Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் காங்கிரஸ் அரசு அமைக்கப்படாமல் உள்ள வஃபு போர்டு அமைக்க வலியுறுத்தல்.!

புதுச்சேரி : கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் காங்கிரஸ் அரசு அமைக்கப்படாமல் உள்ள வஃபு போர்டு அமைக்க வலியுறுத்தல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Oct 2020 1:45 PM GMT

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வஃபு போர்டு அமைக்காத ஆளும் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வையாபுரி மணிகண்டன், அசானா மற்றும் பாஸ்கர் ஆகியோர் சட்டமன்ற வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் ஷாஜகான் பேச்சுவார்த்தை நடத்தினார் மேலும் வஃபு போர்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து தர்ணாவில் இருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்று வஃபு போர்டு அமைக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

தர்ணா போராட்டம் மற்றும் மனு அளித்தது தொடர்பாக பேசிய அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன், இந்திய அளவில் முஸ்லீம் சமுதாய மக்களின் நலனிற்காக அரசியல் அமைப்புச் சட்டப்படி அந்தந்த மாநிலங்களில் வஃபு போர்டு அமைக்கும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது.

அந்த அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வக்கு போர்டு அந்த மாநில அரசுகளும் அமைத்து வருகின்றன. அரசால் அமைக்கப்படும் வஃபு போர்டுக்கு 5 ஆண்டுகாலம் செயல்பட உரிமையுண்டு. அந்தவகையில் புதுச்சேரியில் கடைசியாக அமைக்கப்பட்ட வக்கு போர்டின் ஆயுட்காலம் நிறைவடைந்து, 5 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது.

புதுச்சேரியை ஆளும் அரசின் அலட்சிய போக்கால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியில் வஃபு போர்டு அமைக்கப்படவில்லை. இதனால் மாநில முஸ்லீம் மக்களின் நலன்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. வஃபு போர்டுக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஆளும் அரசின் செல்வாக்கால் பல நபர்கள் மூலம் கபளிகரம் செய்யப்பட்டுள்ளது.

அரசின் சக்திவாய்ந்த நபர்கள் முஸ்லீம் வஃபு சொத்துக்களை நீண்ட நாட்கள் வாடகைக்கு என்ற பெயரில் வைத்துக்கொண்டு மிகக்குறைந்த மாத வாடகையை செலுத்தி வருகிறார்கள். வஃபு வாரியம் மூலம் ஏழை எளிய முஸ்லீம் சமுதாய மக்களுக்கு கடந்த காலங்களில் செய்து வந்த உதவிகள், வஃபு போர்டு இல்லாததால் ஏழை முஸ்லீம்களுக்கு உதவிட முடியவில்லை.

புதுச்சேரியில் வஃபு போர்டு இல்லாத நிலையில், அதிமுக சார்பில் பல முறை சட்டமன்றத்தில் வலியுறுத்தியும் அரசு இதில் கவனம் செலுத்தாமல் முஸ்லீம் சமுதாயத்தினரை அலட்சியப்படுத்தி வந்தது. மத்திய அரசுக்கு இது சம்பந்தமாக பல புகார்கள் சென்ற அடிப்படையிலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படியும் வஃபு போர்டு அமைக்கும் பணியை வேறு வழியில்லாமல் அரசு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் வஃபு போர்டு வழக்கறிஞர் பிரிவு உறுப்பினருக்கான தேர்வு 29.8.2020 நடைபெற்று சையது அகமது மொய்தீன் என்ற வழக்கறிஞர் தேர்வு செய்யப்பட்டார்.

போர்டின் உறுப்பினராக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு முஸ்லீம் தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போது கழக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.யூ. அசனா என்பவர் மட்டுமே முஸ்லீம் சமுதாயத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவரை வஃபு போர்டு உறுப்பினராக அங்கீகரித்து அறிவிக்க வேண்டிய அரசு இன்னும் அதையும் செய்யவில்லை.

வஃபு போர்டு ACT 1995 (43) தேதி 22.11.1995ன் 14 Section (1a) படி 5 நபருக்கு குறைவில்லாமல், 7 நபருக்கு மிகையில்லாமல் போர்டு அமைக்க வேண்டும் என உள்ளது. தற்போது நம் மாநிலத்தில் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த பாராளுமன்ற மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் யாரும் இல்லை. அதனால் 5 நபர்கள் உள்ளடங்கிய போர்டு அமைக்க அரசு உரிய வழிவகை செய்ய வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் பிரிவில் இருந்து ஒருவர் என இரண்டு நபர்கள் உள்ள நிலையில் இன்னும் குறைந்தது 3 நபர்கள், அதாவது முத்தவள்ளி ஒருவர், முஸ்லீம் சமுதாயத்தில் உள்ள சமூக சேவையாளர் ஒருவர், முஸ்லீம் சம்பந்தமான அனைத்து சட்டத்திட்டங்களையும் அறிந்த ஸ்காலர்ஷிப் ஒருவர், இணை செயலர் பதவிக்கு மேலேயுள்ள அரசு அதிகாரிகளில் ஒருவர் கொண்ட குழுவினை அரசு அமைக்க வேண்டும். இதில் முத்தவள்ளியில் இருந்து தகுதியான ஒரு நபராக திரு அப்துல் ஜலீல் என்பவரை நீதிமன்றமே அங்கீகரித்துள்ளது.

ஆக சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர், முத்தவள்ளி என 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரண்டு தகுதியான நபர்களை நியமனம் செய்ய வேண்டிய அரசு அதை செய்யாமல் காலம் கடத்தி வருகிறது. அரசியல் ரீதியில் தங்களுக்கு பின்னடைவு வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் ஆளும் அரசானது அதற்கான எந்த பணியையும் இதுவரை மேற்கொள்ளாமல் முஸ்லீம் சமுதாய மக்களை மனரீதியில் பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. பல்வேறு பள்ளிவாசல்களில் 28 முத்தவள்ளிகளின் பதவிக்காலம் முடிந்து நியமிக்கப்படாமல் உள்ளனர். வஃபு போர்டு மட்டுமே முத்தவள்ளிகளை நியமனம் செய்யும்.

எனவே உடனடியாக வஃபு வாரிய நிர்வாகிகளை நியமிக்க வலியுறுத்தி சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது அமைச்சர் ஷாஜகான் வஃபு போர்டு அமைப்பது சம்மந்தமான கோப்பு முதல்வருக்கு அனுப்பியதாக கூறினார். மேலும் மேதகு துணை நிலை ஆளுனர் அவர்களையும் சந்தித்து சட்டப்படி உள்ள வஃபு போர்டு அமைக்க அரசுக்கு உத்தரவிட கேட்டுக்கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story