தந்தை லாலுவுக்கு பதிலாக பீகாரில் களம் இறங்கியுள்ள தேஜஸ்வி யாதவின் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கு?
தந்தை லாலுவுக்கு பதிலாக பீகாரில் களம் இறங்கியுள்ள தேஜஸ்வி யாதவின் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கு?
![தந்தை லாலுவுக்கு பதிலாக பீகாரில் களம் இறங்கியுள்ள தேஜஸ்வி யாதவின் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கு? தந்தை லாலுவுக்கு பதிலாக பீகாரில் களம் இறங்கியுள்ள தேஜஸ்வி யாதவின் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கு?](https://kathir.news/static/c1e/client/83509/migrated/228c4ec27a93e2fd0b46b1299316bf12.jpg)
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிரான காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முன்னணி சார்பில் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தள் தலைவர் லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இவருடைய தந்தை லாலுபிரசாத் யாதவ். இவர் ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பீகார் முதலமைச்சர் ஆவார். மேலும் இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய இரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
1990ல் பீகாரின் முதலமைச்சராக பதவியேற்ற லாலு, தீவன ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு பல நூறு கோடியை மோசடி செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டு சிபிஐ நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்தது. இவ்வழக்கில் ரூ60லட்சம் அபராதத்துடன், 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கமும் செய்யப்பட்டார் லாலு பிரசாத். தற்போது ஜார்கண்ட் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருடைய மகன் தேஜஸ்வி யாதவ் அரசியலில் முழுமையாக களமிறக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்ட இவர் ராகோபூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து இராஷ்டிரிய ஜனதா தளம்கட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 30 வயதாகும் இவர் பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் ஆவார். தற்போது இவர் பீகார் மாநில எதிர்கட்சித் தலைவராக உள்ளார். தற்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் தேர்தலில் சூறாவெளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஊரும் , உலகமும் அவரது தந்தையை பற்றி எவ்வளவு பேசினாலும் இன்னும் தன் தந்தையை ஒரு கடவுள் அவதாரமாகவே பார்க்கிறார் தேஜஸ்வி. தனது தந்தை மட்டும் இல்லாவிட்டால் பீகார் இன்னும் மோசமான நிலையை சந்தித்திருக்கும் என்று கூறுகிறார். அவர் பின்னால் பீகார் முழுவதும் யாதவ குல இளைஞர்களின் பெரும்படை இன்னும் அணிவகுத்தே உள்ளது.
அதேபோல பீகாரில் கணிசமான அரசியல் செல்வாக்கு உள்ள இஸ்லாமியர்களிடையேயும் இவருக்கு செல்வாக்குள்ளதை மறுத்துவிட முடியாது. இஸ்லாமியர்கள் பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரங்களில் அதிக அளவில் மக்கள் இவரது கூட்டங்களுக்காக கூடுகிறார்கள். தற்போது அவரது தந்தையைவிட தேஜஸ்விக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும், இந்த தேர்தலில் மிகப்பெரிய பலத்தை தேஜஸ்வி காட்டுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தனது தந்தை தொடர்ந்து நின்று வெற்றி பெறும் ராகோபூர் தொகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு களம் கண்டு அதிக எண்ணிக்கையிலான வாக்கில் வெற்றி பெற்றதால் அதே தொகுதியில் இப்போது மீண்டும் களமிறங்கியுள்ளார்.
தேஜஸ்வி யாதவ், மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனது பிரச்சாரத்தில் பாஜகவையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல், பிஹார் மக்கள் பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வது, தொழில் வாய்ப்புகளை மாநிலத்தில் உருவாக்காதது, ஊழலை தடுக்காதது உள்ளிட்டவைகள் குறித்து நிதிஷ்குமாரை குற்றம் சாட்டி தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடி வருகிறார். இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றாலும், தேஜஸ்வி யாதவுக்கு முன்பை விட அதிக தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பாஜக கூட்டணிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர், மற்றவர்கள் ஊழல் செய்ததாக கூறும் தேஜஸ்வி தனது தந்தையின் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் பற்றியும், ஊழலுக்காக அவர் தண்டிக்கப்பட்டது பற்றியும் ஏன் வாய் திறக்க மறுக்கிறார். அதுகுறித்து அவர் ஒரே மேடையில் என்னுடன் பேசத் தயாரா என்று கிரிராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அவர் இந்த கேள்வி கேட்டு ஒரு மாதம் ஆகியும் தேஜஸ்வி இதுவரை வாய் திறக்கவில்லை என்று பாஜக மற்றும் நிதீஷ் கட்சியினர் கூறுகின்றனர்.