அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் அவதூறு பரப்பி அவரை மாற்ற வேண்டும் என்று குரல்களை எழுப்பி வந்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
அதில், "அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் இதற்கு தகுதியானவர் இல்லையா என்ற கேள்வியை நாம்தான் எழுப்பினோம். அந்தக் கேள்வி இப்போதும் தொக்கி நிற்கிறது.
வந்தவரோ வளைந்து கொடுக்காதவர். அதிகாரத்தின் முன் நெளிந்து கொடுக்காதவர். தமிழகத்தில் பொறியியல் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று முனைந்தவர். பொறுப்பார்களா நம் ஊழல் திலகங்கள். வளைந்து கொடுக்கவில்லை என்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம்" என பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "எவரோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு பேடி எழுதிய மொட்டைக் கடிதாசியின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்துள்ளார்கள். மொட்டையில் முடி வளராததால் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என்று கடை போட்டுக் காத்திருக்கிறார்கள். முறைகேடாக பல்கலைக்கழகத்தில் தங்கியவர்கள், அங்குள்ள வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியவர்களை விசாரித்துவிட்டீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். "உயர்கல்வித் துறை அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டுதான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என்று பாலகுருசாமி தனியார் இதழுக்கு அளித்தப் பேட்டியில் புகார் அளித்திருந்தாரே, அதுகுறித்து விசாரித்துவிட்டீர்களா? உள்ளாட்சித் துறை, மக்கள் நலவாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை என அத்தனை துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என சமூக செயற்பாட்டளர்களும், எதிர்க்கட்சிகளும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே அதை விசாரித்துவிட்டீர்களா?... தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்கள் கடமை. கரை வேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்?
இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள், மதிப்பெண்களை கொடுத்து மாணவர்களை வாங்க நினைக்கிறார்களா? சூரப்பா கொள்கை சார்புகள், அரசியல் நிலைப்பாடுகள் மீது நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ஒருவர் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் கமல்ஹாசனாகிய நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதி மய்யமும் சும்மா இருக்காது" எனவும் சூரப்பாவிற்கு ஆதரவாக கொந்தளித்துள்ளார்.
இதற்கு சூரப்பாவும் "என்னுடைய நேர்மைக்கு மக்கள் நீதிமன்ற தலைவர் கமல்ஹாசன் ஆதரவளித்துள்ளது மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அரசியல் உள்அர்த்தங்களை உணர்ந்து கமல்ஹாசன் பேசியுள்ளது திராவிட கட்சிகள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.