Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காத காங்கிரஸ் அரசு - கொந்தளித்த தி.மு.க எம்.எல்.ஏ.!

புதுச்சேரி : ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காத காங்கிரஸ் அரசு - கொந்தளித்த தி.மு.க எம்.எல்.ஏ.!

VinithaBy : Vinitha

  |  14 Oct 2020 11:15 AM GMT

புதுச்சேரியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 10 மாதங்களாக சம்பளம் மற்றும் பென்சன் தொகை கிடைக்கவில்லை என்று கடந்த ஒன்றாம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு கூட்டணிக் கட்சியான தி.மு.க ஆதரவு அளித்து வருவது கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



புதுச்சேரியில் ஆசிரியர்கள் 10 மாதங்களாக சம்பளம் மற்றும் பென்சன் தொகை வரவில்லை என்று பல நாட்களாக தர்ணாவில் இருந்து வருகின்றனர். இதனை அறிந்த காங்கிரஸ் கூட்டணி கட்சியிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் தெற்கு மாநில அமைப்பாளருமான சிவா, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு சென்று அவர்களுடன் உரையாடினார்.

புதுச்சேரி முதல்வர், ஆளுநர் மற்றும் அதிகாரிகளால் ஆசிரியர்கள் கடும் துன்பத்தினை சந்தித்து வருகின்றனர் என்றும் பள்ளியில் கணக்கு தரவில்லை என்பதற்காக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆசிரியர்கள் நிம்மதியாகவும் மனநிறைவுடனும் பாடங்களை எடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஓய்வு பெற்ற 450 ஆசிரியர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் "ஓய்வூதியத்தை நம்பியிருக்கும் அவர்கள் எவ்வாறு தங்களது மருத்துவ செலவுகள் உட்பட பிற செலவுகளை கவனிப்பார்கள், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லையா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எப்படி வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருக்கக் கூடாது என்று சிவா எம்.எல்.ஏ முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசை‌ அவர்‌ விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசு இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றால் பிற கட்சிகள் மற்றும் மக்களின் ஆதரவோடு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது புதுச்சேரியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி அதிக தொகுதிகள் தி.மு.க போட்டியிட விரும்புவதாகவும் எனவே தான் வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சியினரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கூறுவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் காங்கிரசுக்கு 25-30 இடங்கள் கிடைத்தாலே பெரிது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி நிகழ்வு இந்த சலசலப்பை அதிகரித்துள்ளது.

Next Story