தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ₹2000 தீபாவளிப் பரிசா?
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ₹2000 தீபாவளிப் பரிசா?

மக்கள் அனைவரும், குறிப்பாக நடுத்தர மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் ஏற்கனவே கொரோனா தொற்றைத் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அன்றாட செலவுகளுக்கே அல்லல்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போனஸ் தொகை வழங்குவதால் பிரச்சினை இல்லை என்ற நிலையில் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் தினக்கூலிகளுக்கும் இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டம் எட்டாக் தனியாகத் தான் தெரிகிறது.
இந்நிலையில் தீபாவளிப் பரிசுத் தொகையாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்ளுக்கும் ₹2000 கொடுக்கலாம் என்று அதிகாரிகள் சிலர் மாநில அரசுக்கு அறிவுரை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் பண்டிகைக் காலங்களில் ரேஷன் கார்டுகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பது வழக்கமாக உள்ளது. பொங்கலுக்கு வருடாவருடம் அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு தீபாவளி பரிசாக ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் ₹2000 ரூபாய் வழங்கலாம் என்ற திட்டம் ஆலோசனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அப்படி வழங்கினால் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் செயலாக தேர்தல் ஆணையம் நினைத்து விடுமோ என்று மாநில அரசு தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்று ஊரடங்கின் போது தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கியது. இது சாமானிய மக்களுக்கு பேருதவியாக இருந்தது என்பதை சுட்டிக் காட்டி தீபாவளிப் பரிசு வழங்குமாறு அரசுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் தீபாவளி பரிசு தொகையாக அறிவிக்கப்படும் ₹2000 ரூபாய் தேர்தல் ஆணையத்தால் குற்றமாக கருதப்படாது என்று அதிகாரிகள் சிலர் மாநில அரசிடம் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்களிடம் போதிய வருவாய் இல்லாத சூழ்நிலையில் இந்த பண்டிகை காலத்தில் அவர்களுக்கு ₹2000 பெரும் உதவியாக இருக்கும் என்றும் பண்டிகையை அவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள் என்றும் பரவலான கருத்து நிலவுகிறது.
எவ்வாறாயினும் ரேஷன் கார்டுகளுக்கு ₹2000 அரசு நிதி அளித்தால் இந்த தீபாவளி பண்டிகையை சாமானிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும். இதனால் கூடிய விரைவில் தமிழக அரசு நல்ல முடிவினை அறிவிக்கும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.