காங்கிரஸுக்கு கேட்ட இடங்கள் ஒதுக்குமா தி.மு.க? - பரபரப்பு தகவல்கள்.!
காங்கிரஸுக்கு கேட்ட இடங்கள் ஒதுக்குமா தி.மு.க? - பரபரப்பு தகவல்கள்.!
By : Saffron Mom
பீகார் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க- ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றி வாகை சூடியது. மகாகத்பந்தன் (MGB) தோல்விக்கு முக்கிய காரணமாக கூட்டணியில் மற்ற கட்சிகள் வெற்றி பெற்ற அளவிற்கு காங்கிரஸ் வெற்றி பெறாமல் ஒரு சுமையாக மாறி அவர்களின் கீழே இழுத்தது தான் என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்தன.
காங்கிரஸ் தங்களுக்கென்று கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 70 இடங்களில் 19 இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசின் இந்த மோசமான தோல்வி மற்ற மாநிலங்களில் அது எத்தனை இடங்களை மாநில கட்சிகளிடமிருந்து போட்டியிட கேட்டுப் பெறும் என்பதை பாதிக்குமா எனும் கேள்விக்கு ஆம் என்பதுதான் விடையாக இருக்கும்.
அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல்களில் தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எத்தனை இடங்கள் பெறலாம் என்பதற்கு காங்கிரசின் இந்த தோல்வி பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பீகார் முடிவுகள் வந்த பின்னர் திமுக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில், காங்கிரஸின் தோல்வியை 2021 சட்டமன்ற தேர்தல்களின் போது அறிவாலயம் நினைவில் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறத் தொடங்கினர்.
அவர்களுடைய கோரிக்கையிலும் நியாயமில்லை என கூறமுடியாது உதாரணமாக 2016 சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட 41 இடங்களில் எட்டில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதில் 20 இடங்கள் தி.மு.கவிடம் இருந்திருந்தால், அதில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து இருக்கலாம் என தி.மு.க ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.
தி.மு.கவின் கருத்துப்படி காங்கிரஸின் தோல்விக்கு முக்கிய காரணம் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் என நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் காங்கிரெஸ்ஸை முழுதாக நிராகரித்து விட்டனர் என்பதைத் தான் பல தேர்தல் முடிவுகள் காட்டிய வண்ணம் உள்ளன. உதாரணமாக கடந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி தோற்றது தேனி தொகுதியில் மட்டுமே, அத்தொகுதியில் மதுரை பகுதியை சேர்ந்த யாரையாவது வேட்பாளராக நிறுத்தி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஈவிகேஎஸ் இளங்கோவனை நிறுத்தியதால் தான் தோல்வியடைந்ததாக தி.மு.கவினர் கூறுகிறார்கள். அதிக இடங்கள் ஒதுக்கினாலும் அவர்கள் வேட்பாளர்களில் தங்களுக்கு திருப்தி இல்லை என்றால் மேலிடத்தில் முறையிட வேண்டும் என்று தி.மு.க நினைக்கிறது.
இந்த பிரச்சனையை காங்கிரஸ் கூட மறுக்கவில்லை. அதன் விவசாயத்துறை செயலாளர் ஜி கே முரளி கூறுகையில் பீகாரில் கூட எழுபதில் 45 இடங்களில் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பொருட்படுத்தாமல் வேறு பல காரணங்களுக்காக அவர்களுக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார்.
ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், "வெற்றி, தோல்வியை வைத்து ஒரு கூட்டணியில் காங்கிரஸின் பலத்தை எடை போடக் கூடாது என்றும் நடந்து முடிந்த பீகார் தேர்தல்களில் பல இடங்களில் காங்கிரஸ் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே தோல்வி அடைந்து இருப்பதாகவும் பல இடங்களில் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு காரணமாக இருப்பதாகவும், கூட்டணியில் எண்களை விட கெமிஸ்ட்ரி தான் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். எனவே வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க காங்கிரசிற்கு உரிய மரியாதையைத் தர வேண்டும் என்று கருதுகிறார்.
இதே பாணியில்தான் தி.மு.கவிடம் பேச்சுவார்த்தை நடக்குமானால் கண்டிப்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சினை வரும். தி.மு.க ஆதரவாளர்கள் காங்கிரசுக்கு மறுபடியும் நிறைய இடங்கள் ஒதுக்கினால் அதிருப்தி அடைவார்கள் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.