தமிழகத்தில் பலமான கூட்டணி அமைப்பதில் தீவிரம் - அமித்ஷா நவம்பரில் தமிழக விஜயம்!
தமிழகத்தில் பலமான கூட்டணி அமைப்பதில் தீவிரம் - அமித்ஷா நவம்பரில் தமிழக விஜயம்!
By : Kathir Webdesk
நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தபோது பா.ஜ.க ஹிந்தி பேசும் மாநிலங்கள் மற்றும் குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா உட்பட 10 மாநிலங்களில் மட்டுமே மற்ற கட்சிகளை விட வலிமை பெற்றிருந்தது.
இந்நிலையில் படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் பாஜகவை அரியணை ஏற்றவேண்டும் என பா.ஜ.க திட்டமிட்டது. அதன் முதல் படியாக மகாராஷ்டிராவில் ஏற்கனவே 3 ஆம் இடத்தில் வளர்ச்சி பெற்றிருந்த அந்த கட்சி சிவாசேனா கூட்டணியுடன் தீவிர பிரச்சாரம் செய்து அங்கு ஆட்சியை கைப்பற்றியது.
அங்கு சிவ சேனாவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசையும், பவார் தலைமையிலான தேசீயவாத காங்கிரசையும் மோடியும், அமித்ஷாவும் தங்களது கூர்மையான பிரச்சாரத்தால் குறுகிய காலத்தில் தோற்கடித்து அங்கு தங்கள் ஆட்சியை நிறுவினர்.
அதேபோல 'எட்டாத ஆப்பிள் கனி' என கருதப்பட்ட காஷ்மீரையும் மெகபூபா கட்சியுடன் கூட்டணி வைத்து அங்கு பரூக் அப்துல்லா கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றி அங்கு கூட்டாட்சியை முதன்முதலாக நிறுவியது பா.ஜ.க. ஜம்மு காஷ்மீர் நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 3 தொகுதிகளை கைப்பற்றி புதிய வரலாற்றை எழுதியது. சென்ற ஆண்டு இதே காலக் கட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தலிலும் 81 இடங்களை கைப்பற்றியது வரலாற்றில் முதன்முதலாக கைப்பற்றியது பாஜக.
அதேபோல கிழக்கு இந்திய பகுதிகளில் உள்ள அஸ்ஸாம் முதல் அருணாச்சல் வரை உள்ள அனைத்து ஏழு மாநிலங்களையும் கைப்பற்ற ராஜதந்திர திட்டங்களை மேற்கொண்டது.
இந்தியாவிலேயே சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் அஸ்ஸாமை காங்கிரசாரிடமிருந்து முதலில் கைப்பற்றியது. வட கிழக்கு மாநிலங்களின் முதல் கேட் என வர்ணிக்கப்படும் அஸ்ஸாமை கைப்பற்றியதும் அடுத்து கம்யூனிஸ்டுகளின் 40 ஆண்டு கால கோட்டை என வர்ணிக்கப்பட்ட திரிபுராவை குறுகிய காலத்திலேயே கைப்பற்றியது.
அதற்கடுத்து மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் என ஒவ்வொன்றாக கைப்பற்றியது. அங்கு மிசோரத்தில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. மற்ற அனைத்து இடங்களிலும் பாஜக ஆட்சி அல்லது உள்ளூர் கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி செய்து வருகிறது. இந்த அடுக்கடுக்கான பாஜகவின் வெற்றிகளுக்கு தற்போது உள்துறை அமைச்சராகவுள்ள அம்த்ஷாவின் சாணக்கியத்தனங்கள் தான் கரணம் என பாஜகவினர் பெருமைப்படுகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க தனக்கு சிம்ம சொப்பனமாக திகழும் கேரளாவிலும், தமிழகத்திலும் வலுவாக கால் ஊன்றவும், படிப்படியாக ஆட்சியை பிடிக்கவும் திட்டமிட்டு அதற்கான காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. கேரளாவைப் பொறுத்தவரை பா.ஜ.க கடந்த 6 ஆண்டுகளாகவே அதிக தீவிரம் காட்டி வருகிறது. அங்கு தனித்து நின்று தொகுதிகளை வெல்ல முடியவில்லை என்றாலும் இப்போது அங்கு ஆளும் கம்யூனிஸ்ட், காங்கிரசுக்கு அடுத்த நிலையில் 3-வது இடத்தில் உள்ளது. எனவே அங்கு ஆட்சியை பிடிக்கும் நம்பிக்கையில் உள்ளது.
தென் மாநிலங்களில் ஏற்கனவே கர்நாடகாவை பிடித்துவிட்ட பா.ஜ.க ஆந்திராவை தனது அடுத்த பட்டியலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அது இப்போது தீவிர கவனம் செலுத்தும் மாநிலமாக தமிழகம் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பெயர் தெரியும் நிலையில் அந்த கட்சி இருந்தாலும் இங்குள்ள அரசியல் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அது வலுவாக கால் ஊன்ற திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
அதற்காகவே படித்த இளைஞரான எல்.முருகனை மாநில தலைவராக்கி பல கட்சிகளிலுள்ள பிரமுகர்களை தன்வசம் இழுத்து வருகிறது. பல்வேறு சமுதாயத் தலைவர்கள், பல திரைபலங்களை தன்னுடன் இணைத்துள்ள பாஜக ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்துவதில் இப்போது முனைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வலுப்பெறும் இந்த நடவடிக்கைகளை இனிமேல் உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் கைவசம் எடுத்துக் கொள்வார் என்றும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுதும் குணமடைந்துள்ள அவர் தமிழகம் குறித்து தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அடுத்து பீஹாரில் இம்மாதம் கடைசி முதல் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதன்பின் வரும் ஆண்டில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், கட்சியின் வெற்றியை உறுதி செய்ய, தீவிர பிரசாரத்தில் ஈடுபட ஆர்வமாக உள்ளார்.
அதற்கு முன்னதாக, அடுத்த மாத இறுதியில் தனது உள்துறை அலுவல்கள் காரணமாக சென்னைக்கு அவர் பயணம் வருகிறார் என்றும் அப்போது தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்து, அ.தி.மு.க., தலைவர்களுடன், அவர் பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிலநாட்களுக்கு முன் அமித்ஷா ஒரு பேட்டியில் கூறும்போது 'அ.தி.மு.க., எங்களுக்கு நெருக்கமான கட்சி; ஏற்கனவே இரண்டு முறை, அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்' என்றார். அடுத்து ரஜினிகாந்த் இடம் பேச இன்னும் கால அவகாசங்கள் உள்ளன என்றார். இதிலிருந்து அமித்ஷாவின் தமிழகத்தின் மீதான தீவிர விருப்பத்தை உணரலாம் என கூறபபடுகிறது.