Top
undefined
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவு மிக்க மாநகரமாக மாறிவரும் மதுரை.!

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவு மிக்க மாநகரமாக மாறிவரும் மதுரை.!

R SubbaiahBy : R Subbaiah

  |  17 Oct 2020 3:59 AM GMT

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவு மிக்க மாநகரமாக மதுரை மாறிவருகிறது. கோவிலை சுற்றி நான்கு வீதிகளிலும் பளபளக்கும் சலவைக்கல் பதிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் பெருக்கத்தாலும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளாலும் பொலிவிழந்து வரும் இந்திய நகரங்களை மீண்டும் நவநாகரீக நகரங்களாக மாற்றும் திட்டம்தான் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதன்மை திட்டமான சீர்மிகு நகர திட்டம் என்று அழைக்கப்படும் "ஸ்மார்ட் சிட்டி" திட்டம் ஆகும்.

இத்திட்டம் சென்ற 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி நகர்ப்புற மேம்பாட்டுத் துறையினரால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 100 சீர்மிகு நகரங்களை நாடு முழுவதும் 5 ஆண்டுகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் சுற்றில் தமிழகத்தில் இருந்து சென்னை மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டன. இரண்டாவது சுற்றில் இந்திய அளவில் 40 நகரங்களைத் தேர்ந்தெடுத்து அதில் தமிழகத்தில் 4 நகரங்கள் தேர்வாகின. அவை மதுரை, சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகியவை ஆகும்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளான கீழ மாசி வீதி, மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி ஆகிய 4 மாசி வீதிகளில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்துதல், 24 மணிநேரமும் கிடைக்கும் வகையில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், மழைநீர் வடிகால் அமைத்தல், தரைவழி மின்வயர் செல்லும் பாதை அமைத்தல் ஆகிய பணிகள் மும்முரமாக நடந்து முடியும் தருவாயில் உள்ளன.

அனைத்து மாசி வீதிகளிலும் சிமெண்ட் சாலை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டு தெற்கு மாசி வீதியில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி, 4 மாரட் வீதிகளிலும் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் எனபப்டும் சலவைக்கல் பதிப்புச் சாலை அனைவரது பார்வையும் கவர்ந்து வருகிறது. மேலும் வைகை ஆற்று கரையில் 8 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல வகை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வைகை ஆற்றின் பனையூர் கால்வாய் ஜீரோ பாயிண்ட் முகப்பு பகுதியில் ஷட்டர் அமைக்கும் பணியும் இந்த திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 72 வார்டுகளுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்றப்பட்ட தெருவிளக்குகளால் மதுரை மாநகராட்சி ஒரு மாதத்திற்குப் மிகப் பெரிய அளவில் மின்சாரத்தைச் சேமித்து வருவதுடன், மின் கட்டணத்தையும் இலட்சக்கணக்கில் சேமித்து வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் " தெருவிளக்குகளுக்காகக் கட்டப்படும் கட்டணத்தில் 22 லட்சத்திற்கும் குறையாமல் தற்போது சேமிக்கப்படுகிறது. மின்சார சேமிப்பில் சமீபத்தில் எடுத்த கணக்கீட்டில் தொடர்ச்சியாக ஐந்து மாதங்களில் ஒரு மாதத்திற்கு 22 முதல் 25 லட்சம் வரை சேமிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்னும் சில இடங்களில் உள்ள விளக்குகளை மாற்றுவதன் மூலம் இது அதிகரிக்கும் என்று நம்புகின்றோம்" என்றனர். இது ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம்தான் சாத்தியமானதாக அவர்கள் தெரிவித்தனர். மத்தியஅரசின் திட்ட வழி காட்டுதல், நிதி உதவியுடன் மாநில அரசுடன் இணைந்து அமல் படுத்தி வரும் இப்பணிகள் மூலம் மதுரை வாழ் மக்களுக்கு பல நவீன வசதிகள் கிடைத்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் எனவும் கூறப்படுகிறது

Next Story