதான் வெல்லும் என்ற பொதுவான நம்பிக்கை உண்டு.
கூட்டணி இல்லை என்றால் மூன்றாவது அணி உருவாகி தங்கள் வாக்குகள் கலைந்து போகும் என்ற அச்சம் இரு அணிக்கும் உண்டு என்பதால் வலுவான கூட்டணியை அமைக்கவே இரு கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால் சென்ற 2016 தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக, கூட்டணி பலம் இல்லாமலேயே வென்றது. அனைத்து தொகுதிகளுக்கும் தன் சின்னமான இரட்டை இலை சின்னத்திலேயே வேட்பாளர்களை களம் இறக்கியது. என்றாலும் மிகவும் சிரமப்பட்டுத்தான் அந்த கட்சி அப்போது ஆட்சியைப் பிடித்தது.
இதிலிருந்து தமிழகத்தில் கூட்டணி பலம் குறித்து நாம் அறியலாம். சென்ற 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை திமுக கூட்டணி வென்றது. அப்போது கருணாநிதி அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் இந்த வெற்றிக்கு காரணம் என்ன என கேட்டனர். அதற்கு அவர் கூட்டணி பலம்தான் என்று வெளிப்படையாகக் கூறினார்.
அந்த தேர்தலில் அதிமுகவில் கூட்டணி கட்சி என்று பார்த்தால் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசீய முஸ்லீக் ஆகிய கட்சிகள் மட்டுமே இருந்தன. ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இணைந்து பெரிய கூட்டணியாக காட்சியளித்தது.
அது மட்டுமல்ல திமுக கூட்டணி -பெற்ற 44.8% சதவீத வாக்குகளில் திமுக - 26.5% சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. கிட்டத்தட்ட 19 சதவீத வாக்குகளை கூட்டணி கட்சிகளே பெற்றிருந்தன. இந்நிலையில் 2011ம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து மீண்டும் பெரிய கூட்டணியாக போட்டியிட்டன.
ஆனால் தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி , புதிய தமிழகம், அகில இந்திய பார்வார்டு பிளாக், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, மூவேந்தர் முன்னணி,கொங்கு இளைஞர் பேரவை போன்ற கட்சிகளை அதிமுக தனது கூட்டணிக்கு கொண்டு திமுகவை வீழ்த்தியது.
திமுக 119 தொகுதிகளில் களமிறங்கி வெறும் 23 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. பாமக தான் போட்டியிட்ட 30 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வென்றது. விடுதலை சிறுத்தைகள் களமிறங்கிய 10 இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. கொங்கு முன்னேற்றக்கழகம் 7 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தது.
விடுதலை சிறுத்தைகளையும், பாமகவையும் ஒரே அணிக்கு கொண்டு வந்து விட்டால் நாம் அதிக இடங்களை கைப்பற்றலாம் என்ற திமுக தலைவரின் திட்டமும் தோல்வியடைந்தது. அது மட்டுமல்லாமல் மக்கள் சாதிக்காக மட்டுமே வாக்களிக்கிறார்கள் என்கிற எண்ணத்தையும் அந்த தேர்தல் தவிடு பொடியாக்கியது. இந்நிலையில் இப்போது பெருவாரியான வாக்குகளை வலைவீசிஅள்ளிய ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லை.
ஆனாலும் திமுகவும், அதிமுகவும் தொண்டர்கள் ரீதியாகவும், வாக்கு வங்கி ரீதியாகவும் பலமாக உள்ளன. என்றாலும் சந்திக்கப் போகும் தேர்தல் சட்டசபை தேர்தல் என்பதால் கூட்டணி பலம்தான் முக்கியம் என்றே இரு கட்சிகளும் நினைப்பதாகத் தெரிகிறது. எந்தவிதத்திலும் இந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்று திமுக தீவிரமாக இருப்பதைக் காண முடிகிறது. அதிமுகவும் எடப்பாடி பழனிச்சாமிதான் கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் என்பதை ஏற்றுக் கொள்ளும் எந்த கட்சியும் தங்களுடன் இணையலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள பாஜக இதற்கு சம்மதிக்குமா என தெரியவில்லை.
இந்த தேர்தலை திராவிட எதிர்ப்பு என்ற பெயரில் தனியாக நின்று ஒரு கை பார்த்து விடலாம் என அந்த கட்சியில் பலர் விரும்புகின்றனர். தற்போது அந்த கட்சியில் மாற்று கட்சியினரும் திரளாக வந்து இணைவதாக கூறப்படும் நிலையில் ரஜினியின் வருகையை அக்கட்சி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. ரஜினியும் தான் அரசியலுக்கு வருவது உறுதி, தேர்தல் நேரத்தில் இது பற்றி அறிவிப்பேன் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாஜக ரஜினி இடையே திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக அதிமுக இரு கட்சிகளும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விரும்பவில்லை என கூறப்படுகிறது. எனவே ரஜினி + பாஜக + செல்வாக்குடைய பிராந்திய கட்சிகள் ஆக ஒரு பலமான 3 வது அணியும் உருவாக வாய்ப்புண்டு எனக் கூறப்படுகிறது.
இப்படி ஒரு 3 அணி உருவானால் எப்பாடு பட்டாவது ஒரு பெரிய கூட்டணியை அமைத்தாகவேண்டும் என திமுக தரப்பில் கருதுகிறது. இதற்காக தேமுதிக, பாமகவுடன் அக்கட்சி திரை மறைவில் பேசி வருவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் தேமுதிகவோ, விடுதலை சிறுத்தை கட்சிகள் அமைதியாக உள்ளன. ஆனால் பாமக இப்போதே மிகப்பெரிய பேரத்தை முன்வைப்பதாக அதன் செயல்பாடுகள் உள்ளன.
சில நாட்களுக்கு முன்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாமக அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் பேராசிரியர் தீரன் கூறுகையில் " அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே முதல்வர் பதவிக்கு இணையான தகுதியுள்ள மத்திய கேபினட் துறை அமைச்சராக சுகாதாரத்துறையில் பொறுப்பு வகித்தவர். எனவே அவருக்கு ஆட்சியில் துணை முதல்வர் பதவி கேட்பதில் தவறொன்றுமில்லை" என்று கூறியுள்ளார். மேலும் அமைச்சரவையில் இடம் கோருவது உட்பட சில முக்கிய கோரிக்கைகள் உள்ளன, அதன் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்''. என்றார்.
இவ்வளவு பெரிய பேரத்துக்கு வரவேண்டுமேன்றால் அதிமுகவால் முடியாது. ஏனெனில் அங்கே ஒ.பி.எஸ். இருக்கிறார். எனவே திமுகவிடம் வைத்த பேரமாகவே பாமகவின் பேரம் பார்க்கப்படுகிறது. ஆனால் திமுக இதற்கு சம்மதிக்குமா என்பது குறித்து கூற இது பொருத்தமான நேரமில்லை . ஏனெனில் இன்னும் முக்கியமான திருப்புமுனைகளை டிசம்பர் மாத இறுதியில் தெரிய வரும் என கூறப்படுகிறது.
ஏனெனில் சென்ற 2011 ஆம் ஆண்டு கூட்டணி, சாதி பலம் இவற்றை நாடு முழுவதும் வீசிய 2 G அலை தூக்கி வீசியது. அதேபோல தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற ஒரு புது அலை புறப்பட்டால் அதன் முடிவுகள் வேறு விதமாக இருக்குமென்றும், ஆனால் தொங்கு சட்ட சபைக்கு தமிழக மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
வேறு சில விநோதங்களும் கூட நடக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். ஸ்டாலினும், பழனிச்சாமியும் நெருங்கி வருவதை பார்த்தால் இவர்கள் ஒ.பி.எஸ் - சை தவிர்த்துவிட்டு ஓன்று சேர வாய்ப்புண்டு என்றும், இவர்களுடன் பெங்களூர் அக்கிரஹார கோஷ்டியும் தயாராகவுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் ஒ.பி.எஸ்ஸுக்கு கைகொடுக்க 3 வது அணி தாராள மனதுடன் வரலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.