Top
undefined
Begin typing your search above and press return to search.

ஹத்ராஸ் சம்பவத்துக்கு கண்டனம்- யோகிக்கு மொட்டைக் கடுதாசி போட்ட காங்கிரசார்.!

ஹத்ராஸ் சம்பவத்துக்கு கண்டனம்- யோகிக்கு மொட்டைக் கடுதாசி போட்ட காங்கிரசார்.!

ஏந்திழைBy : ஏந்திழை

  |  17 Oct 2020 2:15 AM GMT

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 19 வயது இளம்பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய தமிழக மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கடிதம் அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கே.கே நகரில் உள்ள தபால் நிலையத்தில் இந்த போராட்டம் நடந்தது.


எனினும் போராட்டம் உண்மையான நோக்கத்துடன் தான் செய்யப்பட்டதா என்று சந்தேகம் ஏற்படும் வண்ணம் தபால்தலை ஒட்டாமலும் முகவரி எழுதாமலும் தபால் அட்டைகளை காங்கிரஸார் தபால் பெட்டியில் போட்ட தகவல் வெளியாகி உள்ளது. அஞ்சல் துறை மூலம் அனுப்பப்படும் தபால்களில் எடைக்கு ஏற்ப தபால் தலை ஒட்டப்பட வேண்டியது அவசியம்.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாரோ தபால் தலையும் ஒட்டாமல், முகவரியும் எழுதாமல் கடனுக்கு தபால் பெட்டியில் அட்டைகளைப் போட்டுச் சென்றது உண்மையில் ‌இந்த சம்பவம் மற்றும் இதில் பாதிக்கப்பட்ட பெண் மீது இவர்களுக்கு எந்த அளவு அக்கறை உள்ளது என்பதையே காட்டுகிறது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் தி.மு.கவுடன் சேர்ந்து இந்தித் திணிப்பு நாடகத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ், தனது தொண்டர்களுக்குத் தெரியாத, புரியாத இந்தி மொழியில் இந்த தபால் அட்டைகளை அச்சிட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் முகவரி எழுத வேண்டிய இடத்தில் ஊர் பெயருக்கு பதில் தங்களது பெயரையும், தங்களது பெயருக்கு பதில் ஊரின் பெயரையும் எழுதிய கொடுமையும் நடந்துள்ளது. மகிளா காங்கிரஸ் தலைவர் சுதாவும், எம்.எல்.ஏ விஜயதாரணியும் இணைந்து முன்னின்று நடத்திய இந்தப் போராட்டத்தில், அவர்கள் இருவர் அனுப்பிய தபால்கள் மட்டுமே முறையாக அஞ்சல் தலை ஒட்டப்பட்டு, முகவரி எழுதப்பட்டு, உறையில் இடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலான அட்டைகளில் தபால் தலை ஒட்ட வேண்டிய இடத்தில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் தான் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடுவது போல் போஸ் கொடுப்பதற்கு மட்டுமே வந்தது போல் சிலர் வெற்று தபால் அட்டைகளை அப்படியே உண்டியலில் பணம்‌ போடுவது போல் போட்டுச் சென்றுள்ளனர். ஆக மொத்தம் தபால் ஊழியர்களுக்கு வேண்டாத வெட்டி வேலை வைத்துள்ளனர்‌. தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி என்பது போல், ராகுல், பிரியங்கா உ.பியில் செய்த நாடகத்தைப் பின்பற்றி மீடியாவில் தோன்றுவதற்காக இந்த சம்பவத்தை அரசியலாக்குவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

Next Story