Top
undefined
Begin typing your search above and press return to search.

நீட்தேர்வில் சென்ற ஆண்டைவிட தமிழக மாணவர்கள் 8.87 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றது எப்படி ?

நீட்தேர்வில் சென்ற ஆண்டைவிட தமிழக மாணவர்கள் 8.87 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றது எப்படி ?

R SubbaiahBy : R Subbaiah

  |  17 Oct 2020 7:36 AM GMT

மனித உயிர்கள் விஷயத்தில் மருத்துவர்களின் சேவை 100 சதவீத தரத்துடன் இருக்க வேண்டும், திறமை, சேவை உணர்வு மற்றும் ஆர்வம் உடைய மாணவர்கள் மருத்துவத் தொழிலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு நீட் தேர்வை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2020-21-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.

இதில் நாமக்கல் கிரீன்பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்த திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் பகுதியை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்தார். இவர் இந்திய அளவில் 8-வது இடத்தையும், ஓ.பி.சி. பிரிவில் இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பயிற்சி மையத்தில் படித்த மாணவி மோகனபிரபா 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 52-வது இடத்தையும், தமிழக அளவில் 2-வது இடத்தையும் பிடித்து உள்ளார். நாமக்கல்லை சேர்ந்த இவர் இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் மத்திய அரசின் பாடத்திட்டமுறையை கடைபிடிக்கும் சி.பி.எஸ்.இ பள்ளியில் பயின்றவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி - மகேஸ்வரி தம்பதியின் மூத்த மகன் ஜீவித்குமார் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடமும், இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1823 வது இடமும் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 71,500 பேர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 99,610 மாணவர்கள் தேர்வெழுதியதில் 57,215 பேர் அதாவது 57.44 சதவீதம் பேர் தகுதி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 8.87 சதவீதம் அதிகம்.

இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான காரணங்கள் குறித்து சிலர் கூறுகையில் " மத்திய அரசு நீட் தேர்விலும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி வருகிறது. அது மட்டுமல்லாமல் தாய் மொழியிலும் இந்த தேர்வை எழுதலாம். மேலும் மாநில அரசுகள் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக தனி உள் ஒதுக்கீட்டுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மாநில அரசின் பாடத்திட்ட முறையில் இருந்து 73 சதவீத அளவுக்கு இந்த ஆண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் தவறியவர்களுக்கும் மீண்டும் தேர்வு எழுத தனி தேர்வு நடத்தினர். இதனால் கடந்த ஆண்டைவிட 8.87 சதவீதம் அதிகம் வெற்றி பெற்றுள்ளதாக கூறபபடுகிறது.

Next Story