"தி.மு.கவுல இருக்குறவங்க எல்லாம் புத்தரா? காந்தியா?" என ஸ்டாலினுக்கு சவால் விட்ட சி.வி.சண்முகம்.!
"தி.மு.கவுல இருக்குறவங்க எல்லாம் புத்தரா? காந்தியா?" என ஸ்டாலினுக்கு சவால் விட்ட சி.வி.சண்முகம்.!
By : Mohan Raj
தி.மு.க தலைவர் ஸ்டாலின் கருத்துக்களுக்கு தற்பொழுது எதிர் கருத்துக்களை மற்ற கட்சியினர் உடனுக்குடன் வழங்கிவிடுகின்றனர். அதிலும் முன்பெல்லாம் "மரியாதைக்குரிய ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்" என மரியாதை ததும்ப எதிர்வாதங்களை வைத்த மற்ற கட்சியினர், தற்பொழுதெல்லாம் "உங்க கட்சி என்ன ஒழுங்க?" என்கிற ரேஞ்சில் ஸ்டாலினை டீல் செய்ய துவங்கிவிட்டனர்.
அந்த வகையில் "தி.மு.க'வில் இருப்பவர்கள் என்ன புத்தர், காந்தியா?" என தி.மு.க'வின் உண்மை முகத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசியுள்ளார்.
விழுப்புரம் கல் குவாரி உரிமம் விவகாரத்தில்தான் இதுபோன்ற கேள்வியை அமைச்சர் ஸ்டாலினிடம் காட்டமாக கேட்டுள்ளார்.
விழுப்புரம் வானுர் வட்டம், திருவக்கரையில் உள்ள கல் குவாரி உரிமத்தை, அ.தி.மு.க'வின் எம்.எல்.ஏ சக்ரபாணி மகனுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கியுள்ளதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், பொது ஊழியர்கள், தங்களுக்கோ, உறவினர்களுக்கோ, அரசுப் பணிகளை டெண்டர் எடுக்கக் கூடாது. அரசின் குத்தகைகளைப் பெறக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், சக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட, கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த போது, "பொது ஊழியர்களின் உறவினர்கள் சட்டபூர்வமாக விடப்படும் ஏலத்தில் கலந்துகொள்ளக்கூடாது என எந்தச் சட்டத்திலும், எந்த இடத்திலும் சொல்லவில்லை. தி.மு.க'வில் இருப்பவர்கள் புத்தர், காந்தி, இயேசுவா? அவர்கள் யாரும் தொழில் செய்யவில்லையா? குற்றச்சாட்டைச் சொல்வதற்கு முன்பு தன் தவறுகளைப் பார்க்க வேண்டும்" என காட்டமாகவே விமர்சித்தார்.
மேலும் தொடர்ந்த அவர், "குறிப்பிட்ட சட்டப்பேரவை உறுப்பினரின் மகன், முறையாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சட்டபூர்வமான பொது ஏலத்தில் கலந்துகொண்டு ரூ.28 லட்சத்தில் எடுக்கப்பட்ட குவாரியை இரண்டாண்டு காலமாக நடத்தி வருகிறார். இதில், எந்த வீதிமீறலும் இல்லை. அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் காமெடி செய்ய வேண்டாம். தவறு செய்திருந்தால் நான் அமைச்சர் பதிவியில் இருந்து ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்" என ஸ்டாலினுக்கு சவால் விட்டார்.